நீ என்ன பெரிய பில்கேட்சா என நீங்கள் கேள்விப்பட்டிருக்காமல் தமிழகத்தில் இருந்திருக்கவே முடியாது. பணக்காரர் என்றால் நம்மில் பலருக்கு முதலில் ஞாபகம் வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் பெயர் தான். ஆனால் அவரையே பின்னுக்குத்தள்ளி அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ் கடந்த ஆண்டில் ஆச்சர்யப்படுத்தினார். இருப்பினும் தற்போது இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு சறுக்கியிருக்கிறார் பில்கேட்ஸ். அப்படியென்றால் முதல் இரண்டு இடங்கள் யாருக்கு?

பிரபல அமெரிக்க இதழான ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. அதில் முன்னைப்போலவே ஜெப் பெசொஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருப்பவர் பிரான்சை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட்(Bernard Arnault). பிரான்சின் ரூபியாக்ஸ் பகுதியில் பிறந்த இவர்தான் தற்போதைக்கு ஐரோப்பாவிலேயே மிக அதிக பணம் படைத்தவர். சொகுசு மற்றும் அலங்காரப்பொருள் தயாரிப்பு நிறுவனமான LVMH இன் நிறுவனர் இவர்தான். இந்த நிறுவனத்தை 1990 ஆம் ஆண்டு அர்னால்ட் துவங்கியிருக்கிறார். ஆனாலும் தற்போதுதான் முதன்முறையாக பில்கேட்சை முந்தியிருகிறார்.

ப்ளூம்பெர்க் அளித்திருக்கும் தகவலின்படி அர்னால்டின் சொத்து மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். பில்கேட்ஸ் 107 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடு இரண்டாம் இடத்திலும், ஜெப் பெசொஸ் 125 பில்லியன் அமெரிக்க டாலர்களோடு முதலிடத்திலும் இருக்கிறார்கள்.
முதல் பத்து இடங்களில் இருப்பவர்கள்
1.ஜெப் பெசொஸ் (Jeff Bezos) – $124B
2.பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) – $108B
3.பில் கேட்ஸ் (Bill Gates) – $107B
4.வாரன் பஃபெட் (Warren Buffett) – $81.9B
5.மார்க் சக்கர்பா்க்(Mark Zuckerberg) – $78.7B
6.அமான்கியோ ஒர்டெகா(Amancio Ortega) – $66.2B
7.லாரி எல்லிசன்(Larry Ellison) – $61.3B
8.கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim) – $57.2B
9.பிரான்க்காய்ஸ் பட்டனகோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers) – $56.4B
10.லாரி பேஜ் (Larry Page) – $56.3B