தமிழகத்தில் கடந்த 15 – ஆம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதுவரை புயலையே சந்தித்திராத பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. டெல்டா பகுதியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பதிப்புகளில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பல கால்நடைகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிந்துபோயிருக்கின்றன. இன்று வரை பல கிராமங்களில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு மின்சாரவாரிய உறுப்பினர்கள் முயன்று வருகிறார்கள். இந்நிலையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே தமிழக அரசு பல முக்கிய விடயங்களில் கவனத்தைக் குவித்து சிறப்பாகப் பணியாற்றியது. அந்தந்த மாவட்டஉயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, பேரிடர் மேலாண்மைக் குழுவையும் தயார் நிலையில் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. புயல் மற்றும் கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண நிதியாக 1,000 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட நிவாரணத்திற்காக 200 கோடியை உடனடியாக வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் திரு. பழனிச்சாமி வெளியிட்டுள்ள நிவாரணத் தொகை குறித்த முழுத் தகவல்களைக் கீழே காணலாம்.
- உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- புயலினால் படுகாயமடைந்தோருக்கு ஒரு லட்சமும், காயம் அடைந்தோருக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.
- கனமழையின் காரணமாக 514 பாதுகாப்பு முகாம்களில்தங்கவைக்கப்பட்டுள்ள 2,51,674 பேருக்கு இரண்டு வேட்டி, இரண்டு சேலை மற்றும் குடும்பம் ஒன்றுக்கு 4 லி. மண்ணெண்ணெய் தரப்பட இருக்கிறது.
- புயலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு (முகாம்களில் இல்லாதவர்கள்) ஒரு வேட்டி, சேலை மற்றும் 1 லி. மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படும்.
- முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள படகு, கட்டுமரங்களை இழந்த மீனவர்களுக்கு உடனடி வாழ்வாதார நிவாரணமாக 5000 ரூபாயும், வீட்டுச் செலவிற்கு ருபாய் 3800 – ம் கொடுக்கப்படும்.
- புயல் மற்றும் கனமழையினால் முழுவதும் பதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 10,000 ரூபாயும், குறைந்த சேதத்திற்கு 4,100 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கள் வீடுகளை முழுவதுமாக இழந்த நபர்களுக்கு புதுமனை கட்டிக்கொள்ள தகுந்த நிதியுதவி அளிக்கப்படும்.
- தென்னை மரத்திற்கு நிவாரணமாக 600 ருபாய் + மரத்தினை அகற்ற 500 ருபாய் மொத்தம் சேதமடைந்த ஒரு தென்னைக்கு ருபாய் 1100 வழங்கப்படும்.
- 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் நிவாரணமாக பெறுவர்.
- சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிவாரணமாக 100 % மானியம் வழங்கப்படும். மேலும் மற்ற விவசாயிகளுக்கு 75 % மானியமும் அளிக்கப்படும்.
- நெற்பயிரிட்ட நிலங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13,500 ரூபாயும், மற்ற பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு ருபாய் 13,500 வழங்கப்படும். மறுசாகுபடிக்கு 40 – 50 % மானியம் உண்டு.
- முந்திரி விளைச்சல் நடைபெறும் நிலத்திற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 18,000 ரூபாயும், சாய்ந்துபோன மரங்களை அகற்ற மரம் ஒன்றுக்கு ரூபாய் 500 – ம் வழங்கப்படும். 40 – 50 % மானியமாக மறுசாகுபடிக்காக கொடுக்கப்படும்.
- முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரத்திற்கு – ருபாய் 42,000
- பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரத்திற்கு – ருபாய் 20,000
- முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய படகுக்கு – ருபாய் 85,000
- பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய படகுக்கு – ருபாய் 30,000
- முழுவதும் சேதமடைந்த விசைப் படகுக்கு – 5 லட்சம்
- பகுதி சேதமடைந்த விசைப்படகுக்கு – 3 லட்சம்
- வலைகள் மட்டும் சேதம் அடைந்திருப்பின் ருபாய் 10,000 அளிக்கப்படும். மேலும் எஞ்சினைப் பழுதுபார்க்க 5000 ருபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.