இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் எவ்வளவு தெரியுமா ?

0
89

உலகிலேயே மோசமான வங்கி அமைப்புகளைக் கொண்ட இரண்டாவது நாடு இந்தியா என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டில் இருக்கும் வாராக் கடன்கள், பிரச்னைக்குரிய கடன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.

ஒரு வங்கியின் முதல் அடிப்படைப் பணியே, தேவையானவர்களுக்குக் கடன் கொடுத்து அதை வட்டியோடு ஒழுங்காக வசூலிப்பது தான். 100 ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்றால், அதில் எவ்வளவு ரூபாய் வாராக் கடனாக, பிரச்னைக்குரிய கடன்களாக எழுதி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் இதைக் கணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய வங்கிகளைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியதில்லை.

எவ்வளவு கடன் பாக்கி?

ஒட்டு மொத்தமாக இந்திய வங்கிகள், 210 பில்லியன் டாலர்களை (14,70,000 கோடி ரூபாய்) வாராக் கடன்கள் அல்லது பிரச்னைக்குரிய கடன்களாகத் தங்களுடைய பேலன்ஸ் ஷீட்களில் குறித்து வைத்திருக்கின்றன.

தற்போது மத்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகளை, மீட்கக் கூடிய நிலையில் உள்ள 3.6 லட்சம் கோடி ரூபாயை முதலில் வசூலிக்கவோ, மறுசீரமைப்புச் செய்யவோ அறிவுறுத்தி இருக்கிறது. 2018 – 19 ஆம் ஆண்டு இந்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கும் 21 லட்சம் கோடி வருவாயில் இந்த 3.6 லட்சம் கோடி ரூபாய், சுமாராக 16 சதவிகிதம். இந்தத் தொகை இருந்தால் நம் பட்ஜெட் பற்றாக் குறையே பெரும் அளவில் குறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் என்ன பிரச்சனை?

இந்த வாராக்கடன்களை வசூலிக்க பல தொழில் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டி வரும், அல்லது வேறு நிறுவனங்களிடம் இந்த நிறுவனத்தை விற்று இருக்கும் கடனை வசூலிக்க வேண்டி இருக்கும். அப்படியும் இல்லை என்றால் ஓரளவுக்கு நல்ல தொழில் என்னும் பட்சத்தில் கடன் வாங்கியவர்களே தங்கள் நிறுவனத்தை வேறு நிறுவனத்தோடு இணைத்துக் கொண்டோ அல்லது வேறு ஒரு நல்ல நிறுவனத்தை கையகப்படுத்தியோ, கடனைத் திருப்பி அடைக்க வேண்டும்.

இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல்

இணைத்தல் (Merging) என்றால் ஒரு நிறுவனத்தோடு மற்றொரு நிறுவனத்தை இணைப்பது. கையகப்படுத்துதல் (Acquisition ) என்றால் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தைக் கையகப்படுத்துவது. அவ்வளவு தான்.

இந்தியாவில் கடந்த 2013-ம் ஆண்டும் வெறும் 35 பில்லியன் டாலருக்கும் குறைவான இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல்களே நடந்தன. ஆனால், இந்த 2018-ல் இதுவரை 110 பில்லியன் டாலருக்கு மேல் இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல் நடந்திருக்கின்றன.

இனியும் இந்த நிலை மேல் நோக்கியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதலை உறுதிப்படுத்தும் ஒரு முக்கியமான விஷயம் இந்திய வங்கிகளிடம், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை தான். மத்திய ரிசர்வ் வங்கியும், தனக்குக்கீழ் உள்ள அரசு வங்கிகளிடம் கடனைக் கறாராக வசூலிக்க அல்லது புதிய Insolvency and Bankruptcy Code-ன் கீழ் கடன்களை மறுசீரமைப்புச் செய்ய வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

சமீபத்திய கடன் குறைப்புக்கள்

  • அனில் அம்பானி தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை விற்று 47,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்கத் திட்டமிட்டு இருப்பது,
  • முகேஷ் அம்பானி தனது ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் (East West Bipeline) நிறுவனத்தையே விற்று சுமார் 14,000 கோடி ரூபாய் கடன்களை அடைக்க திட்டமிட்டு இருப்பது,
  • ஆதித்யா பிர்லா நிறுவனம் தன் ரீட்டெயில் அவுட் லெட்களான மோர் ஃபார் யூ (More For You)-வை  அமேஸானுக்கு (Amazon) விற்று 4,200 கோடி கடன் அடைக்க திட்டமிட்டு இருப்பது, என்று பட்டியல் பெருகிக் கொண்டே செல்கின்றது.

என்ன சொல்கிறார்கள் தொழில் அதிபர்கள் ?

“இந்தியாவில் வாங்கிய கடனை திரும்ப வசூலிப்பதில் அரசு காட்டி வரும் தீவிரம் பாராட்டுக்குரியது. அதோடு எங்களுக்கும் வட்டிச் செலவீனங்களை சமாளிப்பது சிரமமாகவே உள்ளன. எனவே, என்னுடைய அடுத்த கவனம் இப்படி பிரச்சனைக்குரிய கடன்களை தீர்ப்பதில் தான் ” என்கிறார் குமார மங்களம் பிர்லா.

“வரும் 2020-ல் இருந்தாவது எங்கள் அனில் த்ருபாய் அம்பானி குழும நிறுவனங்கள் கடன் இல்லாத சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தன்னுடைய நிறுவனத்தின் Annual General Meeting என்றழைக்கப்படும் ஆண்டு இறுதிப் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறினார் அனில் அம்பானி.

இந்தியாவில் இவர்களைப் போன்ற பெரிய ஜாம்பவான்களுக்கே இந்த நிலை என்றால் நேற்று இன்று தொழில் செய்யத் தொடங்கும் நபர்களின் நிலை எப்படி இருக்கும்.அது சரி. இந்தியா இரண்டாம் இடம் என்றால் முதல் இடத்தில் எந்த நாடு என்று யோசிக்கிறீர்களா? இத்தாலி தான் உலகின் மோசமான வங்கி அமைப்பைக் கொண்ட முதல் நாடு.