Home அரசியல் & சமூகம் அடுத்த தொழில் புரட்சி... மின்சார பேட்டரி கார்கள்!

அடுத்த தொழில் புரட்சி… மின்சார பேட்டரி கார்கள்!

டாட்டா நிறுவனத்துடன் கூட்டு வைக்கும் Ola எலக்ட்ரிக் . .. இந்தியாவின் கனவுத் திட்டமான “ 2030-ஆம் ஆண்டுக்குள், இந்திய சாலைகளை 30 சதவீத மின்சார வாகனங்கள் ‌கொண்டதாக” மாற்ற Ola நிறுவனம் கைகொடுக்குமா?..

electric-vehicle-1

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று “டாட்டா நிறுவனத்தின் சேர்மேன் ரத்தன் டாடா அவர்கள், எதிர்காலத்தில் சாலை போக்குவரத்தில் முன்னோடியாக திகழப்போகும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி  பிரைவேட் லிமிடெட்- இல்  குறிப்பிடப்படாத பெரும் தொகை ஒன்றை முதலீடு செய்துள்ளதாக செய்தி வெளிவந்தது. தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனமானது வாகன பேட்டரியை சார்ஜ் செய்யும் இடங்கள் (charging station), பேட்டரியை மாற்றிக்கொள்ளும் நிலையங்கள் (battery swapping station) மற்றும் இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது போன்ற எதிர்கால திட்டங்களை கையாள்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் “ மாசற்ற பசுமை இந்தியா” உருவாவதற்கு ஒரு முக்கியமான ஆணிவேராக Ola திகழ உள்ளது. சரி, உலக வல்லாதிக்க நாடுகளுடன் ஒன்றினைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னவென்று பார்க்கலாமா?

இந்தியாவின் மின்வாகன கொள்கைகள்

உலகின் பல நாடுகள் 10 லட்சத்துக்கும்  அதிக விலையுள்ள  உள்ள கார்களை மின்சாரத்தில் இயக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இந்தியாவோ, ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள கார்களை மின்-வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. பொதுவாக பிற நாட்டவர்  வாகனங்களை பொறுத்தமட்டில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். ஆனால் இந்திய நுகர்வோர்கள் பணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருபவர்கள். இந்தியாவின் இத்தகைய முடிவிற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது நிதி ஆயோக்-கின் அறிக்கைப்படி நாட்டில் உள்ள 79 சதவிகித வாகனங்கள் இருசக்கரங்கள் ஆகும். அதே நேரத்தில் போக்குவரத்தை பூர்த்தி செய்பவற்றுள் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள வாகனங்கள்  4 முதல்  12 விழுக்காடாக உள்ளன. நாட்டின் பெரும்பான்மையாக உள்ள இருசக்கர வாகன போக்குவரத்தில் இத்தகைய பசுமையான மாற்றங்களை கொண்டு வருவது உலக அளவில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான பிரம்மாண்ட சந்தையை  உருவாக்கும்.

Tata-Tiago-EV

மாஸ்டர் பிளான்

பொதுவாக சீனா, அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகள் பல, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அதிகபட்சம் 40% வரை மானியம் வழங்குகின்றன. ஆனால் இந்தியா இதற்குமுன் எங்கும் காணாத யோசனை ஒன்றை முன்வைக்கிறது. அதாவது இம்முறை மானியம் மக்களுக்கு மட்டுமல்ல. பசுமைக்கு குந்தகம் விளைவிக்கும் பசுமை வீட்டு வாயுக்களை கட்டுப்படுத்தவும், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் ஆயுள் காலத்தில் மற்றும் செயல்திறனிலும் ஒரு உயர்ந்த பட்ச அளவீடு ஒன்றை இந்தியா முன்வைக்கும். இத்தகைய அளவீடுகளை எட்டிப்பிடிக்கும் அல்லது தாண்டிக் குதிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கும். எனவே அத்தகைய நிறுவனங்களின் வாகனங்களின் விலை மதிப்பு வெகுவாக குறையும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இம்மாபெரும் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக, இன்னும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 15 விழுக்காடு மின்-வாகனங்களை இந்திய சாலைகளில் உலவ விட அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இத்தகைய எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை உருவாக்குவது மற்றும் கொள்முதல் (மூன்று ஆண்டுகளுக்குள்) செய்வது  பற்றிய திட்டமொன்றிற்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவலை வேண்டாம் வாடிக்கையாளர்களே! இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கும் இத்தகைய மானியம் வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில் மின்சாரத்தில் இயங்கும் கால் டாக்ஸி, கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கும் மானியம் உண்டு. இந்த மாபெரும் மாற்றத்திற்காக சார்ஜிங் ஸ்டேஷன்  அமைக்க உலக  நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்திய சந்தையில் உள்நுழைய உள்ளன.

மின் மார்க்கெட்டின் தற்போதய சிக்கல்கள்

மின்சார வாகனங்கள் என்றாலே அதில் வரும் பெரும் சிக்கல்கள் பேட்டரி பேக்கப்பும் மைலேஜும் தான். நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைக்கிறது. அதுவே இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 100 முதல் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகின்றன. பொதுவாக “சிட்டி லிமிட்”எனப்படும் 25 கிலோ மீட்டர்களை சுற்றிவர இத்தகைய பேக்கப் போதுமானது. ஆனால் லாங்- ட்ரைவ் பயணங்கள் மற்றும் அவசர கால பயணங்களைக் கைப்பற்ற நீடித்த பேட்டரி திறனும் , அதன் மேம்படுத்தப்பட்ட ஆயுளும் அவசியம். வளர்ந்த நாடுகளில் உள்ள மிகப் பெரிய கார் நிறுவனங்கள் கூட தங்கள் பேட்டரிகளுக்கு எட்டு வருடம் அல்லது ஒரு லட்சத்து 60,000 கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்குகின்றன. இந்தியா பேன்ற சிக்கனமான நுகர்வோர் கொண்ட நாடுகளுக்கு இதுபோன்ற காரணிகள் கவனிக்கத்தக்கவை.

அதிவேக சார்ஜிங்-கின் சிக்கல்கள்

தற்போது உள்ள நான்கு சக்கர மின்வாகனங்கள்  50 கிலோ வாட் திறனுள்ள பேட்டரிகளைக் கொண்டுள்ளன. இவற்றை வீட்டில் ஒரு இரவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதுவே இருசக்கரமாக இருந்தால் அவற்றின் பேட்டரி 22 kw ஆக இருக்கும். அவற்றை நிரப்ப குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சூப்பர் சார்ஜ் என்ற பெயரில்  அதிக கிலோவாட் திறனில் அடிக்கடி சார்ஜ் செய்வது பேட்டரியில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதோடு அதன் திறனைக் குறைத்து இறுதியில் பேட்டரியின் சோலியையும் முடித்துவிடும்.

பேட்டரி-தான் அடுத்த தொழிற்புரட்சி

ஆயுள் முடிந்த பேட்டரிகளையும் ஆயுள் முடிந்த மின்சார வாகனங்களையும் மறுசுழற்சி செய்யமுடியும். ஆம், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலங்களில் மீது உலக நாடுகளின் கவனம் இருக்கும்பட்சத்தில், 2025-ஆம் ஆண்டு வாக்கில் பேட்டரி தயாரிப்பு மற்றும் மறுசுழற்சி தான் முக்கிய தொழிற்சாலையாக இருக்கும் என்று “hyperloop” -ன் தந்தை Elon Musk தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக மைலேஜ் தரக்கூடிய மின்சார வாகனங்களில் ஒன்றான டெஸ்லா நிறுவனத்தின் gigafactory battery factory தொழிற்சாலையை  நவேடாவில் நிறுவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது மட்டும் இல்லாட்டினா பிரச்சினையே இல்ல.

லித்தியம்-அயன் பேட்டரி தான் தற்போது வரை உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேட்டரியாகும். அதில் கேத்தோட் (+ve எலக்ட்ரோடு) ராடில் பயன்படும் முக்கிய மூலம் கோபால்ட் ஆகும். பேட்டரி வெப்பமடையாமல் இருப்பதற்கும் அவை நீடித்து உழைப்பதற்க்கும் இதுவே காரணகர்த்தாவாகும். எலக்ட்ரிக் கார்களின் ராஜாவான டெஸ்லாவின் பேட்டரி சப்ளையரான Panasonic , “தங்கள் பேட்டரி தயாரிப்புகளில்  ஏற்கனவே கோபால்டின் அளவை குறிப்பிடும்படியான அளவில் குறைத்துள்ளதாகவும், அதனை பூஜ்ஜியம் அளவில் குறைப்பதே எங்கள் நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளது. ஏனெனில் பேட்டரி மறுசுழற்சி செய்வது என்பது பெருவாரியான வேதியியல் செயல்முறைகளை கொண்டது. எனவேதான் பூரண மறுசுழற்சி என்பது தற்போது வரை இயலாத காரியமாக உள்ளது. ஆயினும் வருங்காலத்தில் இவை நிச்சயம் சாத்தியமே என்கின்றனர் வல்லுநர்கள்.

கோபால்ட் என்னும் பூதம்

நிக்கலையும் காப்பரையும் தோண்டும்போது இலவசமாக (by product) கிடைப்பது இந்த கோபால்ட். உலகின் 60 சதவிகித கோபால்ட் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை உள்ள காங்கோவில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உண்மையிலேயே நமக்கு தேவைதானா பேட்டரி வாகனங்கள்?

நிச்சயமாக. வளர்ந்த நாடுகளான UK, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரும்பங்கு மின்சாரம் புதுப்பிக்ககூடிய ஆற்றல் மூலங்களில் இருந்தே பெறப்படுகிறது. இந்தியாவிலோ ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 55 விழுக்காடு, நிலக்கரியை சார்ந்தே இருக்கிறது. நீர் மின் உற்பத்தி வெறும் 13 சதவிகிதம், காற்று வழி மின்சாரம் மற்றும் சூரியசக்தி மின்சாரம் ஆகியன 21 சதவிகித பங்குகளையும் வகிக்கின்றன. எனவே மாசுபட்ட 20 நகரங்களில்14 நகரங்களை கொண்ட இந்தியாவிற்கு இத்தகைய அவசர மாற்றம் அவசியமே ஆகும். மேலும், காற்று மாசுபாட்டை குறைக்க எத்தனால் கலந்த பெட்ரேலை விநியோகிக்கவும், BS(VI) எரிபொருளை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியும் (ஏப்ரல் 20 க்குள்) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ‌என்றாலும் பொதுமக்களின் பங்களிப்பும் இங்கே அவசியமாகும்.

- Advertisment -

Must Read

- Advertisment -