ஜப்பானைப் பொறுத்தவரை திமிங்கிலத்தை உணவிற்காக வேட்டையாடுவது பழங்காலந்தொட்டே இருந்துவந்திருக்கிறது. சொல்லப்போனால் அவர்களது பண்பாட்டின் ஒரு அங்கமாகவே இதனை ஜப்பானியர்கள் பார்க்கின்றனர். வரலாற்றில் வெகுகாலம் இப்படி திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுவந்த ஜப்பானியர்களின் எண்ணெய் தேவைக்கும் இது வடிகாலாக அமைந்தது. ஆனால் மத்திய கிழக்கில் எண்ணெய் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியவுடன் உணவுக்காக மட்டும் திமிங்கில வேட்டையை மேற்கொண்டார்கள் ஜப்பானியர்கள்.

தடை
ஜப்பான் மட்டுமல்லாது வேறு சில நாடுகளும் திமிங்கிலத்தை வேட்டையாடுதலை தீவிரப்படுத்தவே குறிபிட்ட சில திமிங்கில இனங்கள் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. இதனைத்தடுக்க உருவாக்கப்பட்டதே சர்வதேச திமிங்கில ஆணையம் (International Whaling Commission). திமிங்கிலங்களை ஆய்விற்காக இல்லாமல் வணிக ரீதியில் வேட்டையாடுவதை இந்த அமைப்பு வலியுறுத்தியது. 1946 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டமைப்பில் ஜப்பான் இணைந்தது 1988 ல் தான். ஆனாலும் திருட்டுத்தனமாக ஜப்பான் திமிங்கிலங்களை வேட்டையாடிக்கொண்டு தான் இருந்தது. அதற்கு ஆய்வு என்ற பெயரும் சூட்டப்பட்டதால் இந்த அவலம் வெளியே தெரியாமல் இருந்தது.

வருடத்திற்கு 277
கடந்த வருடம் சர்வதேச திமிங்கில ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து வணிக ரீதியிலான வேட்டையை அந்நாடு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஜப்பானிய அரசு கடல் எல்லைக்குள் (சுமார் 370 கிலோமீட்டர்) வணிக ரீதியில் திமிங்கிலம் பிடித்துக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. இதனால் உள்ளூர் திமிங்கில வேட்டைக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தடை நீக்கப்பட்ட முதல் நாளே அங்கு ஐந்து திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. சென்ற வருடம் மட்டும் ஆய்வுக்கு என சொல்லி ஜப்பான் கொன்ற திமிங்கிலங்கள் மட்டும் 322. இப்போது தடையும் இல்லை என்பதால் ஜப்பான் மேலும் அதிகப்படியான திமிங்கிலங்களை வேட்டையாடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஜப்பானியர்களைப் பொறுத்தவரை இது தங்களது பண்பாட்டின் ஒரு பகுதி அதனை நாங்கள் விட்டுகொடுக்க தயாரில்லை என்கிறார்கள்.