ஒவ்வொரு ஊருக்கும் சில தனித்தன்மையான பொருட்கள் பிரபல்யமாக இருக்கும். உதாரணமாக திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்திற்கு மாம்பழம், காஞ்சிபுரத்திற்குப் பட்டு. இப்படி பாரம்பரிய முறைப்படி, வேறெங்கும் கிடைக்காத சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்து தான் இந்த புவிசார் குறியீடு. இதன்மூலம் பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தினை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

இந்த புவிசார் குறியீட்டின் மூலம் பொருட்களின் தரத்தினையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களின் பொருட்களைத் தடை செய்யவும் பொதுமக்கள் அதனால் பாதிப்படையாமல் காக்கவும் முடியும்.
சட்டம்
இந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. தமிழகத்தில் ஏற்கனவே பத்தமடைப் பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, மதுரை மல்லி உள்ளிட்ட ஆறு பொருட்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கி சிறப்பித்தது அரசு. கடைசியாக இந்த மதிப்பைப் பெற்ற தமிழகப்பொருள் ஈரோடு மஞ்சள் ஆகும்.
ஈரோடு மஞ்சள்
இந்திய அளவில் பல பிரதேசங்களில் மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும் மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புகழ்பெற்றவையாக இருக்கின்றன. இந்தவகை மஞ்சளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடும் அளிக்கப்பட்டுவிட்டது. இதேபோல் இந்தியா முழுவதும் அதிகம் வாங்கப்படும் ஈரோட்டு மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த கனவு நிறைவேறியிருக்கிறது. ஈரோட்டில் விளையும் மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இதன் காரணமாக நிறம், சுவை போன்ற தனித்தன்மைகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கும் சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.