ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி இந்தியா முழுவதும் சுமார் 2.38 லட்சம் ATM இயந்திரங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் பாதியளவு இயந்திரங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட இருப்பதாக அகில இந்திய ஏ.டி.எம் தயாரிப்பு குழுமம் (CATMI) அறிவித்துள்ளது. பழைய இயந்திரங்களில் பராமரிப்பு செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவு உயர்ந்துள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட இருக்கும் பெரும்பாலான இயந்திரங்கள் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.

எதற்காக ?
இந்தியா முழுவதும் உள்ள 1.13 லட்சம் ATM இயந்திரங்கள் மூடப்பட இருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அப்பகுதிகளில் இருந்த இயந்திரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனைப் பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியை விட செலவினங்கள் அதிகரித்து இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மென்பொருள் நிறுவுதல் மற்றும் பழுதடைந்த வன்பொருள் பாகங்களைச் சரி செய்ய ஆகும் செலவு கடந்த இரண்டாண்டுகளில் கடும் உயர்வினைச் சந்தித்துள்ளது. மேலும் இயந்திரங்களில் பணத்தினை நிரப்பவும், புது பணத்தின் அளவிற்கு ஏற்ற மாறுதல்களைச் செய்ய முடியாத அளவிற்கு அவை சேதமடைந்துள்ளன. இந்த நிலைக்குக் காரணம் குறுகிய காலத்திற்குள் அதிகப்படியான பயன்பாட்டினை இயந்திரங்கள் சந்தித்ததே ஆகும்.
யாருக்கு பாதிப்பு அதிகம் ?
நீக்கப்பட இருக்கும் 1.13 லட்சம் இயந்திரங்களில் எத்தனை இன்றும் மக்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன? என்ற விபரங்கள் எதனையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. எனில் கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளை அந்தந்த பகுதியிலிருக்கும் வங்கிகளின் மூலமே பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுமேயானால் சிறு/குறு மற்றும் குடிசைத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் மக்களிடம் பணப்புழக்கம் குறைவது பொருளாதாரச் சிக்கல்களை தருவிக்கும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரை தொழில்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகும். இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்தோ, ரிசர்வ் வங்கியிடம் இருந்தோ இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதற்கான மாற்று வழிகளை கொண்டுவராவிடில் இந்திய வர்த்தகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பது மட்டும் உண்மை.