நீங்கள் சைவமா? அசைவமா ? அசைவம் என்பது உங்கள் பதிலாய் இருந்தால் இந்த உலகின் பெரும்பான்மையானோரின் உணவுப் பழக்கத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள் தான். பழங்கால மனிதன் காய்கறி, பழங்கள் என அனைத்தையும் ஒரு கட்டு கட்டியிருக்கிறான். மரணம், ஒவ்வாமை ஆகியவை விடாமல் அவனைத் துரத்தியது. முறைப்படுத்தப்பட்ட ஒரு உணவு வகைக்கு மனிதன் வருவதற்குள் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்திருந்தது.

சைவ உணவுப் பழக்கம் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியது என்ற எண்ணம் பின்னாளில் தான் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அசைவத்தில் சைவம் அங்கம் வகிக்கும். ஆனால் சைவம் அப்படியல்ல. இறைச்சி அல்லாத உணவிற்கு மனிதன் மாறுவதற்கு சித்தாந்தமோ, கொள்கைகளோ, உணவுமுறை சார்ந்த தெளிவோ இருக்கவேண்டுமல்லவா? அடுத்தவேளை உணவிற்காக ஓடிக்கொண்டிருந்த மனிதனிடம் சித்தாந்தம் பற்றியெல்லாம் பேச்சை எடுத்தால் முடிந்தது கதை.
கொள்ளுத் தாத்தாக்கள்
ஆதிமனிதன் நிச்சயமாக சைவ உணவுகளைத்தான் உண்டார்கள் எனப் பல ஆராய்ச்சியாளர்கள் சத்தியம் செய்கிறார்கள். விலங்குகளைப் பார்த்து பயந்த நம்மாட்கள் வேட்டையாடக் கற்றுக்கொள்ளும் வரை வெஜிடேரியன்களாகத் தான் காலத்தைக் கழித்தார்கள். ஆயுதங்களின் பயன்பாடு வளர்ச்சி பெற்ற பிறகு நாக்கும் வளர்ந்துவிட்டது. தன்னை விடச் சிறிய உயிரினங்களைக் கபளீகரம் செய்தான் மனிதன்.
சைவத்தின் காலம்
1800 – களின் மத்தியில் சைவ உணவுகளைப் பற்றிய சிந்தனை மேற்குலகில் தீவிரமெடுக்கத் துவங்கியது. ஒருபுறம் விலங்குகளைக் கொல்வது பாவம் என ஜீவகாருண்யவாதிகள் கொடி பிடித்தார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு சைவமே சிறந்தது எனப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே சைவ உணவினைப் பற்றிய ஆராய்ச்சிகள் கிரேக்கத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. அதற்கு அடிகோலியவர் பித்தாகராஸ். யார் என்று தெரிகிறதா? முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் அளவானது அடுத்த இரண்டு ….. ஆமாம் அவர் தான். (கணிதம் பிடிக்காதவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்) பித்தாகராஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தவர் தான் இதனையும் உருவாக்கினார்.

இறைச்சி இல்லாத உணவுவகைகள் தான் சிறந்தது என போதிக்கத் தொடங்கினார் பித்தாகரஸ். சீடர்களும் காய்கறிகளே வாழ்க்கை என்று பின்பற்றத் தொடங்கினார்கள். உலக வரலாற்றில் முதல் டயட் அதுதான் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். பல்லாயிரக்கணக்கானோர் இதனை ஏற்று சைவத்தினைக் கடைப்பிடித்தார்கள்.
பீன்ஸ்க்கும் உயிருண்டு …
பித்தாகரஸின் கொள்கைகளில் கொஞ்சம் வினோதமானது பீன்ஸைப் பற்றிய அவரது கருத்து. ஒரு நாள் பீன்ஸை சமைத்து சீடர் ஒருவர் பரிமாற, கொதித்துப் போய்விட்டார் சைவத்தின் தந்தை. “இது என்ன கொடூரம்?, பீன்ஸ் பாவமில்லையா ? அதைத் தின்பதற்கு எப்படி மனது வருகிறது” என்று கத்திவிட்டார். உங்களைப் போலவே அவரது சீடர்களும் ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்திருக்கிறார்கள். அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் அன்று முதல் அவரது சீடர்கள் பீன்ஸை உற்றுப் பார்க்கக்கூட அனுமதி இல்லை.

பித்தாகரஸின் மறைவிற்குப் பிறகு பலர் பீன்ஸைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். வெகுநாள் விடுமுறையிலிருந்த கசாப்புக் கடைகள் அதன்பின்னால் அகலமாய்த் திறக்கப்பட்டன. அதன்பின்பு இங்கிலாந்தில் சைவ உணவு முறையினை அதிக மக்கள் பின்பற்றியது 19 – ஆம் நூற்றாண்டில் தான். மகாத்மா காந்தி, ஜார்ஜ் பெர்னாட்ஷா, லியோ டால்ஸ்டாய் போன்றோர் சைவ உணவினைப் பின்பற்றுவதை அறிவுறுத்தத் தொடங்கியதும் சைவ உணவின் திடீர் வளர்ச்சிக்கு காரணம். எது எப்படியோ, அவரவர்களுக்குப் பிடித்த உணவினை உண்பது தான் உத்தமம். இல்லையா?