வங்கக்கடலில் இந்தவாரத் துவக்கத்தில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை, தீவிர காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. தற்போது அது மேலும் தீவிரமடைந்து புயலாக மாற இருக்கிறது. இந்தப்புயலுக்கு “பெதாய்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப்புயலானது ஆந்திர மாநிலம் காக்கிநாடா – ஓங்கோல் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

பெதாய் புயல்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக பேரிடர் மீட்பு படை வெளியிட்டிருக்கும் புதிய தகவலின்படி இந்தத் தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்குத் தென்கிழக்கே சுமார் 1170 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இந்தப்புயல் கரையைக் கடக்கும்போது 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழை
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் கனமழை இருக்கும் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையானது 15 – 16 தேதிகளில் நீடிக்கும். கடலோரப்பகுதிகளில் காற்றானது இந்தத் தேதிகளில் 45 – 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும்.

கடல் கொந்தளிப்பு
தமிழகத்தின் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டக் கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றம் இருக்கும். கடல் அலைகள் அதிகபட்சமாக 8.1 மீட்டர் வரை மேலெழும்பக் கூடும். மேலும் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்ட கட லோரப் பகுதிகளிலும் அதிகபட்ச மாக 5.8 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும்.