வங்கக்கடலில் உருவான பானி புயல் அதிதீவிரமாக மாறி நாளை ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்க இருக்கிறது. அம்மாநிலத்தின் புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் பானி புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிசாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்காளத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
8 லட்சம் பேர் இடமாற்றம்
பானி புயலின் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால் புரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வாழும் சுமார் 8 லட்சம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 900 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

கடல்சீற்றம் கடுமையாக இருக்கும் என்பதால் கடலோர மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மீனவர்கள் வானிலை மையத்திலிருந்து அடுத்த தகவல் வரும்வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
புரி மாநிலத்திற்குள் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு அம்மாநில அரசு வலியுறுத்தியிருக்கிறது. பானி புயலின் காரணமாக ஒட்டுமொத்த ஒடிசா மாநிலமும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. கனமழையும் இருக்கும் என்பதால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.