2019 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. சென்ற வருடம் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெசாஸ். அவருடைய சொத்து மதிப்பு 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் 96.5 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இருக்கும் வாரன் பபெட்டின் சொத்து மதிப்பு 86.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லீசன் 7 வது இடத்திலும், பேஸ்புக் தலைவர் மார்க் ஜக்கர்பர்க் 8 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பட்டியலில் இந்தியர்கள்
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 106 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு உலக பணக்காரர் பட்டியலில் 19 ஆம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஆறு இடங்கள் முன்னேறி தற்போது 13 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 2018 ல் 40.1 பில்லியனாக இருந்த சொத்துமதிப்பு தற்போது 50 பில்லியனாக உயர்ந்திருக்கிறது.

விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36 வது இடத்திலும், HCL இணை நிறுவனர் ஷிவ் நாடார் 82 ஆம் இடத்திலும், ஆர்ச்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91 ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.
அதேபோல் பட்டியலில் ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா (122), அதானி குழும தலைவர் கவுதம் அதானி (167), பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் (244), பதஞ்சலி இணை நிறுவனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா (365), பிரமல் அதிபர் அஜய் பிரமல் (436), இன்போசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி (962), முகேஷ் அம்பானியின் தம்பியும், ஆர்காம் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி (1349)ஆகியோரது பெயரும் பட்டியலில் இருக்கிறது.