பொருளாதாரத்தின் புதிய சக்தி – பிங்க் மணி

0
66

பிங்க் மணி (Pink Money) என்றால் ஏதோ பிங்க் நிறத்தில் இருக்கும் நம் 2000 ரூபாய் நோட்டு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த பிங்க் மணி முற்றிலும் வேறு கதை.

LGBTQIA+

L – லெஸ்பியன், G – கே, B – பைசெக்ஸுவல், T – டிரான்ஸ்ஜெண்டர், Q – க்வெர், I – இண்டர்செக்ஸ், A – அசெக்ஸுவல் அல்லது அலைட். இப்படிப் பல புதிய சமூகங்கள் தற்போது உருவாகி வருகின்றன. புதிதாக உருவாகின்றனர் என்று சொல்ல முடியாது. இந்தச் சமூகத்தினர் தற்போது தைரியமாக வெளிப்படுகின்றனர். இதை சமீபத்தில் உச்ச நீதி மன்றமும் அங்கீகரித்திருக்கிறது.

இவர்கள் தேவை

இந்தச் சமூகத்தினருக்கு என்று சிறப்பாக சில பிரத்தியேகத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஆடைகள், அலங்காரப் பொருட்கள், க்ளப்புகள், உணவகங்கள், தங்குவதற்கான விடுதிகள், நகைகள், ஃபேஷன் டிசைனர்கள் என்று பட்டியல் நீள்கின்றன.

பிங்க் மணி

இந்தச் சமூகத்தினர் மேற்கூறிய விஷயங்களுக்கு செலவழிக்கும் பணம் தான் “பிங்க் மணி”. எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், வாங்கும் திறன் உள்ள ஆட்களைக் கணித்துத் தான் ஒரு பொருளை சந்தைப்படுத்துவார்கள். பென்ஸ் காரை ஏழைகள் (ஆடம்பர செலவுகள் செய்யாதவர்கள் கூட இதில் அடங்குவர்) நிறைந்த அல்லது போர் நடந்து கொண்டிருக்கும் நாட்டில் விற்பனை செய்ய முடியுமா…? முடியாது. அப்படித் தான் இந்த LGBT சமூகத்தினர் ஏழைகளில்லை. அல்லது ஏழைகள் தங்களை அவ்வாறு வெளிப்படுத்திக் கொள்வது இல்லை. நல்ல வாங்கும் திறனோடு அதிக பணம் புழக்கம் உள்ளவர்களாகவே இவர்கள் தென்படுகிறார்கள்.

பிங்க் மணி எப்படி புதிய பொருளாதார சக்தி?

இந்த சமூகத்தினரிடம் பொதுவாகவே பணம் நன்றாகப் புரள்கிறது. சமீபத்தில் எத்தனையோ பெரிய மனிதர்கள், ஆம், நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்று சந்தோஷமாக வெளிப்படுத்தினர். கேஷவ் சூரி (Keshav Suri), டிம் குக் (Tim Cook) ஆகியோர் அவர்களில் சிலர்.

2008-ம் ஆண்டு நடந்த பொருளாதாரப் பிரச்சனையில், இந்தியா தப்பித்ததற்கு மிக முக்கியக் காரணம், நம் மக்களிடம் எவ்வளவு பணம் மொத்தமாக இருந்தது என்கிற தகவல் அரசிடமோ வேறு எந்த சர்வதேச அமைப்புகளிடமோ இல்லை. அதனால் அவர்களின் அனைத்துக் கணிப்புகளையும் இயல்பாகத் தட்டி விட்டு இந்தியா தன் போக்கில் நடந்து கொண்டிருந்தது.

அதே போல், முதலில் LGBTQIA+ சமூகத்தினர் எத்தனை பேர், இவர்களுக்கு என்ன பிடிக்கும், இவர்கள் என்ன வாங்குகிறார்கள், இவர்கள் என்ன மாதிரியான வேலைகளில் இருக்கிறார்கள் என்று இப்போது தான் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தரவுகளைத் திரட்டத் தொடங்கி இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் தன் அலுவலகத்திலேயே LGBTQIA+ ஊழியர்கள் குழு ஒன்றையும் அமைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

டில்லியில் நடந்த LGBTQIA+ பார்ட்டி

டிராக் நைட் என்கிற பெயரில் கேஷவ் சூரியின் கிட்டி சு நைட் கிளப் (Kitty Su) ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தொடர்ந்து LGBTQIA+ சமூகத்தினருக்குப் பார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. “முதன்முதலில் சர்வதேச LGBTQIA+ டிராக் குவினான வயலட் சாச்கியை (violet chachki) வைத்து ஒரு நைட் பார்ட்டி அறிமுகப்படுத்திய போது 1,900 பேர் வந்து கொண்டாடியதை மறக்கவே முடியாது. அன்றே முடிவு செய்தேன், எங்கள் சமூகத்தினரிடம் பணம் இருக்கிறது. இதற்கும் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கும், இந்த பிசினஸ் மாடலை ஃபாலோ செய்யலாம்” என்று சொல்லிச் சிரிக்கிறார் கேஷவ்.

டிராக் பாடகர் சுஷாந்த் திவ்ஜிகர் (Sushant Divgikar)

“நான் முதன்முதலில் LGBTQIA+ என்று தெரிந்து கொண்டு, டிராக் பார்ட்டி செய்யத் தொடங்கிய போது, பல்வேறு சமூகப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. சமூக வலைதளங்களில் எங்களைத் தொந்தரவு செய்வது, நேரடியாக எங்களைத் தாக்குவது என்று வழக்கமான தொந்தரவுகள் இந்த பார்ட்டிகளுக்கு வந்தது. அதை எல்லாம் இன்று சமூகம் கடந்து ஒரு சரியான கண்ணோட்டத்தில் எங்களைப் பார்க்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மீடியாக்களில் எங்களைக் காட்டும் விதத்தினாலும், எங்கள் கருத்துக்களை உரக்கச் சொல்வதினாலும் பெரிய அளவில் சமூகத்தின் மனநிலை மாறி இருக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார் டிராக் பாடகர் சுஷாந்த் திவ்ஜிகர்.

மேலும் ஒரு படி மேலே போய், “வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கூட இந்த LGBTQIA+ சமூகத்தினரின் நிதி நிலைமையையும், தொழில் வாய்ப்புகளையும் பார்த்துக் கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எங்களின் பொருளாதார பலத்தைப் பார்க்கும் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் தொழில் எங்களுக்குத் தேவையானதைச் செய்யவில்லை என்றால் அது உங்கள் நஷ்டம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று முடிக்கிறார் திவ்ஜிகர்.