ஒரு புதிய தொழிலைத் துவங்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், முயன்றால் எதிலும் வெற்றி சாத்தியமே. நீங்கள் கற்றுக்கொண்ட பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழக அளவிலான கல்வியையும் விட உங்களுக்கு ஏராளமான விஷயங்களை தொழில் அன்றாடம் கற்றுக்கொடுக்கும். அவற்றுள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. பணம் மட்டுமின்றி சிறந்த ஊழியர்களும் தேவை:
நிறைய தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பணத்தை மட்டுமே, மூலதனமாக கொண்டு துவங்குகின்றனர். ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்த பணம் மட்டுமின்றி சிறந்த ஊழியர்களும் (better employee’s) நமக்குத் தேவை. சிறந்த ஊழியர்கள் தான் ஒரு நிறுவனத்தின் பலம். சிறந்த ஊழியர்களை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதை நாம் கருத்தில் கொண்டு ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும்.
2. வாடிக்கையாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்துங்கள்:
தொழில் என்பது வாடிக்கையாளர்களை சார்ந்தே அமையும். எனவே, வாடிக்கையாளர் மீது கவனம் செலுத்துங்கள், அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துங்கள். நமக்கு பல வித்தியாசமான ஐடியாக்கள் இருந்தாலும் அது வாடிக்கையாளர்களுக்கு தேவையானதா? என்பதை தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.
3. தொழிலில் ஒரு பணியாளராகவும், பங்குதாரராகவும் இருக்க வேண்டும்:
நீங்கள் உங்களது தொழிலில் உரிமையாளர் அல்லது முதலீட்டாளராக இருந்தால், உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் வாடிக்கையாளர்களை போன்று கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, உங்கள் தொழிலில் ஒரு பணியாளராகவும், பங்குதாரராகவும் உங்களைப் எண்ணிப் பார்க்க வேண்டும்.
4. உங்களுக்கான சரியான தொழிலை தேர்வு செய்க:
சில நேரங்களில், வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான வேறுபாடு உங்களுக்கான சரியான தொழிலை தேர்வு செய்வதை பொருத்து அமையும். சில சமயங்களில் சந்தை நிலவரம் (market conditions) உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தேர்வு செய்யும் தொழில் உங்களுக்கு வெற்றியடையாமல் போகும்.
எடுத்துக்காட்டாக, பெரும்பாலான நாடுகளில் உள்ள விமானத் தொழில் 2% க்கும் குறைவான லாப அளவைக் பெற்று வருகிறது. அதேபோன்று, பெரும்பாலான விமான நிறுவனங்கள் திறமையானவர்களால் நடத்தப்பட்டாலும் போதிய வருமானம் கிடைப்பதில்லை.

5. எந்த நிலையிலும் விடாமுயற்சி:
நம்முடைய தொழிலில், எல்லாம் நமக்கு சாதகமாக இருந்தால் நமக்கு எப்போதும் ‘பாசிட்டிவான‘ எண்ணங்களே ஆக்கிரமித்திருக்கும். அதேசமயம், தொழில் ‘நெகட்டிவாக’ செல்லும் பட்சத்தில் பெரும்பாலான தொழில்முனைவோருக்கு அதிலிருந்து வெளியேறும் எண்ணமே தோன்றும். வெளியேறும் எண்ணம் உள்ளவர்கள் தொழிலில் வெற்றி அடைந்ததில்லை. எந்த நிலையிலும் விடாமல் முயற்சி செய்தவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
6. தொழிலின் ஆரம்பத்தில் இருந்தே சேமிக்கத் தொடங்குங்கள்:
நீங்கள் தொழில் துவங்கிய பின் ஆரம்பத்தில் இருந்தே சிறிது, சிறிதாக சேமிக்கத் தொடங்குங்கள். உங்கள் சேமிப்பை உங்கள் தொழிலில் முதலீடு, செய்யலாம். சேமிப்பு உங்களுக்கு இறுதியில் வெற்றியை தருகிறது.
7. கடனை சிறப்பாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்:
கடன் வாங்கி ஒரு தொழிலைத் துவங்குவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். குறிப்பாக, நீங்கள் முதல் முறையாக தொழில் துவங்குபவராக இருந்தால் சில சமயங்களில் வெற்றியை பெறும் முன் பல தோல்விகளை சந்திக்கவேண்டியது வரும்.
அப்பொழுது, முதலீட்டாளர் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும். சில தொழில்முனைவோர், வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் வீட்டுக் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களை கொண்டு தொழிலை துவங்குகின்றனர்.
இது போன்ற சூழலில், மிகவும் கவனமாக இருங்கள். நீங்கள் தொழிலில் வெற்றி அடைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். வெற்றிகள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகே கிடைக்கும். மேலும், உங்கள் கடன் நிர்வகிக்கக்கூடிய வரம்புகளுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
8. ஒரு நல்ல வழிகாட்டியைக் தேர்ந்தெடுக்க வேண்டும்:
உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு புத்திசாலித்தனமான எவரேனும் ஒருவர் உங்களுக்கு உறுதுணையான, வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
நல்ல வழிகாட்டி என்பவர், வியாபாரத்தில் வெற்றியைப் பற்றிய வலுவான பதிவுகளைக் கொண்ட, உங்கள் கருத்தை நம்புகிற, நேர்மையான கருத்துக்களை உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கும் ஒருவராக இருக்க வேண்டும்.