தென்மேற்கு பருவமழை வடமேற்கு இந்தியாவில் துவங்கிய சில நாட்களிலேயே புயல் ஒன்று உருவாகியுள்ளது. நேற்றுமுன்தினம் அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு வாயு எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்றைத் தரவல்ல இந்தப்புயல் நாளை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை
வழக்கத்தைக் காட்டிலும் சற்று காலதாமதமாக கடந்த சனிக்கிழமை கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சீரான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால் பாபநாசம் அணை ஒரே நாளில் 11 அடி உயா்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஆபத்தில் ஏழு மாவட்டங்கள்
வடதிசை நோக்கி நகரும் இந்த வாயு புயல் குஜராத் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு விரைந்துள்ளன. கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுபோல கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தவர்கள் உடனே திரும்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சுமார் 4 ஆயிரம் மீன் பிடி படகுகள் நேற்று கரை திரும்பின.

அவசர ஆலோசனை
வாயு புயல் கரையைக் கடக்கும் இடமான குஜராத்தில் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புயலை எதிர்கொள்வது குறித்து பாதுகாப்பு ஆலோசனைக்கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து சுமார் 700 நிவாரண முகாம்கள் மற்றும் மருத்துவ உதவிக்குழுக்கள் ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்கும்படி குஜராத் அரசை உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் இருந்து சுமார் 3.5 லட்சம் மக்கள் இன்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். பாதுகாப்பு உதவிகளுக்கு குஜராத் அரசாங்கம் ஒடிசா மாநிலத்தின் உதவியை நாடியிருக்கிறது.
பாதுகாப்பு வீரர்கள்
நாளை குஜராத்தை புயல் தாக்கும் போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 45 படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் 34 படை பிரிவினரும் குஜராத்திற்கு வந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுற்றுலா சென்றிருக்கும் பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற பேருந்து வசதிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் புயல் காரணமாக அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.