கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டுக்குள் $5 ட்ரில்லியனாக உயர்த்தப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார மண்டலமாக மாற்றப் போகும் இந்நோக்கத்தின் ஒரு அங்கமாக இந்த RCEP (Regional Comprehensive Economic Partnership) யைக் கருதலாம். 2011 ஆம் ஆண்டு ஆசியன் (ASEAN) நாடுகளுக்கு இடையே நடந்த மாநாட்டில் (இந்தோனேசியா) அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த RCEP. அதன்படி ஆசியன் நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளுக்கும் FTA (Free Trade Agreement Partner) எனப்படும் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளுக்கும் இடையேயான வரியில்லா அல்லது குறைந்த வரி வர்த்தகமே இந்த RCEP.

RCEP: ஒரு சுருக்கமான வரலாறு:
2011-ல் நடந்த ஆசியன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானம் ஆறு ஆண்டுகளாக நடந்த பேச்சு வார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 26 கட்டமாக நடந்த பேச்சு வார்த்தைகளின் முடிவில் மொத்தம் 18 வகை ஒப்பந்தங்களில் 7 ஒப்பந்தங்கள் முடிவுசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒப்பந்தங்களையும் இறுதிசெய்து இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் சட்டவரையறை கொண்டுவர ஆசியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, ஜூன் 23 ஆம் தேதி மலேசிய பிரதமர் மஹாதிர் மொகம்மது “இந்தியாவை விட்டுவிட்டு இந்த ஒப்பந்தத்தை தொடர விரும்புவதாக” தெரிவித்திருந்தார். ஏனெனில் இந்தியாவின் பொறுமையான நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நவம்பருக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வது என்பது சந்தேகமே!. இந்தியாவை தவிர்த்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் இவ்வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு சில கவலைகள் இருக்கின்றன. சீனாவும் கால நெருக்கடியைக் கருதி, மூன்று நாடுகளுக்கும் (IND, NZ, AUS) ஒப்பந்தத்தில் இடம் ஒதுக்கிவிட்டு மற்ற நாடுகள் கையெழுத்திடலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் இந்தியாவின் பெரிய பொருளாதார வாய்ப்புகளைக் கருதி இந்தியாவை விட்டுவிட்டு ஒப்பந்தத்தை தொடருவதற்கு சில நாடுகள் தயாராக இல்லை. சரி, அத்தனை நாடுகளைக் காக்கவைக்க வேண்டிய அவசியம் என்ன? இம்மாபெரும் வர்த்தகத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மற்றும் அதனால் ஏற்ப்படபோகும் பிரச்சனைகள் என்ன? கிடைக்கபோகும் நன்மைகள்தான் என்ன?
அமெரிக்க – சீன வர்த்தகப்போர் போன்றவற்றால் ஏறி இறங்கும் பொருளாதரத்தில் இருந்து காத்துகொள்ளவும் எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் ஸ்திரபடுத்தவதுமே RCEP யின் முக்கிய அம்சமாகும்.
RCEP: ஒரு அறிமுகம்
உலக வர்த்தகத்தில் பெரிதும் மாற்றத்தை கொண்டுவரவுள்ள இந்த ”RCEP”யை உலக நாடுகள் அனைத்துமே குறிப்பாக மேற்கு நாடுகள் உன்னித்து கவனித்துவருகின்றன. ஒட்டுமொத்த உலகமக்கள் தொகையில் 45%, உலக GDPயில் 33%, அதுவே, உலக வர்த்தகத்தில் 28% கொண்டுள்ள இந்த 16 நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தமானது North American Free Trade Agreement (NAFTA) எனப்படும் மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளிக்கிடையான வர்த்தகத்தில் மூன்றில் 1 பங்கு ஆகும். NAFTA மட்டுமே உலகளவில் 28% GDPயைக் கொண்டது. ‘RCEP’ நடைமுறைக்கு வரும்போது உலகின் 30%-40% வர்த்தகங்கள் இந்த 16 நாடுகளுக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்க – சீன வர்த்தகப்போர் போன்றவற்றால் ஏறி இறங்கும் பொருளாதரத்தில் இருந்து காத்துகொள்ளவும் எதிர்காலத்தில் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் ஸ்திரபடுத்தவதுமே RCEP யின் முக்கிய அம்சமாகும். ஆறுவருட இழுபறி பேச்சுவார்த்தையிலுமே பங்குதாரர்களின் கவலைகள் தீர்ந்தபாடில்லை. எனவே எஞ்சிய காலவரையறைக்குள் ஒப்பந்தக் குறைபாடுகள் களையெடுக்கப்படுமா? அல்லது இந்தியா ஓரங்கட்டப்படுமா? என்பது கேள்விக்குறிதான்.
இடியாப்பச் சிக்கலில் இந்தியா
ஒப்பந்தத்தின்படி பதினாறு நாடுகளுக்கும் இடையே நடக்கும் வர்த்தகத்தில் இறக்குமதி, ஏற்றுமதியாகும் பொருட்களின் மீதான வரியானது (அந்தத்த நாடுகளுக்குத் தேவைப்படும் குறைந்த அளவு பொருள்களைத் தவிர) பூஜ்ஜியம் அல்லது மிகக் குறைவு. இதனை சில எளிய உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.
1. இந்தியாவில் அலுமினியம், இரும்பு, உருக்கு, ஸ்டீல், மருந்துகள் மற்றும் ஜவுளிகளின் உற்பத்தி மிகுதி. இறக்குமதியாகும் இதே பொருள்களுக்கு இறக்குமதி வரி மிகுதி. ஆனால், RCEP யின் படி பிற RCEP நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இத்தகைய பொருள்களுக்கு தற்போதைய வரியை விட மிகக்குறைந்த இறக்குமதி வரிதான் விதிக்கப்பட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இது மிகுந்த நட்டத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே RCEP நாடுகளுக்குள்ளேயே சீனா போன்ற மலிவு விலை உபகரணங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கென்று தனிப்பட்ட வரி விதித்துகொள்ள அனுமதி வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. மேலும் ஏற்கனவே FTA நாடுகளுக்குள் வரிகுறைந்த வர்த்தகம் நடந்து வருகிறது. RCEP க்குள்ளாகவே FTA நாடுகளும் அடங்கி விடுவதால், FTAவில் அதிக வரி விதிக்கப் பட்ட பொருள்கள் RCEP வழியாக வந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இதற்கு பெரும்பாலும் அனைத்து நாடுகளும் ஒத்துக்கொண்டாலும், இது ஒப்பந்தத்தின் உயிரோட்டத்தை நிறுத்துவது போன்றது என சில வல்லுனர்கள் கவலை கொள்கின்றனர்.

2. Rules Of Orgin – சீனாவிலிருந்து இறக்குமதியாகக்கூடிய இத்தகைய மலிவு விலைப் பொருட்களுக்கு இந்தியா தனிப்பட்ட வரி விதித்தாலும், அவை RCEP யின் வேறு நாடுகள் வழியாக இந்தியச் சந்தைகளை அடையாமல் இருக்க அவற்றின் மீது அவற்றின் பிறப்பிடம் முத்திரையிடப்பட வேண்டும்.
3. இந்தியாவின் சந்தையை RCEP நாடுகளுக்கு திறந்துவிடுவதற்கு மாற்றாக இந்தியர்களுக்கு அந்நாடுகள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் (Free Flow Of Service) என்பதும் இந்தியாவின் கோரிக்கை. ஆனால் பெரும்பாலான நாடுகள், தங்கள் குடிமக்களின் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க தத்தம் குடியேற்ற விதிகளை கடுமைப்படுத்தியுள்ளதால் அதில் சிக்கல் நீடிக்கிறது.
“ஒருவேளை ஒப்பந்தம் இறுதியாகும்பொருட்டு, ஆசிய ஜாம்பவானான சீனாவே இதற்க்கும் (RCEP) தலைமை தாங்கும். அதே நேரத்தில் பிற RCEP நாடுகள் மேற்கு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது”.
இந்தியாவின் பிரச்சினைகளை புரிந்துகொண்ட சீனா, அவற்றை தீர்த்துவைப்பதாக உறுதி அளித்துள்ளது. முன்பாக, கடந்த ஆண்டு இந்தியாவின் விவசாயம் மற்றும் மருத்துவம் சார்ந்த பொருள்கள் சீனாவின் சந்தையை அணுக அந்நாடு வழிவகை செய்துள்ளது. மேலும், சீனாவிடம் நமக்கு ஏற்கனவே $60 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி பற்றாகுறை இருந்துவருகிறது. அதையும் தீர்த்துவைப்பதற்க்கு திட்டங்கள் வகுத்துவருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. தற்போது சீனா உள்ளிட்ட RCEP நாடுகள் தங்களுடைய பொருள்களுக்கு 90% வரிவிலக்கு (அல்லது பூஜ்ஜியம் வரி ) எதிர்நோக்குகின்றன. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தின் கழுத்தை நெறிக்கும் வேண்டுகோள் இது. இந்தியாவின் உற்பத்திமிகுந்த இந்த பொருட்கள் தவிர்த்து இன்னபிற (பெட்ரோலியப் பொருள்கள், ஆபரணங்கள், ரப்பர்/கண்ணாடி, இயந்திர உபகரணங்கள்) பொருள்களும் மற்ற RCEP நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 90 விழுக்காடு வரிவிலக்கு இத்தகைய பொருள்களுக்கு கிடைப்பது என்பதில் இந்தியாவுக்கும் நன்மையே!

உள்நாட்டு சிக்கல்
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, ஏற்றுமதியில் ஈடுபடும் பெரிய மற்றும் நடுத்தர வணிகர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரச் சட்டத்தில் (ELECTROL BOND) மூலமே இது வெட்டவெளிச்சம். அதிலும் கணிசமான வடக்கு மாநில தொழிலதிபர்கள் RSS பின்புலம் கொண்டவர்கள். RSS இன் வர்த்தகப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மான்ச் (swadeshi jagran manch) ஆனது RCEPயில் கையெழுத்திடக்கூடாது” என மத்திய அரசுக்கு நேரடியாகவே அழுத்தம் கொடுத்துவருகிறது. மத்தியில் எந்த ஆட்சி நடந்தாலும் வணிகர்களையும் ஜாதிச் சங்கங்களையும் பகைத்துகொள்ளக்கூடாது என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்ததுதான்
அடுத்தது என்ன?
அடுத்த கட்டமாக சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, நாடுகளில் இருந்து பேச்சுவார்த்தைக் குழுக்கள் புதுடெல்லி வரவுள்ளன. இந்தியாவின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இந்தாண்டுக்குள் RCEPயை செயல்படுத்த அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசாங்கத்திற்கு வாழ்வா சாவா முடிவெடுக்கவேண்டிய வருடம் இது. இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது ட்ரில்லியன் டாலர் கேள்வி.