‘இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் & கோ…’ இந்த விளம்பரத்தை தமிழ் டிவி சேனல்களில் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். இந்த நிறுவனம் உருவான கதை தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள அகத்தீஸ்வரம் என்ற கிராமத்தில் 1950ஆம் ஆண்டில் எச்.வசந்த்குமார் பிறந்தார். பெரிய அளவில் பொருளாதார பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த வசந்த்குமாரால் தந்தையின் உழைப்பால் பட்ட படிப்பை வரை படிக்க முடிந்தது. பட்ட மேற்படிப்பு படிக்க பல வேலைகளை செய்து கொண்டே அதன் மூலம் வரும் வருமானத்தில் படிக்க துவங்கினார் வசந்த்குமார்.

வேலை
படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி சென்னை சென்ற வசந்த்குமாருக்கு வேலை கிடைக்கவில்லை. பசி பட்டினியுடன் நாட்களை கடத்தினார். ஆனால், அவரது விடா முயற்சியின் பலனாக, விஜிபி லிமிடெடில் வேலைக்கு சேர்ந்தார்.
அந்நிறுவனத்தில் கடிகாரங்களை துடைக்கும் வேலை தான். 8 ஆண்டுகளில் அயராத உழைப்பால் படிப்படியாக முன்னேறிய அவருக்கு கடையின் பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது.
நடிப்பு
நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த வசந்த்குமார் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் “வாஞ்சி நாதன் ஸ்டேஜ்” என்ற நாடக குழுவை ஆரம்பித்து பல நாடங்களை அரங்கேற்றினார்.
ராஜினாமா
தொழிலாளியாக குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்ற பிறகு, இனி யாரிடமும் வேலை செய்ய போவதில்லை என்று தீர்மானித்து வேலையை ராஜினாமா செய்தார்.
வேலையை ராஜினாமா செய்ததால், வசித்து வந்த சொகுசு அறையை காலி செய்து ஆற்றோர குடிசைக்கு இடம் பெயர்ந்தார். அவ்வேளைகளில், வசந்த்குமார் ஒருவேளை உணவுக்கே பாடுபட வேண்டி இருந்தது. ஆனால், வாழ்வில் ஜெய்க்க வேண்டும் என்ற பிடிவாதம் மட்டும் குறையவில்லை.
தொழில்
உழைப்பை நம்பி இருந்த வசந்த்குமாருக்கு, அவரது நண்பர் ஒருவர் ஆறு மாதத்திற்கு பயன்படுத்திக் கொள்ள கடை ஒன்றைத் தந்தார். பலரும் இந்த கடை ராசி இல்லாத கடை என்று அவரை தடுக்க நினைத்துள்ளனர். ஆனால், வசந்த்குமார் தனது முடிவில் விடாபிடியாக இருந்தார்.
அவ்வாறு 16.07.1978ல் வசந்த் & கோ உருவாகியது. அவரது கடையில் சீட்டு கட்டும் முறையை அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு நபர் 22 ரூபாய்க்கு முதல் சீட்டை ஆரம்பித்துள்ளார். அவ்வாறு தொடங்கிய பயணம் இன்று பல இடங்களில் பல்கி பெருகியுள்ளது.
தற்போது அவரது கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வித்தியாசமான தவணை முறைகளும் உள்ளன. முதலில் நாற்காலி விற்பனையை செய்துவந்தார். 1978 காலத்தில் மாத தவணையில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் திட்டத்தை தொடங்கியது வசந்த் & கோ தான். இந்த தவணை முறை பின்னாளில் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இவரது கவனம் நடுத்தர குடும்பங்களை நோக்கியே இருந்தது. அதுவே தற்போது வெற்றியாகவும் இருக்கிறது. அதாவது அவரது நிறுவனத்தில் 1000 கோடிக்கு அதிகமான வர்த்தகம் நடக்கும் அளவில் பெரிய நிறுவனமாக நிலைத்து நிற்கிறது.

“வெற்றிப்படிக்கட்டு” என்ற சுயசரிதை புத்தகத்தை மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். இந்த புத்தகங்களை Marinabooks தளத்தில் வாங்கலாம். வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கினார் வசந்தகுமார்.
அரசியல்
வசந்தகுமார் குடும்பத்தினர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பதால், அவருக்கு அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. இவரது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த குமரி அனந்தன் அவர்கள். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு இவர் சித்தப்பா.
2006 மற்றும் 2016ஆம் ஆண்டு நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.
2019ல் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், நாடாளுமன்ற தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28.08.2020ல் காலமானார். கொரோனா பாதிப்புக்கு பலியான முதல் எம்.பி இவராவார் என்பது கெடுவாய்ப்பானது.
இவரைப் பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்து மிகவும் பொருத்தமானது. “நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார்” என்கிறார் கமல்ஹாசன்.