உலகின் அதிவேக வளர்ச்சி பெரும் நகரங்களின் பட்டியல்: முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ள இந்திய நகரங்கள்

0
259
India_Growth_GDP
Credit: Money Control

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை சார்பில் உலகின் அதிவேக வளர்ச்சி பெரும் நகரங்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ரிச்சர்ட் ஹோல்ட் (Richard Holt) என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு சில இன்ப அதிர்ச்சி தரும் முடிவுகளை முன்வைக்கிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் முதல் பத்து இடங்களை இந்திய நகரங்கள் பிடித்திருக்கின்றன. அவற்றுள் தமிழக நகரங்களான திருப்பூர், திருச்சி, சென்னை ஆகியவை முறையே 6, 8, மற்றும் 9 ஆம் இடத்தைப் பிடித்திருக்கின்றன.

2019 – 2035 ஆம் ஆண்டுவரை இந்த நகரங்கள் நீடித்த வளர்ச்சியினைச் சந்திக்கும் என்கிறது ஆய்வு. முதலிடத்தில் இடம்பிடித்துள்ள சூரத் நகரமானது, அங்கே புகழ்பெற்றிருக்கும் வைர வியாபாரத்தால் கணிசமான வளர்ச்சியை குஜராத் நகரத்திற்கு அளிக்கும் என்கிறார் ஹோல்ட்.

Indian_top_cities
Credit: Oxford Economics

2035 – ஆம் ஆண்டில் இந்த நகரங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, சந்தைப்படுத்துதலுக்கான வசதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆசிய நகரங்களைப் பொறுத்தவரை அவற்றின் வளர்ச்சியானது வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகரங்களின் வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 2027 க்கு பின்னர் உலகலாவிய வர்த்தகப் போட்டியில் இந்தியா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். குறிப்பாகத் தென்சீன நகரங்களான குவாங்க்சொவ் மற்றும் (Guangzhou) ஷென்சென் (Shenzhen) ஆகிய நகரங்கள் இந்த டாப் 10 வரிசையில் இடம்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

chennai
Credit: Livemint

ஆப்பிரிக்காவின் அதிவேக வளர்ச்சி பெறும் நகரமாக தான்சானியாவில் உள்ள டார் இஸ் சலாம் (Dar es Salaam) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஆர்மேனிய நாட்டின் தலைநகரான எரெவான் (Yerevan) சிறந்த வளர்ச்சி பெறும் நகரமாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. சான் ஜோஸ் நகரம் வட அமெரிக்காவில் உள்ள நகரங்களோடு ஒப்பிடும்போது வளர்ச்சி அதிகம் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

உற்பத்தியில் கால் பதிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள், பெருகி வரும் நகரமயமாக்கல், மனித வள ஆற்றல், போன்ற காரணிகளால் வர்த்தகம் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் தொழில்துறை வளர்ச்சி மக்களின் வளர்ச்சியின் மூலம் சாத்தியமாகும் பட்சத்தில் தமிழகத்தின் எதிர்காலம் பொற்காலமாக இருக்கும் என நம்பலாம்.