மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்குமான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல நிலைமையில் இல்லை. அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பிவரும் ரகுராம் ராஜனாக இருக்கட்டும், தற்போது பதவி விலகிய RBI யின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலாக இருக்கட்டும் மத்திய அரசினைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இந்தப் புள்ளிகளையெல்லாம் இணைத்தால் கிடைக்கும் படம் தான் அந்த 9.97 லட்சம் கோடி. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் இருக்கும் இந்தப் பணத்தினை அரசு எதற்காகக் கேட்கிறது? அரசாங்கத்திற்கு துணை நிற்கவேண்டிய ரிசர்வ் வங்கி பணத்தினை ஒப்படைக்கத் தயக்கம் காட்டுவது ஏன்? இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

RBI – இந்தியாவின் நம்பிக்கை
இந்திய ரிசர்வ் வங்கியான RBI, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு துணைபுரிய உருவாக்கப்பட்ட சுதந்திர அமைப்பாகும். தேசிய வங்கிகளுக்கு கடன் கொடுப்பது, அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது, அந்நிய செலவாணி இருப்பை அதிகரிப்பது போன்ற வருமானம் அதிகமுள்ள துறைகளின் மூலமாக பெரும்பணம் ரிசர்வ் வங்கிக்குக் கிடைக்கிறது. இந்தப் பணத்திலிருந்து நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசிற்கு குறிப்பிட்ட தொகையினை வழங்கிவிடும்.
மீதியுள்ள பணத்தினை கையிருப்பாக ரிசர்வ் வங்கியே வைத்துக்கொள்ளும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47 மூலம் இது சாத்தியமாகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது பணத்தினை அச்சிட்டு வங்கிகளுக்கு அளிப்பது போன்ற செயல்பாடுகளுக்கென இந்த கையிருப்புகள் அவசியமாகின்றன.

இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த கையிருப்புகளே மிக முக்கியக் காரணமாகும். கடந்த 2008 வாக்கில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை எல்லா வளர்ந்த நாடுகளையும் அச்சுறுத்திய போதிலும் இந்தியா தனது இலக்கை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றது இந்த கையிருப்புகள் மூலமாகத்தான். இந்தப் பணத்தை தான் மத்திய அரசு தற்போது கேட்கிறது.
மொத்த சொத்து
ஜூன் 2018 நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 36 லட்சம் கோடி. அதில் 73% அந்நிய செலாவணி. 17% ரூபாய் நோட்டுகள். 4% தங்கம். இவை போக கடன்கள், மற்றும் முதலீடுகள் ஆகியவற்றிலும் பணத்தினை வைத்திருக்கிறது. இவற்றின் மூலமாகத் தான் கணிசமான வருமானம் ரிசர்வ் வங்கிக்குக் கிடைக்கிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தம் 9.97 லட்சம் கோடி மத்திய வங்கியிடம் கையிருப்பாக உள்ளது. இம்மாதிரி கையிருப்புகள் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வைக்கப்படும் நடைமுறைதான். உலகிலேயே அதிகபட்சமாக நார்வே 40 % கையிருப்பைக் கொண்டுள்ளது. ஆனால் தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் இந்த விகிதம் 10% – 20% ஆக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளின் கையிருப்புச் சராசரி 8.4% என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவிடம் உள்ள கையிருப்பு விகிதம் 27.7 சதவிகிதம் ஆகும். இங்குதான் இப்பிரச்சினை மையம் கொள்கிறது.

என்ன சிக்கல்?
ரிசர்வ் வங்கி எவ்வளவு பணத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய எந்த விதிமுறைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை. காலங்காலமாக இவை நாட்டின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டே நடைபெற்று வருபவை. இப்படி வைக்கப்பட்டிருக்கும் பணத்தின் மூலம் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம் என்கிறது மத்திய அரசு. இதில் ரிசர்வ் வங்கியின் வாதம் வேறுவிதமாக உள்ளது.
ரிசர்வ் வங்கியிலிருக்கும் அனைத்து சொத்துக்களுமே பங்குச் சந்தையைப் பொறுத்தே ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கின்றன. சந்தை பற்றிய அபாயம் மிகுந்தவை என்பதால் கையிருப்புகளை செலவிட முடியாது என்றும், இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் ரிசர்வ் வங்கி நினைக்கிறது. உதாரணமாக நெருக்கடி நிலைமைகளில் எல்லா சொத்துகளின் மதிப்பும் வீழ்ச்சியை சந்திக்கும். அப்போது அதனைச் சரி செய்ய இந்த கையிருப்புகள் அவசியம்.

அதேசமயத்தில் இவ்வளவு பணத்தையும் வைத்துக்கொள்வதைக் காட்டிலும் இதன்மூலம் வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கலாம். வங்கிகளுக்கு இந்தப் பணத்திலிருந்து கடன் அளிக்கலாம். அதுவும் குறைந்த கால கடனாக இருக்கவேண்டும். ஆனால் கடைசியில் இப்பணமானது ரிசர்வ் வங்கியிடம் வருவதே இந்தியாவிற்கு நல்லது. இல்லையெனில் மல்லையாக்கள் பெருகிவிடுவார்கள். இம்மாதிரியான சிக்கல்களுக்கு இடையே இந்த கயிருப்புப் பணம் சிக்கியுள்ளது. இதனை கையகப்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது. அதற்காகவே சக்தி காந்த தாசினை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்திருக்கிறது மத்திய அரசு.