வளர்ந்துவிட்ட இணையத்தின் பல்வேறு வசதிகளால் நாம் அடைந்திருக்கும் நன்மைகளுள் ஒன்று உணவு வழங்கிடும் செயலிகள். வீட்டில் சமைத்து டப்பாவில் போட்டு, தூக்கிச் சுமந்துகொண்டிருந்த காலம் போய் பின்னர் ஹோட்டல்களைத் தேடி அலைந்தனர் மக்கள். தற்போதெல்லாம் ஒரு கிளிக் தான். உங்களுடைய வாசலுக்கே உணவு வந்துவிடும். அந்தளவிற்கு இணைய புரட்சிகள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் ஸ்விக்கி, சொமாடோ, உபெர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா என முன்னணி நிறுவனங்கள் இந்தத்துறையில் கால்பதித்திருக்கின்றன.

முதல் ஐந்து ஆர்டர்களுக்குத் தள்ளுபடி, சிறப்பு சலுகைகள் என நமது பர்ஸை வற்றச்செய்துவிடும் இந்த நிறுவனங்களும் சில நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. இந்தியாவின் முன்னணி உணவு வழங்கும் செயலியான உபெர் ஈட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களது சேவையினை நிறுத்த இருக்கிறது.
துவக்கம்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் உபெர் நிறுவனம் முதலில் வாடகைக்கார் தொழிலை மேற்கொண்டு வந்தது. பல நாடுகளிலும் இதனை விரிவுபடுத்திய உபெர் இரண்டாண்டுகளுக்கு முன் உபெர் ஈட்ஸ் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. துவக்கத்தில் 37 நகரங்களில் தங்களது சேவையினை வழங்கிவந்த உபெர் அதன்பின்னர் விரிவாக்கப் பணிகளில் முனைப்புக்காட்டியது. தற்போது சராசரியாக ஒரு நாளில் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் டெலிவரிகளை உபெர் ஈட்ஸ் மேற்கொள்கிறது.
நஷ்டம்
உபெர் வாடகைக் கார் நிறுவனத்தில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து நிறுவனத்தை மீட்கவே உபெர் ஈட்ஸ் துவங்கப்பட்டது. அத்தோடு தங்களது வாடகைக்கார் நிறுவனத்தோடு போட்டிபோடும் ஓலா நிறுவனம் ஃபுட் பாண்டா நிறுவனத்தை வாங்கியது உபெரை இந்த முடிவு எடுக்க வைத்தது. ஆனால் நடந்தது என்னவோ வேறு. உபெர் நிறுவனம் 180 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாதத்துக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனம் 1.5 கோடி டாலர் முதல் 2 கோடி டாலர் வரை நஷ்டத்தைச் சந்திக்கிறது.

போட்டி
இந்தியாவின் உணவுத்துறையில் காலடி எடுத்துவைக்கும்போதே போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது உபெருக்கு தெரிந்திருக்கவேண்டும். இன்றைய நிலவரப்படி உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்விக்கி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சொமாடோ உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கணிசமான நஷ்டத்தை சமீப காலமாக பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
விற்பனை
கடன்சுமையைக் குறைக்க தனது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அதன் விற்பனை வருமானத்தில் மூன்று மடங்காகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி அதன் மதிப்பு 50 கோடி டாலராகும். இந்த நிறுவனத்தை வாங்க பிரபல உணவு வழங்கி நிறுவனமான ஸ்விக்கி முடிவெடுத்திருக்கிறது.

நிறுவனத்தை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஸ்விக்கி மற்றும் சொமாடோ ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது உபெர் ஈட்ஸ் நிறுவனம். வர்த்தகம் என்றாலே வாங்கி விற்பதுதானே? ஆனால் உபெரின் இந்த யோசனை அதற்குப் பலனை அளிக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.