அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனர் ஜாக் மா – வின் நிர்வாக உத்திகள்

0
88
Credit : WSCA World

அலிபாபா குழுமத்தின் (Alibaba Groups) இணை நிறுவனரான ஜாக் மா (Jack Ma) திங்கட்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

1999-ஆம் ஆண்டு, 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ (Hangzhou, China) நகரத்தில் தொடங்கப்பட்ட அலிபாபா இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனமாக வளர்ந்துள்ளது. 11 வருடங்களுக்கு மேலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியுள்ள ஜாக் மா, ஒரு சிறந்த நிர்வாகிக்கு எடுத்துக்காட்டாக, பலருக்கு முன் மாதிரியாக உள்ளார். எனவே, நீங்களும் ஜாக் மா போல ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தால் இந்தக் கட்டுரை அதற்கு வித்திடும்.

அவரது தலைமைத்துவ அணுகுமுறை

எப்போதும் நம் சிந்தனையும் செயலும் பிறரிடம் இருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருக்க வேண்டும். எந்தத் துறையிலும் முன்னேற இது தான் வழி. ஜாக் மா-வின் சிந்தனையும் வித்தியாசமானது. அறிவார்ந்த மக்களைச் சிறப்பாக வழி நடத்த ஒரு முட்டாளால் முடியும். நீங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்து மக்களைப் பார்த்தால் நிச்சயமாக  வெற்றி பெற முடியும் என்று அவர் எப்போதும் கூறுவார்.

நிர்வாகத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

ஆண்களை விடப் பெண்கள் அதிகப் புரிதலை உடையவர்கள். கடவுள் கொடுத்த மிகப் பெரிய ஆயுதங்களில் பெண்களும் ஒன்று. அவர்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்கிறார்கள். எளிதில் எந்தவொரு திட்டத்தையும் புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்று பெண்களுக்கு நிர்வாகத்தில் முன்னுரிமை அளிப்பவர் ஜாக் மா.

விடாமுயற்சியின் முக்கியத்துவம்

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. எந்த உழைப்பும் வீண் போவதில்லை. இன்றைக்கு இல்லையென்றாலும் என்றேனும் ஒரு நாள் நாம் விதைத்ததை அறுவடை செய்யலாம். இன்று கடினமான நாளாக இருக்கும். நாளை மிகவும் கடினமான நாளாக இருக்கும். ஆனால், நாளைய மறுநாள் அழகான ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உடையவர் ஜாக் மா.

இந்திரா நூயி-யின் வியக்க வைக்கும் வியாபார உத்திகள் 

விட்டுக் கொடுத்தல்

நாம் நினைத்த செயலை அல்லது நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செயலை நாம் எப்போதும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அது நாம் தன்னம்பிக்கை அற்றவர் என்ற பிம்பத்தைத் தரும் உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுப்பது மிகப் பெரிய தோல்விக்கு உங்களை இட்டுச் செல்லும் என்பார் ஜாக் மா.

Credit : Xhinhunia.com

இ-பே உடனான போட்டி

கடலில் உள்ள திமிங்கலமாக இ-பே (ebay) இருக்கலாம். ஆனால், நான் நதியில் உள்ள முதலை. நாம் கடலில் சண்டையிட்டால் தோற்றுப் போவோம். ஆனால், நதியில் நம் வெற்றியை யாராலும்  தடுக்க முடியாது என்று ஜாக் மா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

நம் பலம் பலவீனங்களை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பலவீனமான இடங்களில் சற்றுப் பதுங்கவும், பலமான துறையில் தெளிவாகப் பாயவும் இந்த சுய ஆய்வு நமக்கு உதவும்.

மேலாண்மைக்கான முன்னுரிமைகள்

தனது நிர்வாகத்தில் தான் அளிக்கும் முன்னுரிமையை ஜாக் மா இவ்வாறு பட்டியலிடுகிறார்.

  • வாடிக்கையாளர்கள்
  • முதலாளிகள்
  • பங்கு தாரர்கள்

இதன் அடிப்படையில் தான் இவர் நிறுவனத்தை வழி நடத்தினார். உங்கள் போட்டியாளர்களைக் கண்டு கொள்ளாதீர்கள், உங்கள் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்துங்கள் வளர்ச்சி நம்மைத் தேடி வரும் என்று ஜாக் மா கூறுவார்.

சரியான நபர்களைப் பணிக்கு எடுப்பது

பணத்தைச் செலவு செய்வதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. கனவு உள்ள நபர்களுக்குத் தான் இங்குத் தேவை. தன் கனவு வெற்றி பெற இறக்கவும் நேரிடலாம். அப்படிப்பட்டவர்களைத் தான் பணிக்கு எடுக்க விரும்புவேன் என்பார் ஜாக் மா.

இளைஞர்கள் எதிர்காலத்திற்காகப் பிரமிப்புடன் காத்திருந்தால், தற்போதைக்கு நேர்மையுடன் செயல்பட வேண்டும். கடந்த காலத்திற்கு நன்றியுடன் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார் ஜாக் மா.

இவற்றைக் கடைப்பிடித்தால் நீங்களும் நாளைய ஜாக் மாவாக இருக்கலாம்.

என் வெற்றிக்கான காரணம் இது தான் – மனம் திறக்கும் சுந்தர் பிச்சை