கடந்த வார சனிக்கிழமை அன்று இந்தோனேஷியாவை சுனாமி நிலைகுலைய வைத்தது. இதுவரை சுமார் 281 பேர் பலி வாங்கியிருக்கும் இந்த வலிமையான சுனாமி பற்றிய எவ்வித முன்னறிவிப்புகளும் அரசின் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இவ்வளவு பெரிய அழிவினை ஆராய்ச்சியாளர்களால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. ஏனெனில் வந்தது எப்போதும் போல ஏற்படும் சுனாமி அல்ல. இவை வித்தியாசமானது!!

இந்தோனேஷியாவின் சுந்தா கடல் ஜலசந்தியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தின் காரணமாக இந்த சுனாமியானது ஏற்பட்டிருக்கிறது. இதனால் 11,600 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கிறார்கள். இருப்பதிலேயே மோசமான விளைவுகளைச் சந்தித்திருப்பது ஜாவா தீவில் உள்ள பண்டேக்ளாங் மாவட்டம் தான். இங்கு மட்டும் 207 பேர் இறந்திருக்கிறார்கள். 775 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடித்துச் சிதறிய எரிமலை
இந்த கடல்பகுதியில் இருக்கும் அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் கடலுக்கடியில் நிலச்சரிவு ஏற்பட்டு அடுத்தடுத்து ராட்சத அலைகள் உருவாகி வருகின்றன.
1927 ஆம் ஆண்டுவரை இந்த எரிமலை அமைதியாகத்தான் இருந்திருக்கிறது. கண்ட நகர்தலின் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதும் கண்டத்தட்டுகள் உருகி இந்த எரிமலையை உருவாக்கி இருக்கவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி நடக்கும் நேரத்தில் மிக அபாயகரமான வெடிச்சத்தம் கேட்கும். கடைசியாக 1883 ஆம் ஆண்டு இந்த பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. சுமார் 36,000 பேர் அப்போது இறந்துபோனதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் இந்த வெடிச்சத்தம் ஆஸ்திரேலியா வரை கேட்டதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மர்மத் தீவு
1927 ஆம் ஆண்டில் மறுபடி வெடித்துக் கிளம்பிய இந்த எரிமலையின் ஒரு பகுதி கடலுக்கு மேல்புறத்தில் எழும்பி வந்திருக்கிறது. இப்படி உருவான இந்த எரிமலைத் தீவு அனாக் கிராக்கதோவின் குழந்தை எனப்படுகிறது. இப்படியான எரிமலை வெடிப்பினால் உருவாகும் சுனாமியினை ஓரிரு நிமிடத்திற்கு முன்னால் தான் கணிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தோனேஷியாவில் உள்ள 146 எரிமலைகளில் 76 எரிமலைகள் குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் எந்த நேரத்திலும் எரிமலை வெடிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக சுனாமி ஏற்படவும் மிகுந்த வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அதிக செலவுகள் பிடிக்கும் என்பதாலும் சாத்திய வாய்ப்பு குறைவு என்பதாலும் கடற்கரையை மக்கள் காலி செய்வதைத்தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.