பண்டிகைக் கால விற்பனையைத் தொடங்க இருக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் – பலன் யாருக்கு ?

0
97

கணினி மயமாகிவிட்ட நவீன உலகில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. அதிரடிச் சலுகைகள், விழாக் காலத் தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களை வளைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பாரம்பரிய வர்த்தகத்தின் வாய்ப்புகளைப் பறிக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் என்ன பலாபலன்களை அனுபவித்தார்கள். சேமிப்பா, செலவா, ஏமாற்றமா என்பது தான் கேள்வியாகக் கனக்கிறது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் இந்திய வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தி தூண்டப்பட்டுள்ளது. விழாக்காலத் தள்ளுபடிகளால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், இந்தியர்களின்  பணத்தைச் சூறையாடுகின்றன. வரும் 10 ஆம் தேதி பிக் பில்லியன் டே விற்பனை என்ற பெயரில் வர்த்தக வலையை விரித்து வைத்திருக்கிறது பிளிப்கார்ட். அதே நாளில் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசானும் களத்தில் குதித்திருக்கிறது.

big billion dayஅமேசான் அதிரடிகள்

பிரத்தியேகமான பிராண்டுகளுக்குக் கணிசமான சேமிப்பை உருவாக்கித் தர திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ள அமேசான் செய்தித் தொடர்பாளர், அமேசான் டாட் இன்-னில் தவணை முறை சலுகைகள், டெபிட், கிரெடிட் கார்டுகளுக்குக் கட்டணமில்லா சலுகைகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகள்  போன்றவற்றை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வழக்கமாகச் சொல்லப்படும் இந்த வார்த்தைகள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கின்றன.

அசல் விலை மற்றும் சேமிப்பின் சதவீதத்தை ஆன்லைன் விற்பனையாளர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தாலும், உண்மையாகவே தள்ளுபடி விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை நம்மால் அறிய முடியாது என்று என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

வியாபார உத்தி

போனால் கிடைக்காது, பொழுதுபோனால் திரும்பாது என்று கூவும் லாட்டரிச் சீட்டுக்காரர்களின் வியாபார உத்தி தான் இது. குறிப்பிட்ட நாளில் சலுகைகளை வாரி இறைத்துக் கடை விரிக்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தளத்தில் நுழைந்தவுடனேயே கவுண்டவுனைத் தொடங்கி விடுகின்றனர். வாடிக்கையாளர்களிடையே அவசரத்தை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.

அனுபவமிக்க வாடிக்கையாளர்கள் கூட  உருவாக்கப்படும் பரபரப்பான சூழலால் பொருட்களை வாங்கி விடுகிறார்கள். மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்புகளின் இருப்புகள் முடிவதற்குள் வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக ஏற்படுவது தான்.

விலைகளில் மாற்றம்

ஆன்லைனில் அவசரத்தில் பொருட்களைத் தேர்வு செய்யும் போது, விலைகள் கூட ஒப்பந்தத்துக்கு நேரெதிராக மாறிவிடுகிறது. பொருட்களின் பற்றாக்குறையை விற்பனையாளர்கள் வலியுறுத்தும் போது, வாங்க வேண்டும் என்ற உத்வேகம் தூண்டப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கப் பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கேஷ்  பேக் சலுகைகளை வழங்குகின்றன. ஒவ்வொரு கொள்முதல் மீதும் கேஷ் பேக் சலுகை உள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதாகக் கூறப்பட்டாலும், வாங்கப்படும் பொருட்களின் விலை மீது தள்ளுபடி செய்யப்படுவதில்லை. இன்னொரு கொள்முதலில் இதன் பலன் கிடைக்கப் பெறுகிறது.

ஏமாற்றும் தந்திரம்

கேஷ் பேக் அறிவிப்புகளிலும் மறைமுகமான மோசடிகள் உள்ளன. 3000 ரூபாய்க்குக் குறையாமல் பொருட்களை வாங்கினால், 5 விழுக்காடு கேஷ் பேக் தருவதாகப் பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்திருக்கும். நீங்கள் 25,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்திருந்தாலும் அதே 5 விழுக்காடு தான் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். கேஷ் பேக், அதிரடித் தள்ளுபடி, பரிசுப் பொருட்கள். இலவச விநியோகம் ஆகியவற்றைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே விற்பனை செய்கின்றன இந்த விழாக்கால சிறப்புச் சலுகைகள்.