உலக த(க)ண்ணீர் தினமின்று …
மணல், ஆறுகளின் நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் திறன் படைத்த ஒன்று.
நிலத்தடி நீர்மட்டம் என்பது, ஆற்று மணலைப் பொறுத்தது. மணலை எடுக்க, எடுக்க நீர்பிடிப்பு திறன் இல்லாமல் போய்விடும். நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், கடல் நீர் புகும்; விவசாயம் அழியும்.
தமிழகத்தில் மணல் தான் இன்று மிக அதிகமாக சுரண்டப்படும் இயற்கை வளம். மணல் அள்ளுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவை பின்பற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே!
அரசு வகுத்துள்ள விதிகள்
ஆறுகளில் மணல் அள்ள அரசு வகுத்துள்ள விதிகளை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்.
- ஆறுகளில் அதிகபட்சமாக 3 அடி (1 மீ) ஆழத்திற்கு தான் மண் அள்ள வேண்டும்.
- எந்திரங்களைப் (பொக்லைன்) பயன்படுத்தக் கூடாது.
- குடிநீர் கிணறு இருக்கும் இடங்களில் 1 கி.மீ. தொலைவுக்கு அப்பால் தான் மணல் அள்ள வேண்டும்.
- தரைப்பாலம், மேம்பாலம் இருக்கும் இடங்களில் 100 அடி தூரத்துக்கு மணல் அள்ளக்கூடாது.
- கரையில் இருந்து 60 அடி தள்ளியே அள்ள வேண்டும்.
- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அள்ள வேண்டும்.
நிலத்தடி நீர் வளத்திற்கு ஆதாரமான ஆற்றுமணல் அள்ளும் போது, மேற்சொன்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? இல்லை என்பதே உண்மை!
மணல் – சில உண்மைகள்
மணல் என்பது உடனுக்குடன் உருவாகிவிடும் வளம் அல்ல.
பருவகால வேறுபாடு காரணமாக, பாறைகள் குளிர்காலங்களில் இறுக்கமாகி, வெயில் காலங்களில் விரிவடைந்து இலகுவாகி நொறுங்குகின்றன. இவை மழைக்காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தினால் உருட்டப்பட்டு, உடைந்து சிறுசிறு துகள்களாகி மணலாக மாற்றம் பெருகின்றன.
1 கனஅடி மணல் உருவாக, குறைந்த பட்சம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.
1 கன மீ. (35.314 அடி) ஆற்றுமணல் உருவாக 400 ஆண்டுகள் ஆகும்.
உடலோடு ஒன்றிணைந்த உயிராய், மணலோடு ஒன்றிணைந்ததே நிலத்தடி நீர்.
மணல் இல்லையெனில் நீரில்லை.
நீர் இல்லையெனில் விவசாயமில்லை.
விவசாயம் இல்லையெனில் விவசாயி இல்லை.
விவசாயி இல்லையெனில் நமக்கெல்லாம் சோறில்லை என்பதே உண்மை.
வளங்களை எப்போது வணிக மற்றும் வருமான நோக்கோடு பார்க்க தொடங்கினோமோ, அக்கணமே தொடங்கிவிட்டது அவைகளின் அழிவு.
அரசு செய்வது என்ன?
மணலையும் நீரையும் வணிகமாக்கி வருமானம் ஈட்டுவது மிகப் பெரிய ஆபத்தையே உண்டாக்கும்.
இந்த செய்தியை காணுங்கள்.
அரசாய் இருந்தாலும் சரி…
தனியாராய் இருந்தாலும் சரி…
மணல் குவாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் வருமானம் பெறலாம் இன்று …
ஆனால், நாளை …?
எங்கே செல்கிறதோ தமிழ்நாட்டின், தமிழர்களின் எதிர்காலம்?