புறா பந்தயம் உலகம் முழுவதும் பரவலாக நடத்தப்படுகிறது. மிக அதிக தூரம் கடக்கும் புறாக்களுக்கு மவுசு அதிகம். அதில் சூப்பர் ஸ்டாரான அர்மாண்டோ என்னும் புறாதான் இத்தனை விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தைச் சேர்ந்த இந்த அர்மாண்டோ மிக அதிக தூரம் பறக்கும் வலிமை கொண்டது. புறாவை ஏலத்தில் விடும் பிரபல தளமான பிபாவில் நடந்த ஏலத்தில் தான் அர்மாண்டோ’ விற்கப்பட்டிருக்கிறது.

முந்தய சாதனை
இந்த புறா ஏலத்தில் விற்கப்படுவதற்கு முன்னதாக ஒரு புறா அதிகபட்சமாக 376 ஆயிரம் யூரோவுக்கு விற்கப்பட்டிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த ஏலத்தில் அர்மாண்டோவை வாங்க சீனர்களிடையே கடும்போட்டி நிலவியதாக ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐந்து வயதாகும் அர்மாண்டோ ஏற்கனவே அப்பா ஆகிவிட்டது. தற்போது ஓய்வுக்காலத்தில் இருக்கிறதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

சாதனை
ஏலத்தை நடத்திய நிக்கோலஸ்,” இப்படியொரு விலைக்கு புறா விற்பனையாகும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அதிக பட்சம் 4-5 லட்ச யூரோ விலை போகும் என நினைத்தோம். ஒருவேளை ஆறு லட்ச யூரோ விலை போனால் நன்றாக இருக்குமே என கனவு கண்டோம். ஆனால் ஏலத்தில் திடீரென ஒரு போட்டி ஏற்பட்டது ஒரே ஒரு மணி நேரத்தில் 5.32 லட்சம் யூரோவிலிருந்து 1.25 மில்லியன் யூரோவுக்கு விலையை ஏற்றிவிட்டனர் சீனர்கள். பொதுவாக ஒரு பந்தய புறாவுக்கு 2,500 யூரோ கிடைப்பதுதான் வழக்கம்” என்றார்.

சாம்பியன்
2018 ஏஸ் புறா சாம்பியன்ஷிப், 2019 புறா ஒலிம்பியாட் மற்றும் தி ஆங்குலோமி என மூன்றிலும் சாம்பியன் பட்டம் வென்று, தான் சாதாரண பந்தயப்புறா அல்ல என நிரூபித்தது அர்மாண்டோ. புறா பந்தய வரலாற்றிலேயே அர்மாண்டோ அதிசிறந்த பறவை. அதன் சாதனைகளை முறியடிப்பது அத்தனை எளிதல்ல என்கிறார்கள் பந்தயர்கள்.