உலக அளவில் குளிர்பான விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்திராநூயி, அப்பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பெப்சி நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது, பெப்சியின் தலைவராக உள்ள ரேமன் லகார்டா, புதிய செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட உள்ளார்.
நூயி தலைமை வகித்த காலத்தில் தான், நிறுவனத்தின் ஆண்டு நிகர வருவாய் மதிப்பு 5.5% உயர்ந்தது. 79.4 பில்லியன் டாலர்களை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக பிரித்துக் கொடுத்த போதும், நிறுவனத்தின் சென்ற ஆண்டின் நிகர வருவாய் 63.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இத்தகைய பொருளாதார ரீதியான பெரும் வெற்றியைச் சாத்தியமாக்க, பல புதுமையான யுக்திகளைக் கையாண்டார் இந்திரா நூயி.

சிறந்தவை மட்டுமே
நூயி எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தயாரிக்க விரும்பினார். அதன் பயனாக 1998 -ம் ஆண்டு ட்ராபிக்கேனா (Tropicana) நிறுவனத்தையும், 2000-ம் ஆண்டு கொய்க்கர் ஓட்ஸ் (Quaker Oats) நிறுவனத்தையும் பெப்சிகோ கையகப்படுத்தியது. ஆனால், ஒரு பெரும் சவால் நூயிக்குக் காத்திருந்தது. சோடா மற்றும் சிற்றுண்டிகள் மீதான ஆர்வம் வளர்ந்த நாடுகளில் குறைந்து கொண்டே வந்தது. மாற்றி யோசித்தார் நூயி. பெப்சிகோவின் பண்டங்கள் மற்றும் பானங்கள் ஆரோக்கியத்திற்கானவையாக மாற்றம் பெறத் தொடங்கின.
ஒபிஸிட்டி விகிதத்தைக் குறைப்போம் என்ற உறுதிமொழியோடு களமிறங்கிய பெப்சிகோ, சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் சோடா புட்டிகளின் அளவுகளைக் குறைத்தது. பண்டங்களில் உப்புகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அளவுகளைக் குறைத்து டயட் ப்ராண்ட் (Diet Brand) என சந்தைப்படுத்தியது. சர்க்கரை இல்லாத குளிர்பானங்கள், செயற்கை ரசாயனங்கள் அற்ற பண்டங்கள் என இறங்கி அடித்தது நூயி தலைமையிலான பெப்சிகோ.
இந்த ‘ஒரே இலக்கை நோக்கி செயல்படும் யுத்தி’ மற்றும் நுகர்வோரின் பழக்கவழக்கங்களை அணுகும் முறை ஆகியவற்றால், கேவிட்டா நிறுவனம் (Kevita, a probiotic drink maker) போன்ற பல ஆரோக்கிய உணவு ப்ராண்டுகளைக் கையகப்படுத்தினார் நூயி.

சென்ற மே மாதம், பழங்கள் மற்றும் காய்கறிகளில் சிற்றுண்டி தயாரிக்கும் நிறுவனமான பேரே ஸ்னாக்ஸ் (Bare Snacks) நிறுவனம், பெப்சிகோவால் கையகப்படுத்தப்பட்டது. நூயி செயல்படுத்திய இந்த ஆரோக்கிய சிற்றுண்டி யுக்தி, 2017 – ல் நிறுவனத்தின் 50% விற்பனைக்குக் காரணமாக அமைந்தது. இது 2006-ல் 38% ஆக இருந்தது.
லே பிராண்டின் அசுர வளர்ச்சி
ஆம், நீங்கள் நினைக்கும் அதே லேஸ் சிப்ஸ் ப்ராண்ட் தான். ஃப்ரிடோ லே (Frito Lay) என்றழைக்கப்படும் அதுவும் பெப்சிகோவின் தயாரிப்புகளில் ஒன்று. ஆரோக்கிய பண்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின் பானங்களின் மீதான பெப்சிகோவின் கவனம் குறையத் தொடங்கியது. அதன் பயனாக, லே எனும் பிராண்ட் மட்டும் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தில் 46% பங்களிக்கிறது. பெப்சிகோ விற்பனையில் அதன் பங்கு 25%. டொரிட்டோஸ் (Doritos), லேஸ் (Lays) மற்றும் ஸ்மார்ட் ஃபுட் (Smart Food) போன்ற ப்ராண்டுகளின் உதவியுடன் தான், பெப்சிகோ இன்று சிற்றுண்டிகளின் சந்தையில் ஏகோபித்த தலைவனாக விளங்குகிறது. உண்மையில், ஃப்ரிடோ லே வெகு விரைவாக பெப்சிகோவின் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாறி விட்டது.
உலகளாவிய விரிவாக்கம்
நூயி எப்போதும் அவரது முன்னுரிமையை நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்திற்கு அளித்தார். அவரது தலைமையில் நிறுவனம், சந்தையை விரிவுப்படுத்தி, விற்பனையை அதிகரிக்க முழுவீச்சாக செயல்பட்டது. குறிப்பாக அவர்கள், ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற மத்தியத் தர, வளர்ந்து வரும் பிராந்தியங்களில் கவனம் செலுத்தினர். 2017-ல் பெப்சிகோவின் நிகர வருவாயில் 21% ஆசியா, வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மூலம் கிடைத்துள்ளது.
இந்திரா நூயியின் சொந்த நாடான இந்தியாவில், பெப்சிகோ வலுவாகக் காலூன்றியது. 2020-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெப்சிகோ முதலீடு செய்யும் என அந்நிறுவனம் 2013-ல் அறிவித்தது.
நிர்வாகத் திறன்
2014-ம் ஆண்டு நெல்சன் பெல்ட்ஸ் (Nelson Peltz) என்ற முதலீட்டாளர் , பெப்சிகோ நிறுவனம் சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானத் தயாரிப்புகளைத் தனித்தனியாக வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் நடத்த வேண்டும் என்று முயற்சி எடுத்தார். அதை சமயோசிதமாக முறியடித்தார் நூயி. பெப்சி மற்றும் ஃபிரிடோ லே நிறுவனங்களை ஒரே குடையின் கீழ் நிர்வகிப்பது போட்டிகளைச் சமாளிப்பதற்கு இன்றியமையாதது என்று வாதிட்டார்.
இந்தப் பொது வாக்குவாதம் 2016-ல் பெல்ட்ஸ், தனது 2 பில்லியன் டாலர் பங்குகளை விற்றதும் முடிவுக்கு வந்தது. தற்போது, இந்திரா நூயி பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டதும் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.