பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs) கீழ் இயங்கும் இந்தியக் காம்பிடிஷன் கமிஷன் (The Competition Commission of India) , அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இது நிகழும் பட்சத்தில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில், சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளும்.

அமெரிக்காவின் தற்போதைய வரிச்சட்டங்களின் படி, சீனப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனால், அமெரிக்காவில் சீனப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்கர்களின் பார்வையை இந்தியப் பொருட்களின் மேல் திரும்பச் செய்திருக்கிறது. 1500-3000 cc வரையிலான கார்கள், ராணுவ விமானங்களின் உதிரி பாகங்கள், பம்புகள், வால்வுகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் முக்கியப் பொருட்கள் ஆகும்.
சீனாவிற்குப் போட்டியாக மாறியிருக்கும் இந்தியா, வரும் காலங்களில் ஆடைகள், கைபேசிகள், பொம்மைகள் மற்றும் காலணிகள் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்துவது வளர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகமாக்கும் என அந்த கமிஷன் தெரிவித்துள்ளது.

மின் சாதனப் பொருட்கள், இயந்திர உதிரி பாகங்கள் மற்றும் கனரக வாகன பாகங்கள் முதலியவை அமெரிக்காவின் முக்கிய இறக்குமதிப் பொருட்களாக உள்ளது. இவற்றையெல்லாம் வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. எனவே இத்துறைகளில் இந்தியாவும் கவனம் செலுத்த வேண்டுமெனக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ன் புதிய திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள, அமெரிக்கப் பெருநிறுவனங்கள் இந்தியாவை நோக்கி தங்களின் வியாபாரக் கைகளை நீட்டத் துவங்கியுள்ளன. ஏற்கனவே அமேசான் (Amazon)மற்றும் வால்மார்ட்(Walmart) ஆகியவை இந்தியாவில் கால் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கண்டத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் அடுத்தடுத்து நிற்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா, சீனாவுடனான தனது ஏற்றுமதி உறவை மேம்படுத்த நேரம் வந்துவிட்டது எனத் தெளிவு படுத்தியிருக்கிறது. மேலும், அந்நாட்டிலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான நிதித் தேவையை இது குறைக்கும் எனவும் கணித்துள்ளனர். நம் நோக்கம் ஒன்று தான். முன்னேற வேண்டும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தாலென்ன, சீனாவிற்குச் செய்தாலென்ன. இதுதான் கமிஷன் சொல்ல வரும் செய்தி.
ஆசியக் கண்டத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் அடுத்தடுத்து நிற்கின்றன. இந்தியா தனது ஏற்றுமதி பலத்தை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும். எந்தெந்த இந்தியப் பொருட்கள் அமெரிக்காவில் பிரபலமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.