தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறையின் சார்பில் மத்திய ஜவுளி அமைச்சத்தின் நிதியுதவியில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தேசிய கைத்தறி கண்காட்சியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு ஓ எஸ் மணியன் அவர்கள் நேற்று திறந்து வைத்தார். (15-12-2018, சனிக்கிழமை). புத்தாண்டு மற்றும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்துத் துணிகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சி வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.
பிரம்மாண்ட கண்காட்சி
இந்த வருடம் மொத்தம் 42 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தமிழ்நாடு மட்டுமல்லாது பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், குஜராத், உத்திரப் பிரதேசம் மற்றும் ஏனைய பிற இந்திய மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் சார்பிலும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் புகழ் பெற்ற காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், சேலம் ராசிபுரம் பட்டு சேலைகள், ஈரோடு ஜமுக்காளம், போர்வைகள், மெத்தை விரிப்புகள் ஆகியவை அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவையாக உள்ளன.
மேலும் பரமக்குடி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை, சின்னாளப்பட்டி பகுதி சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், ரெடிமேட் சட்டைகள், சிறிய மெத்தைகள், வேட்டி, கைலி, துண்டு, தலையணை உறை, திரைச் சீலை, கால் மிதிகள் உள்பட அனைத்து விதமான துணி வகைகளும் கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது.
இலவசம்
பெண்கள் விரும்பி அணியும் பட்டு சேலையின் ஜரிகையை (வெள்ளி = 38 – 40 சதவீதம், தங்கம் 0.50 சதவீதம், செம்பு 35 .50 சதவீதம்) பரிசோதித்து அதன் தரத்தினை உறுதி செய்யும் இயந்திரம் தமிழக அரசின் ஜரிகை நிறுவனத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் இதை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெசவாளர்கள் பயன்படுத்தும் கைத்தறி இயந்திரம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகள் ஆர்வத்துடனும் வியப்புடனும் அது இயக்கப்படும் முறையை பார்வையிட்டுச் செல்கிறார்கள். பார்வையாளர்களுக்காக சிற்றுண்டி உணவகமும் கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பரிசு
மக்களிடம் கண்காட்சியை விளம்பரப்படுத்தும் விதமாக தேசிய கைத்தறி கண்காட்சி பற்றிய சிறந்த கருத்தினை கோ-ஆப்டெக்ஸ் ன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அதைப் பகிருபவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் – ன் சார்பில் பிரத்யேக பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கைத்தறி நெசவையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நெசவாளர்கள் மேம்படுவதற்கும், தரமான துணிகளை வாங்குவதற்கும் இந்த கண்காட்சியினை கைத்தறி ஆர்வலர்கள், பெண்கள், பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கண்காட்சி நடைபெறும் இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, சென்னை.
நாள்: 15 டிசம்பர் – 30 டிசம்பர்
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.
வாலாஜா சாலையில் பிரம்மாண்டமாக, கம்பீரமாக அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கிற்கு இதுவரை சென்றிராதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்னும் ஒரு பத்து நாளைக்கு திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டையை மறந்துட்டு இங்கே வாங்க!! லட்சக்கணக்கான நெசவாளர்களின் முன்னேற்றத்தில் நீங்களும் பங்குபெறுங்கள்.