அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் போன்று சீனாவில் இயங்கி வரும் இணையதள வர்த்தக நிறுவனம் அலிபாபா (Alibaba) ஆகும். இணையதள விற்பனையில் உலக அளவில் கொடி கட்டிப் பறக்கிறது இந்த நிறுவனம்.
அலிபாபா ஆண்டு தோறும் நவம்பர் 11 – ஆம் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. உலகில் உள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒன்றாகவும் இது இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 11.11 என்னும் பெயரில் இந்த வருடத்திற்கான தள்ளுபடி விற்பனையை இந்த நிறுவனம் நடத்தியது.
இந்தத் தள்ளுபடி விற்பனை தொடங்கிய உடனேயே மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் விற்பனை ஆகத் தொடங்கின. இதனால் 5 நிமிடத்தில், சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை ஆகின. விற்பனை தொடங்கிய முதல் 2 நிமிடங்களிலேயே 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. இது ஒரு மணி நேரத்தில் 10 பில்லியன் டாலராக (சுமார் ரூ.72 ஆயிரம் கோடி) உயர்ந்தது.
பல்வேறு சலுகைகள், அதிரடி விலைக் குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், போட்டியாளர்களை அதிர்ச்சிக்குளாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்குப் பொருட்கள் விற்பனையாகின்றன.

எப்போதும் போலவே, இந்த வருட விற்பனையிலும் பல நாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் குவித்துள்ளனர். இந்தத் தள்ளுபடி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விற்பனை ரூ.72 ஆயிரம் கோடியைத் தொட்டு சாதனை படைத்தது.
அந்த நாள் முடிவில், மொத்த விற்பனை ரூ. 2,13,500 கோடி ரூபாயை எட்டி, அந்நிறுவனத்தின் முந்தைய சாதனையான ரூ.1,65,000 கோடி அளவிலான பொருட்கள் விற்பனை செய்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தது.