இந்திய போக்குவரத்தில் ஆட்டோவின் பங்கு மகத்தானது. ஷேர் ஆட்டோக்கள் தான் சென்னையில் பல அவசரர்களை காப்பாற்றி வருகின்றன. இதனைக் குறிவைத்தே பஜாஜ் நிறுவனம் கியூட் ஆட்டோவை டாடா நானோவை விட குட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “பஜாஜ் கியூட்” பிரத்யேகமாக ஆட்டோ ஒட்டுனர்களுக்காகவே தயாரிக்கப்பட்டது. சிஎன்ஜி (CNG) பெட்ரோல் மற்றும் எல்.பி.ஜி (LPG) ஆகிய மூன்று வேரியண்டில் இந்த கியூட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் மாடல் தான் வெளிவந்துள்ளது. சிஎன்ஜி மாடலில் 45 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கிறது.

எஞ்சின் 216 சிசி திறன் கொண்டது. இரண்டு ஸ்பார்க் இக்னிஷன் இருப்பதால் ஸ்டார்டிங்கில் சிக்கல்கள் இருக்காது. ஒற்றை சிலிண்டர் கொண்ட இந்த எஞ்சின் லிக்விட் கூல்ட் முறைப்படி கூலிங் செய்யப்படுகிறது. சீக்வன்ஷியல் கியர்பாக்ஸ் இதில் தரப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து கியர்கள்.
இந்த ஆட்டோவில் குவாட்ரி சைக்கிளில் ரவுண்ட் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் அலுப்பில்லாமல் ஓட்டுனர்களால் வண்டியை இயக்க முடியும்.

கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் (?) சில சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது அதன் பைபர் பாடி. இது எந்த அளவுக்கு பயணிகளுக்கு பாதுகாப்பளிக்கும் என்பது சந்தேகமே. மேலும் இதில் டிரைவர் இல்லாமல் மூன்று பேர் தான் அமர முடியும். ஷேர் ஆட்டோ போல டிரைவர் சீட்டை இருவரெல்லாம் பங்குபோட முடியாது.
தற்போது புழக்கத்தில் உள்ள ஆட்டோக்களில் உள்ள எஞ்சின் 198 சிசி திறன் கொண்டது. பஜாஜின் கியூட் அதைவிட வெறும் 18 சிசி தான் அதிகமானது. ஆகவே இந்தப்புதிய ஆட்டோவின் செயல்திறன் எந்த அளவிற்கு பழையதை விட சிறப்பானதாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இதில் உள்ள மற்றொரு ஆறுதல் இதன் விலை. பெட்ரோல் மாடல் ரூ.2.48 லட்சம் எனவும் சிஎன்ஜி மாடல் ரூ. 2.78 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த கியூட் – ஐ எத்தனை பேர் காதலிக்க இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியும்.