தேசிய பங்குச்சந்தைக்கு 1000 கோடி அபராதம் விதித்த SEBI. முன்னாள் தலைமைகளின் ஊதியத்தில் ஒரு பகுதியையும் திருப்பித் தர உத்தரவு. என்ன நடக்கிறது பங்குச்சந்தை பக்கம்?
Co-location scam
இந்தியாவில் இரண்டு பங்குச்சந்தை நிறுவனங்கள் உள்ளன. ஒன்று Bombay stock exchange (BSE), மற்றொன்று தேசியப் பங்குச்சந்தை (NSE). இரண்டுமே இந்திய அரசுடைமைதான். இதில் 1992 ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா எனும் பங்குச்சந்தை புரோக்கர் செய்த தகிடுதத்தம் காரணமாக பங்குச்சந்தை புள்ளிகள் வரலாறு காணாத வளர்ச்சி அடைந்தது (1500 இலிருந்து 4500 புள்ளிகள் வரை). பின்னர் அவர் செய்த திள்ளுமுள்ளு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பங்குச்சந்தை கடும் பாதாதளத்திற்கு சென்றது. அதனால் முதலீட்டாளர்கள் பெற்றது கொஞ்ச நஞ்ச அடியில்லை. புள்ளிகள் சுமார் 72 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தன. நாட்டின் வர்த்தகத்தையே அசைத்துப் பார்த்த இந்த ஊழலில் உழன்றது 5000 கோடி. இது நடந்தது பாம்பே பங்குச்சந்தையில். அவர் செய்த திருட்டுத்தனத்தை இக்கட்டுரையின் கடைசியில் பார்க்கலாம்.

தற்போது சிக்கலில் மாட்டியிருப்பது தேசிய பங்குச்சந்தை. 2011 முதல் 2014 ஆம் ஆண்டுவரை நடந்த இந்த முறைகேட்டில் கடந்த ஆறு மாதகாலமாக கடும் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையை மேற்கொண்ட SEBI (security and exchange board of India – இந்திய வர்த்தகத்தை நிர்வகிக்கும் ஒரு அரசியலமைப்பிலடங்கா அரசு நிறுவனம்) தேசிய பங்குச்சந்தைக்கு அபராதம் விதித்ததோடு அதன் முன்னாள் உயர் அதிகாரிகளுக்கும் அபராதம் விதித்து, அவர்களை பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்களோடு இணைந்து செயல்படவும் தடை விதித்துள்ளது. என்ன முறைகேடு நடந்தது? என்பதை புரிந்து கொள்ளும் முன்னர் முதலில் பங்குச்சந்தை என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.
பங்குச்சந்தை
ஒவ்வொரு நிறுவனமும் தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனங்கள் அதன் நிறுவனத்தின் ஒரு பகுதியை விற்பனைக்கு நிறுத்தும். அதை வாங்குபவர் அதில் முதலீடு செய்பவர் ஆவார். அல்லது அந்த நிறுவனத்தின் ஒரு முதலீட்டாளர் ஆவார். முதலீடு செய்பவர் நிறுவனத்தின் விற்பனைக்கான பங்கை தனக்கு சாதகமான விலைக்குக் கேட்பார். நிறுவனமும் தனக்குப் பொருத்தமான விலையை நிர்ணயிக்கும். இருவர் பேரமும் இணையும் பட்சத்தில் ஒரு டீல் அல்லது ஆர்டர் அங்கு நடைபெறும். இந்த வியாபாரம் நடைபெறும் இடமே பங்குச்சந்தை ஆகும். இங்கே நிறுவனத்தின் மதிப்பை தீர்மானிப்பவையாக பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவையாக அதன் நற்பெயர், முற்கால வளர்ச்சி மற்றும் செயல்பாடு போன்றவை இருக்கும். முதலீட்டாளர் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு சென்று பங்குகளை வாங்க முடியாது. மாறாக செபியின் அனுமதி பெற்ற புரோக்கர் அல்லது நிறவனத்தின் வாயிலாகவே முதலீட்டாளர் ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக முடியும். இதற்கு காரணமும் பங்குத்தந்தை “ஹர்சத் மேத்தா” தான். தற்போது செபியால் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களின் படி ஒருவர் இணைய வழியிலேயே முதலீடு ஒன்றை செய்ய முடியும். அதற்கு “trading account” ஒன்றை அந்த நபர் உருவாக்க வேண்டும். மேலும் பங்கானது பத்திரங்கள் மூலமாகவும் விற்கப்படும். நீங்கள் எழுத்தாணியில் வெளிவந்த “தேர்தல் பத்திரச் சட்டம் “ குறித்த கட்டுரையைப் படித்திருந்தீர்களானால் நீங்கள் பத்திரம் மூலம் பங்குதாரராவதை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

NSE யின் கோ-லொகேஷன் ஊழல்
உலக பங்குச்சந்தை தரவரிசையில் 12 வது இடத்தை பெற்றிருப்பது (2016 ஆண்டு வாக்கிலேயே) இந்தியாவின் தேசியப் பங்குச்சந்தை. 1992 ல் உருவாக்கப்பட்ட போதே இது முழுக்க முழுக்க நவீனப்படுத்தப்பட்ட மிண்ணனு செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. அதிவேக சர்வர்கள் மிகப்பெரிய திரைகள் என உலகத்தரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மிண்ணனு என்று குறிப்பிட்டால் அதற்குள் கணினி என்பதும் அடங்கும். கணினி என்பது மகிப்பெரிய சர்வர் மற்றும் புதிய மென்பொருள்களை கொண்டது. அப்படித்தான் தேசியப் பங்குச்சந்தையும் பிரம்மாண்ட சர்வர் அறையை பயன்படுத்தி வந்தது. இது பொதுவாக அனைத்து முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் அறிந்ததே. ஆனால் NSE யிடம் இரண்டாவதாக ஒரு சர்வரும் உண்டு. இது முதல் சர்வர் சிறப்பாக இயங்கும் போது அதற்கு பாதுகாப்பாக இருக்க நிறுவப்பட்டது. அதற்கு backup சர்வர் என்று பெயர். இது NSE யின் ஒரு சில உயரதிகாரிகளை தவிர பிறருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு புரோக்கர்ஸ் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் NSE யின் சர்வர் அறைக்கு அருகிலேயே தத்தம் சர்வர்களை நிறுவி வேலைசெய்ய ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். பங்குச்சந்தை பரிவர்த்தனைகளின் போது லாபத்தை தருவதில் நேரம் என்பது மிக முக்கிய காரணியாகும். அதாவது ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு தாமதமான முதலீடு கூட பலநூறு கோடி முதல் பல ஆயிரம் கோடி வரையிலான இழப்பை/லாபத்தை ஏற்படுத்தி விடும். அதற்காகவே சர்வருக்கு மிக அருகில் இருக்கும்பட்சத்தில் அவை வேகமாக தரவுகளை கையாண்டு, விரைவான முதலீடு பெறுவதற்காக அவை அனுமதிக்கப்பட்டன. அவற்றுள் OPG (NSE க்கு மென்பொருள் அளிக்கும் நிறுவனம்) , GKN security, way2wealth brokers, sampark (இணையவசதி வழங்கும் ஒரு நிறுவனம்) ஆகியன NSE யின் சில உயரதிகாரிகளின் அனுமதியோடு அதன் இரண்டாவது சர்வரை சட்டவிரோதமாக அனுகியுள்ளனர். அப்போது “tick-by-tick” sever protocol எனும் உத்தியை பயன்படுத்தி வந்தது. அதாவது ஒவ்வொரு நுட்பமான பங்குச்சந்தை தரவுகளும் ஒவ்வொரு உறுப்பினரும் வரிசையாக சென்று சேரும். இவற்றை பேக் அப் சர்வர்கள் மூலம் அணுகுவதால் மேற்கூறிய மூன்று நிறுவனங்கள் (sambark தவிர்த்து) பங்குச்சந்தை முதலீட்டு விருப்பங்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் முன்னதாகப் பெறவும் அதன்மூலம் ஒரு டீலினை மேற்கொள்ளவும் முடியும். இது மற்ற பங்குச்சந்தை உறுப்பினர்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சூழ்ச்சியாகும். இதுவே co-location scam எனப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு NSE யின் முன்னாள் ஊழியர் ஒருவரால் செபிக்கு அனுப்பப்பட்ட புகாரில் வெளிப்பட்டது இந்த முறைகேடு.
சிக்கலில் சிக்கிக் கொள்ளுமா NSE?
விசாரணையில் முடிவில் NSE யின் சில அதிகாரிகள், NSE யின் மென்பொருள் குறித்தும், இந்த சர்வர் முறைகேடு குறித்தும் கவனிக்கத் தவறியதாக(!) கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கைமாறக 645 கோடி ருபாயினை 12 சதவிகித வட்டியோடு NSE செபிக்கு செலுத்த வேண்டும். இரண்டு முன்னாள் உயரதிகாரிகளின் சம்பளத்தை (ஒரு பகுதி) திருப்பியளிக்கவும் உத்தரவிட்டதோடு அவர்களுடைய தற்காலிக பணிநீக்கம் செய்தும் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வட்டியோடு செலுத்த அறிவுறுத்தியும் உத்தரவிட்டுள்ளது செபி. இன்னும் 45 நாட்களில் 1.45 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கேபிடலாக கொண்ட NSE விற்கும் 1000 கோடி ஒரு பொருட்டல்ல. ஆனால் சிறு குறு முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையின் நேர்மையின் மீதான நம்பிக்கையை இதுபோன்ற நடவடிக்கைகள் மீட்டெடுக்கும்.

பணிநீக்கமும் தடையும் பெற்ற சில அதிகாரிகள் Securities Appellate Tribunal (SAT) ல் முறையீடு செய்திருந்தனர். செபியின் செயலுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது SAT. மேலும் NSE முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் லாபமீட்டும் வகையில் செயல்பட்டதா என்றும் வேறு ஏதேனும் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக என்றும் NSE அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்
ஹர்ஷத் மேத்தா – சந்தையின் தந்தை
அமெரிக்காவிற்கு ஒரு வால் ஸ்ட்ரீட் (wall Street) என்றால் இந்தியாவிற்கு ஒரு dalal street. எகானமிகல் கேபிடல் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் மும்பையில் உள்ளது இந்த தலால் ஸ்டீரீட்.
வெறும் 40 ரூபாயில் மும்பைக்கு குடிபெயர்ந்தவர் 1992 ஆம் ஆண்டுக்குள் 4,000 கோடி ரூபாய்கு மேல் வரையில் சுருட்டிக்கொண்டு, இந்தியாவில் பல வங்கிகளை அதே தெருவில் ஓடஓட விரட்டியவர். குறிப்பாக விஜயா வங்கியின் தலைமை அதிகாரி ஒருவரை தற்கொலை செய்யவும் வைத்தவர். எப்படி செய்தார் இந்த மாபெரும் ஊழலை?
மும்பையில் சேல்ஸ்மேனாக தனது வாழ்க்கையை தொடங்கிய மேத்தா, கூடியவிரைவில் பங்குச்சந்தையில் ஒரு புரோக்கராகவும் உறுப்பினராகவும் மாறினார். பங்குச்சந்தையின் செயல்பாடுபோலவே இங்கேயும் அரசாங்கம் தனது தேவைக்கும் அதிகமான செலவினத்தை ஈடு கட்டும் பொருட்டு பொதுத்துறை நிறுவனங்களின் ஒரு பகுதியை வங்கிகளுக்கு விற்பது வழக்கம். பின்னர் வங்கிகளிடமிருந்து அந்த பங்கினை அவர்கள் செலுத்திய முதலீட்டுத் தொகையையும் வட்டியையும் செலுத்தி, பொதுத்துறை பங்கினை மீட்டுக் கொள்வதும் வழக்கம். அரசால் வங்கிகளுக்கு விற்கப்பட்ட இந்தப் பங்கு, செக்யூரிட்டீஸ் அல்லது பாண்ட் என்று அழைக்கப்படும். வங்கிகள் இந்த பாண்டினை தனது தேவைக்காக பிற வங்கியிடம் விற்கச் செய்யும். இங்கேதான் மேத்தாவின் வேலை இல்லை லீலை ஆரம்பமாகிறது. பங்குச்சந்தையில் தன்னை மிகவும் நற்பெயர் கொண்ட புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டதன் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு வங்கிகள் வரை அவர் தொடர்பு கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஒரு நபர் தன்னுடைய பங்கினை விற்கும் பொருட்டு புரோக்கரை அணுகுவது வழக்கம். அவர் அந்த பங்கினை வாங்கக்கூடிய buyer ஒருவரை தேடி கண்டுபிடித்து விற்பவரிடம் சேர்ப்பார். இருவரிடமிருந்தும் கணிசமான தொகையை கமிஷனாக பெற்றுக் கொள்வார். மேத்தாவின் வேலையும் இதுதான்.
உதாரணமாக A,B,C,D எனும் நான்கு வங்கிகள் உள்ளதாக கருதவும். அவற்றுள் வங்கி A விற்கு பணத் தேவை ஏற்படுகிறது. எனவே அது தன்னிடம் உள்ள செக்யூரிட்டி அல்லது பாண்டினை பிற வங்கிகளுக்கு விற்க முடிவு செய்து அதனை புரோக்கரான ஹர்ஷத் மேத்தாவிடம் தெரிவிக்கிறது. மேத்தா அந்த வங்கியிடமிருந்து உண்மையான செக்யூரிட்டி அல்லது பாண்டிற்கு ஈடான பத்திரம் ஒன்றையும் குறிப்பிட்ட கால அவகாசமும் வாங்கிக் கொள்வார். அதே நேரத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கும் வங்கி B இடமிருந்து ஒரு முன் தொகையை வாங்கிக் கொள்வார். வங்கிகள் அவருக்கு முன் பணத்தை கொடுக்கும் முன்னர் பாண்டினை விற்கும் வங்கியிடமிருந்து பேங்க் ரிசிப்ட் எனும் ரசீதை கேட்கும். இங்கேயும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட மேத்தா, போலி பேங்க் ரெசீப்ட்டுகளை தானே தயார் செய்தார்.

ஏனெனில் அந்த காலத்தில் அதிக அட்வான்ஸ் income tax கட்டிய ஒரு சில தொழிலதிபர்களுள் மேத்தாவும் ஒருவர். வருமான வரி கட்டுவதில் தான் பெற்றெடுத்த நற்பெயரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வங்கியிடம் அவர் பெற்ற முன்பணத்தை தன்னுடைய அக்கவுண்டில் அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வார். வங்கியிலிருந்து பெற்ற அதிகமான பணத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயரும். அவ்வாறு பங்குகள் உயரும் பட்சத்தில் தன்னுடைய பங்கை விற்று கணிசமான லாபத்தை அடைந்துவிடுவார். பின்னர் அந்த பணத்தை வங்கி B யிடம் செலுத்தி தான் கொடுத்த போலி பேங்க் ரெசீப்டுகளை பெற்றுக்கொள்வார். இதேபோன்று A யிடமிருந்து வாங்கிய பாண்டினை வங்கிகள் சி மற்றும் டி ஆகிவற்றிடம் காட்டி போதுமான முன் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் மீண்டும் முதலீடு. இது ஒரு சுழற்சியாக நடைபெறும். வங்கிகளை ஏமாற்றத்தெரிந்த மேத்தாவிற்கு பங்குச்சந்தையின் மதிப்புகள் எப்போதும் ஏறும் எப்போது இறங்கும் என்று கணிக்க சரியாக தெரியவில்லை. மேலும் அது யாராலும் முடியாத காரியமும் கூட. ஒரு கட்டத்தில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைய, அவளுடைய முதலீடுகள் பறிபோக, வங்கிகள் B மற்றும் C ஆகியன தனது பணத்தை திருப்பிக் கேட்க, அவரால் முடியாது போக, வங்கிகள் B மற்றும் C ஆகியன மேத்தா போலி பேங்க் ரெசீப்டுகளைக் கொண்டு சென்று வங்கி A காட்டின. வங்கி A ஆனது B C மற்றும் D யை விரட்டி விட்டு தான் பறிகொடுத்த பாண்டினை நினைத்து அழுது கொண்டிருந்தது.
ஏமாற்றம். பெருத்த ஏமாற்றம். அடி, பங்குச்சந்தையில் பலத்த அடி. எண்ணற்ற முதலீட்டாளர்கள் மேத்தாவை நம்பினார். மேத்தா அதிர்ஷ்டத்தை நம்பினார். மேற்கூறியவாறு விஜயா வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதும் இதன் காரணமாகவே. கைதாகும் போது 600க்கும் மேலான அரசு நடவடிக்கைகள் 70க்கும் மேலான ஏமாற்று வழக்குகள் அவர் மீதிருந்தன. பங்குச் சந்தையில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் 2001ம் ஆண்டு மாரடைப்பில் சிறைக்குள்ளாகவே இறந்தார். அவர் இறக்கும் பொழுதும் 27 வழக்குகள் அவர் மீது பாக்கி இருந்தன.