பதவி விலகினார் சந்தா கோச்சார் – ஐசிஐசிஐ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி யார் தெரியுமா?

0
98
icici

வீடியோகான் நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐசிஐசிஐ வங்கியின் (ICICI) தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் (Chanda Kochhar)அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வீடியோகான் விவகாரம்

கடந்த 2012 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமையிலான 20 வங்கிகள் சேர்ந்த கூட்டமைப்பு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3250 கோடி கடன் வழங்கியது.

இந்தக் கடன் வழங்கியதற்கு பிரதிபலனாக வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத், அவரது நிறுவனத்திலிருந்து 200 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை மற்றும் பங்குகளை முறைகேடான வகையில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

icici ceoமேலும், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3250 கோடி கடனும் தற்போது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோகான் நிறுவனம் வாங்கிய கடனில் ஏறக்குறைய இன்னும் 2800 கோடி ரூபாய்க்கு மேல் திருப்பிச் செலுத்தப் படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தா கோச்சாரிடம் விசாரணை

இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பு அறங்காவல் குழுவின் தலைவர் அரவிந்த் குப்தா கடந்த ஆண்டு இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்தார். வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டகடன் மூலமாக அதிகம் பயன் பெற்றது ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் குடும்பத்தினர் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐசிஐசிஐ வங்கி அதன் நிர்வாகிகளை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணை அமைப்பை உருவாக்கி சந்தா கோச்சாரின் வங்கி நெறிமுறைகளுக்கு மாறான நடவடிக்கை மற்றும் வீடியோகான் கடன் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, இது குறித்து சிபிஐ விசாரணையும் தொடங்கியது. அப்போது இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் மறைமுக அழுத்தத்தின் பேரில், ஐசிஐசிஐ வங்கியின் உயர்மட்டக் குழு அதன் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரை அவரது தலைமைப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைப்பதாக அறிவித்து இருந்தது.

பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா

இந்நிலையில் தான், ஐசிஐசிஐ வங்கியில் தனது பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா கடித்தத்தினை சந்தா கோச்சர் அளித்துள்ளார்.  அதைத் தொடர்ந்து போர்டு இயக்குனர்கள் குழுவில் இருந்து அவர் உடனடியாக வெளியேற வங்கி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இதனைப்  பங்குச் சந்தையிலும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

icici ceoஎனவே அடுத்து சந்தா கோச்சரின் தலைமை நிர்வாகப் பொறுப்பினை கவனிக்க இருக்கிறார் சந்தீப் பாக்‌ஷி (Sandeep Bakhshi).

யார் இந்த சந்தீப் பாக்‌ஷி?

ஐசிஐசிஐ வங்கியின் இக்கட்டான சூழல்களில் அதனைச் சரி செய்ய போர்டு இயக்குனர்கள் தேர்வு செய்யும் முதல் நபர் சந்தீப் பாக்‌ஷியாகத் தான் இருப்பார். 2008-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் சில தவறுகள் ஏற்பட்டு நெருக்கடி ஏற்பட, ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (ICICI Lombard General Insurance ) இருந்து அந்தத் தவறுகளை சரி செய்ய வந்தவர் தான் சந்தீப் பாக்‌ஷி.

ஐசிஐசிஐ வங்கியை அந்த இக்கட்டான சூழலில் இருந்து பாக்‌ஷி விடுவித்ததை அடுத்து, 2010-ஆம் ஆண்டு ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் (ICICI Prudential Life Insurance) பிரிவில் முக்கியப் பொறுப்பினை ஏற்றார். பாக்‌ஷி தலைமையில் ஐசிஐசிஐ புரெடென்ஷியல் இன்சூரன்ஸ் 2018-ஆம் ஆண்டு 1.4 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களைப் பெற்றது. இந்த மதிப்பு இவர் பதவிக்குச் செல்லும் போது வெறும் 57,319 கோடி ரூபாயாக இருந்தது.

ஏன் கோச்சார் இடத்தில் பாக்‌ஷி?

ஐசிஐசிஐ வங்கியில் 30 ஆண்டுகளாகத் தனது தனித்திறமையுடன் பிரகாசித்து வருபவர் பாக்‌ஷி. 1986 -ஆம் ஆண்டு ஐசிஐசிஐ ஒரு வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக இருந்த போது பணியில் சேர்ந்த பாக்‌ஷி, அது மிகப் பெரிய வங்கி நிறுவனமாக வளர்ந்து தவிர்க்க முடியாத நிறுவனமாக உள்ள போதும் ஒரு முக்கிய அதிகாரியாக அங்கு இருக்கிறார்.

icici ceoகார்ப்ரேட் வங்கிச் சேவை, சில்லறை வங்கிச் சேவை, லைப் இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் என்று அனைத்து நிதித் துறைகளும் தெரிந்த, அனுபவம் வாய்ந்து ஒரு நபர் தான் பாக்‌ஷி, இப்போது ஐசிஐசிஐ வங்கியின் புதிய தலைமைச் செயல் அதிகாரி.