பொதுவாய் ஆபரணங்களில் பதிக்கப்படும் வைரங்கள் வெண்மையாய், ஒளியினைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால் எல்லா வைரங்களும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. நீலம், மஞ்சள், கருப்பு, பிங்க் எனப் பல நிறங்களில் வைரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் பிங்க் நிற வைரம் மிக அபூர்வமாய் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.
நேற்று சுவிட்சர்லாத்தில் உள்ள ஜெனீவாவில் ஆபரணங்களுக்கான ஏலம் ஒன்று நடந்தது. அதில் அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் நிற வைரம் 360 கோடிக்கு விற்கப்பட்டது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிங்க் வைரம்
இயற்கையான வைரம் வெண்மை நிறத்தினை மட்டுமே கொண்டிருக்கும். மற்றவையெல்லாம் வேதிவினையின் காரணமாக பல நிறங்களில் மிளிரும் தன்மையைப் பெற்றிருக்கும். ஆனால் பிங்க் நிற வைரம் உண்மையில் கொஞ்சம் வித்தியாசமானது. கார்பன் அணு நான்கு இணைதிறன்களைக் கொண்டிருக்கும் ஓர் அணு. கார்பன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று அதிக அழுத்தத்தில் இணையும்போது வைரங்கள் உருவாகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் வழக்கமான அழுத்தத்தை விட மிக அதிக அழுத்தத்தில் உருவாகும் வைரங்களே பிங்க் நிற வைரங்கள்.
சந்தையில் இந்த வகை வைரங்களுக்கு எப்போதும் போட்டி இருந்துகொண்டே இருக்கிறது. நேற்றைய ஏலத்தில் விற்பனைக்கு வந்த வைரமும் இப்படிப்பட்ட ஒன்றுதான். பிங்க் லெகஸி எனப் பெயரிடப்பட்ட இந்த வைரம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 – வது நிமிடத்திலேயே அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரால் வாங்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்பனையான பிங்க் வைரங்களிலேயே மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வைரம் இதுதான்.
10 லட்சத்தில் ஒரு வைரம் மட்டுமே இத்தனை தெளிவான வண்ணத்துடன் கிடைக்கும்.
அப்படி என்ன இருக்கிறது இந்த வைரத்தில் ?
வைரத்தினை அவற்றின் நிறம், ஒளியினை எதிரொளிக்கும் திறன், விலை ஆகியவற்றின் அடிப்படையில் Fancy Light, Fancy to Fancy Intense, Fancy Vivid, Fancy Dark மற்றும் Fancy Deep என வகைப்படுத்தலாம். இதில் Fancy Vivid வகை தான் இருப்பதிலேயே மிக உயர்ந்த ரக வைரம் ஆகும். பிங்க் லெகஸி Fancy Vivid வகையினைச் சேர்ந்த வைரம்.

பிங்க் நிற வைரங்களில் அடுத்து முக்கியமாக கவனிக்கப்படுவது அதன் வண்ணம். வைரத்தின் மீதுள்ள எல்லாப் பட்டைகளில் இருந்து பார்க்கும்போதும் அதன் வண்ணம் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும். அழுத்தத்தின் காரணமாக வைரத்தின் சில முனைகளில் வண்ணம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். தற்போது விற்பனையாகியிருக்கும் வைரத்தின் முக்கிய அம்சமே அதன் வண்ணம் தான். 10 லட்சத்தில் ஒரு வைரம் மட்டுமே இத்தனை தெளிவான வண்ணத்துடன் கிடைக்கும். அதுதான் இவ்வளவு விலைக்கும் காரணம்.