ப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பின்னி பன்சல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் நடத்திய விசாரணையின் முடிவில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ப்ளிப்கார்ட்
நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட்டை, சச்சின் பன்சல் (Sachin Bansal) மற்றும் பின்னி பன்சல் (Binny Bansal) ஆகியோர் 2008 – ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கினார்கள்.
ப்ளிப்கார்ட் வெறும் 4 இலட்சம் முதலீட்டில் இரண்டு கம்ப்யூட்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதலில் புத்தகங்களை மட்டும் தான் இணையத்தில் விற்பனை செய்து வந்தது. ஆனால், இப்போது அங்கு கிடைக்காத பொருட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சச்சின் பன்சல் மற்றும் பின்னி பன்சல் இருவரும் IIT-டெல்லியில் படித்தவர்கள். அமேசானில் ஒன்றாகப் பணிபுரிந்து வந்தவர்கள். ப்ளிப்கார்ட்டின் அபார வளர்ச்சியால், செப்டம்பர் 2015 – இல், அதன் இரண்டு நிறுவனர்களும் 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் (Forbes) இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் 86-வது இடத்தைப் பிடித்தனர்.
வால்மார்ட் விவகாரம்
இந்நிலையில் தான், இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் (Walmart) 16 பில்லியன் டாலர் கொடுத்து பிளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்கியது. அதைத் தொடர்ந்து ப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சல் அந்நிறுவனத்தை விட்டு விலகினார்.
தொடர்ந்து ப்ளிப்கார்ட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக பின்னி பன்சல் இயங்கி வந்தார். இந்நிலையில், பின்னி பன்சல் மீது முறைகேடுக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் அவர் மீது உட்கட்ட விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் முடிவில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கா விட்டாலும், பல்வேறு விவகாரங்களில் பின்னி பன்சல் தவறான முடிவுகள் எடுத்ததாகத் தெரிய வந்துள்ளதாம். அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தரப்பில் இவ்வாறாகக் காரணங்கள் சொல்லப் பட்டாலும், ப்ளிப்கார்ட், வால்மார்ட்டோடு முழுமையாக இணைந்து பணியாற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தீபாவளித் தள்ளுபடி விற்பனையான ‘பிக் பில்லியன் டே’ – விலும் அமேசான் நிறுவனத்தின் போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறியது ப்ளிப்கார்ட். இந்நிலையில் தான் பின்னி பன்சல் தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று பின்னி பன்சல் கூறியதாகவும் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.