நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளவும்:
மாநில எண்: 1070
மாவட்ட எண்: 1077
புயல் நேரத்தில் பாதுகாப்பு குறிப்புகள்:
சில நாட்களுக்கு போதுமான அளவு உலர்ந்த உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள், மருந்துகள், குளுக்கோஸ், Band aid உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகம் ஆகிவற்றை முன்னதாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுங்கள். புயல், மழை நேரங்களில் கடைகளுக்குச் செல்வதில் அல்லது பொருட்கள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே, வரும் முன் காப்பது நலம். சுகாதாரமான உணவை உண்ணுங்கள்.
2. வீட்டுக்கு தேவையான நீர் சேமிப்பு
மழையின் காரணமாக மின்சாரம் தடைப்படக்கூடும். அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்தை நிறுத்திவிடும். அதனால், மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வைத்துக்கொள்வது நல்லது. குடிநீரை காய்ச்சிப் பருகவும்.
3. மின்சாரத் தடை
பெரிய புயல் என்றால் சில நாட்களுக்கு மின்தடை இருக்குமென்பதால், முன்னரே மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். டார்ச் விளக்குகள், எமர்ஜென்ஸி விளக்குகள், மின்கலங்கள் (Battery) கைக்கெட்டும் தொலைவில் வைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்கு தேவையான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் வீட்டில் இருப்பது முக்கியம்.
4. முடிந்தவரை வெளியே செல்ல வேண்டாம்
புயல் நேரத்தில் பலத்த காற்றோடு பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மக்கள் புயல் கரையைக் கடக்கும் சமயங்களில் வெளியே செல்ல வேண்டாம். பதற்றப்படாமல் கதவு, ஜன்னல்களை நன்றாக மூடி வைத்துவிட்டு வீட்டுக்குள் இருப்பது தான் மிகச்சிறந்தது.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து ‘புயல் கடந்துவிட்டது’ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்.
5. குழந்தைகள் கவனம்
குழந்தைகளை வெளியே சென்று விளையாட விடாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீருக்கு அருகில் குழந்தைகளை நிற்கவே விடாதீர்கள், நீங்களும் நிற்காதீர்கள். ஏனெனில், மின்சார வயர்கள் போன்றவைகள் பற்றி அதிக கவனம் அவசியம். அருகிலுள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு நீங்களோ, குழந்தைகளோ செல்லக்கூடாது. பொதுவாகவே மழையையும், நீரையும் பார்த்து விட்டால் குழந்தைகள் குதூகலமாகி விடுவார்கள். எனவே, எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். நோய்தொற்று பரவாமல் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருப்பதோடு, கிருமிநாசினிகளை தெளிக்கவும்.
6. மழைக்கு ஒதுங்கும் போது கவனம்
அவசரத் தேவைக்காக வெளியில் சென்றுவிட்டு, மழைக்கு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, அருகிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது நல்லதல்ல, அதைத் தவிர்த்து விடுங்கள். அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது பாதுகாப்பான கட்டிடத்திற்கோ செல்லுங்கள்.
7. கார், பைக் பயன்படுத்துவதை தவிருங்கள்
வெளியில் செல்வதற்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். புயலுக்கு முன்பு அவற்றை பத்திரமான இடத்தில் நிறுத்தி வையுங்கள். மிகவும் அவசியமென்று வாகனங்கள் பயன்படுத்த நேர்ந்தால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
8. ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்
2015-ல் வந்த சென்னை வெள்ளத்திற்கு பிறகு நீர்நிலை அருகில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இது எல்லோருக்கும் பொருந்தும். ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வீட்டுப் பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் வைத்து பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.
9. சாகச முயற்சிகள் வேண்டாமே
கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து இளைஞர்கள் செல்ஃபி புகைப்படங்கள், காணொளிகள் எடுப்பது போன்ற சாகச முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். முடிந்தால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அரசுக்கு உதவுங்கள்.
10. வதந்திகளை நம்ப வேண்டாம்
பலரும் மொபைல் போனில் பல ஆண்டுகள் முன்னர் எடுத்த வீடியோக்களை தெரியாமல் அனுப்பி அச்சம் கொள்ளவைப்பார்கள். புயல் மற்றும் வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பி பயம் கொள்ள வேண்டாம். அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அறிவிப்பைக் கேட்ட பிறகு அதற்குத் தகுந்தாற்போல நடந்து கொள்ளுங்கள். இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் TN SMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்
11. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும்
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம். மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும் என்பதால், இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து ‘புயல் கடந்துவிட்டது’ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், படகுகளை இடைவெளி விட்டு கட்டி வைக்கவும்.
இதுவும் கடந்து போகும் என நம்பிக்கையுடன் இருங்கள்!