இந்திய இருசக்கர வாகனத்துறையில் மிக முக்கிய போட்டியாளராக இருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் விற்பனை அதற்கு முந்தய ஆண்டில் இருந்ததை விடக் குறைந்திருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இதே பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் விற்பனையை அதிகரிக்க இந்நிறுவனங்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.

கவலையில் நிறுவனங்கள்
கடந்த டிசம்பர் மாத விற்பனையைப் பொறுத்தவரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை 4,53,985 ஆக இருந்தது. இதே நிறுவனம் 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் 4,72,731 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 4% விற்பனை சரிவாகும். அதேபோல் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த மொத்த பைக்குகளின் எண்ணிக்கை 56,026 ஆகும். இது 2017 ஆம் ஆண்டை விட 14 சதவிகிதம் குறைவு என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
நிறுவனங்களின் நிகர லாபம் குறைவு, சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மற்றும் வாகனக் காப்பீடுகளுக்கான அளவு அதிகரிப்பு போன்றவைகளால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் (Pawan Munjal) காற்று மாசுபாட்டினைத் தடுக்க அரசால் கொண்டுவரப்பட்ட BS-VI திட்டத்தின் காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு நிகழ்ந்த இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு, உலகளாவிய வர்த்தகத்தில் காணப்பட்ட மந்தநிலை ஆகியவற்றினாலும் இந்நிலை உருவாகியதாக விளக்கியிருக்கிறார்.

சாதித்த பஜாஜ்
இந்திய வாகனச்சந்தை இத்தனை சிக்கல்களில் இருந்த கடந்த ஆண்டு பல நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ் மோட்டார் ( TVS Motor ) நிறுவனம் 2,09,906 வாகனங்களை விற்றதன் மூலம் ஒரு சதவிகித வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இருப்பதிலேயே அதிகமாக Bajaj Auto வின் விற்பனை 39% அதிகரித்திருக்கிறது. அடுத்தபடியாக 34 சதவிகித விற்பனை வளர்ச்சியின் காரணமாக இரண்டாம் இடத்தைப் பிடித்திருகிறது Suzuki Motorcycle India நிறுவனம். இந்தியாவின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹோண்டா இந்தியா நிறுவனம் தங்களது கடந்த ஆண்டு விற்பனை பற்றி இதுவரை தகவல்களை வெளியிடவில்லை.
சரிவுகளைக் கண்ட நிறுவனம் இந்த புதிய ஆண்டில் எம்மாதிரியான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது? அவை பலன் தருமா? சென்ற ஆண்டில் வளர்ச்சியில் அசத்திய நிறுவனங்கள் இந்த ஆண்டும் அதனைத் தக்கவைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.