இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை மிஞ்சும் – ஐஎம்எப் அறிக்கை

0
191

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 7.3 சதவிகிதமாகவும், 2019 – ஆம் ஆண்டு  7.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் (International Monetary Fund – IMF) மதிப்பிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும் எனவும் ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.

ஐஎம்எஃப்  அறிக்கை

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை விட இந்தியப் பொருளாதாரம் சற்று பின் தங்கி இருந்தாலும், அந்நாட்டுடன் கடும் போட்டியிட்டு வருகிறது.

Credit : Livemint

பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019-ஆம் ஆண்டில் 1.2 சதவிகிதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியப்  பொருளாதார வளர்ச்சி, 2017-ஆம் ஆண்டில் 6.7 சதவிகிதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 7.3 சதவிகிதமாகவும், 2019-ஆம் ஆண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும்.

ஜிஎஸ்டி (GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரித் திட்டம் அமல்படுத்தப்பட்டதால் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுவாக இருப்பதால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது போலவே சமீபத்தில் கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் மூலம் வாராக்கடன்களை வேகமாக வசூல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதே வேகம் தொடர்ந்தால், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். அதேசமயம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஐஎம்எப் அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனாவை விஞ்சும் இந்தியா

முன்னதாக சீனாவின் வளர்ச்சி 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐஎம்எப் கணித்திருந்தது. சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகளால் தான் சீனாவுக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தன்னை முன்னிறுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சில தினங்களுக்கு முன்பு இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று கூறியிருந்தார். ஐஎம்எஃப் மதிப்பீடும் அதை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

Credit : Economical forum

உலக வங்கி கணிப்பு

இதனிடையே தெற்காசிய மண்டலம் குறித்த உலக வங்கியின் அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம்  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டிருந்த தற்காலிகமான இடையூறுகளிலிருந்து மீண்டெழுந்துவிட்டது போலத் தெரிவதாகத் தெரிவித்துள்ளது. எனினும், உள்நாட்டில் உள்ள அபாயங்களாலும், சர்வதேசச் சூழல் சாதகமாக இல்லாததாலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 விழுக்காடாக உயரும் எனவும், அதற்கு அடுத்த ஆண்டுகளில் 7.5 சதவிகிதம் அளவுக்கு உயரும் எனவும் உலக வங்கி எதிர்பார்க்கிறது. இந்த வளர்ச்சிக்கு வலுவான தனியார் செலவினம், ஏற்றுமதி வளர்ச்சி போன்றவை முக்கியக் காரணிகளாக அமையும் எனவும் கூறுகிறது.