விஸ்கி என்றால் என்ன? என்று கேட்கும் உத்தமர்கள், ஜீன்ஸ் போட்ட புத்தர்கள் அடுத்த பதிவிற்குச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்ற அதி உத்தமர்கள் இங்கேயே இருங்கள். நமக்கு முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. லண்டன் இருக்கிறதல்லவா? அங்கு கிறிஸ்டிஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று இருக்கிறது. பழையது என்றால் ஆகப் பழையது அனைத்தையுமே அங்கு வாங்கலாம். மரகதக் கல், பிங்க் நிற வைரம் என சில்லரைகளைத் தெறிக்கவிடும் பொருட்களும் இங்கே ஏராளம். சரி, அதையெல்லாம் விடுங்கள். நாம் நம்ம விஷயத்திற்கு வருவோம். சென்ற வாரம் 60 ஆண்டுகள் பழைமையான விஸ்கி பாட்டில் ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது. பழையது என்றால் விற்பனைக்கு எளிது. ஏலம் என்று வந்துவிட்டால் விமானமாய் இருந்தால் என்ன? விஸ்கியாய் இருந்தால் என்ன ? விற்றுவிட வேண்டியதுதானே? வாங்கவா ஆட்கள் இல்லை.

நிபுணர்
இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளை கிறிஸ்டி நிறுவனம் வாங்கும்போதும் பொருளின் தரத்தை ஆராய நிபுணர் ஒருவர் இருப்பார். அப்படி இந்த மதுபாட்டிலையும், அதன் “தரத்தையும்” Tim Triptree என்பவர் ஆராய்ந்திருக்கிறார். அவர்தான் கிறிஸ்டி நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் இருந்துவரும் மதுவகைகளை ஆய்வு செய்யும் அதிகாரி. எப்படி ஒரு வேலை? கொடுத்துவைத்தவர் !!
எங்கே விட்டேன்? ஆமாம், 60 வருடம். நீங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கான விஷயம் அதுவல்ல. அந்த பாட்டிலின் விலை தான் அனைவரையும் போதையேறச் செய்திருக்கிறது. விலையைச் சொல்லப்போகிறேன். எதையாவது கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். தயாரா? சரி. பாட்டிலின் விலை 10 கோடியே 67 லட்சம் ரூபாய் (15.3 லட்சம் அமெரிக்க டாலர்கள்). இவ்வளவு பணமிருந்தால் நம் நாட்டில் “எத்தனை வாங்கலாம்” என்று யோசிப்பதற்கு முன் அப்படியென்ன இந்தப் பாட்டிலில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஏன் இவ்வளவு விலை ?
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தின் வட கிழக்குப் பகுதியில் …… சரி பூகோளம் எல்லாம் வேண்டாம் நாம் பாட்டிலுக்கே திரும்பி விடுவோம். Macallan என்னும் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனம் தயாரித்த இந்தப்பாட்டில் சுமார் அறுபது வருடங்கள் புட்டியில் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறது. வைன், விஸ்கி போன்றவை நாளாக நாளாகத்தான் அதன் மதிப்பு அதிமாகும் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால் தான் இவ்வளவு விலை. இதனை வாங்கிய குடிமகன் பற்றி அந்த நிறுவனம் வாயைத் திறக்கவே இல்லை. அதேபோல் பாட்டிலின் மீதுள்ள இத்தாலிய ஓவியர் ஒருவரின் ஓவியமும் புகழ்பெற்றதாகப் பேசப்படுகிறது. ஓவியமா முக்கியம் என்கிறீர்களா? எனக்கும் அதே சந்தேகம் தான்.