ஒன்பது வருடங்களாகிப் போயின … சிரியா மண்ணில் தானோஸ் வந்திறங்கி. அவனுடைய ஒவ்வொரு கல்லும் பல்லாயிரம் முறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுக்கள். அவன் முஷ்டியை முறுக்கி உயிர்களை நசுக்குகிறான். ரத்தம் வழியவில்லை. அவனுடைய 16 வகையான மூளைகளின் போர் வெறியினால் ஏற்பட்ட சூட்டால் அது ஆவியாகிறது. அவனுடைய பசிக்கு உணவாக மனித உயிர்கள். வற்றா தாகத்திற்கு எண்ணெய் வளங்கள். நொறுக்குத்தீனிகளாக சிதறும் தோட்டாவும் பீரங்கிக் குண்டுகளும். ஆம். அவனுக்கு பசிக்கிறது. அடங்காப்பசி.
போரும் வாழ்வும்
எட்டு ஆண்டுகளாக நடந்துவரும் அப்பேரரக்கனின் ஆட்சியைப் பற்றி வெளிவந்த பலவிதமான இணையவழிக் கட்டுரைகள், கதைகள் , செவிவழிக் செய்திகள், வாய்வழி வதந்திகள் என அனைத்துமே மண்டையையும், மனத்தையும், குழப்பி வதைத்தனவேயன்றி புரியும்படி விளக்கியதேயில்லை. யார் அந்த அரக்கன்? தவறு. யாரெல்லாம் அந்த அரக்கன்? எதற்காக இந்த கோரத்தாண்டவம்? போரில் தேவைக்கேற்ப விதவிதமான காரணங்களால் விதவிதமான வடிவத்தில் வித்தியாச வித்தியாசமான பெயர்களில் எப்படி அவனால் உருப்பெற முடிகிறது. எப்போது தீரும் அவனுடைய அந்தமில்லா உயிர்ப்பசி? என்ற ஒரு கேள்வியைத் தவிர அனைத்து குழப்பத்திற்கும் அசாதரணமாக விடையளித்திருக்கிறார் ஆசிரியர் பழ.மாதவன்.
இடியாப்பச் சிக்கலான தீவரவாத அமைப்புகளின் வழித்தோன்றலையும் , அவற்றிற்கு இரைபோடும் பல்வேறு நாடுகளின் நோய்படிந்த நோக்கங்களையும் போகிற போக்கில் ஸ்டிக்கர் பொட்டை நெத்தியில் ஒட்டும் நேரத்தில் மண்டையில் ஒட்டிவிட்டுப் போகிறார் ஆசிரியர். புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி “மிச்சியோ காக்கூ” கூறுவது போல ஒன்றை விளக்கி ஒருவருக்குப் புரியவைக்க முடியாவிடின் அதனைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது என ஒத்துக்கொண்டு விலகிவிட வேண்டும். அப்படிப்பட்ட குழப்பமான சிரியா விவகாரத்தை இலகுவாக கையாண்டிருக்கிறார்.
முதல் பக்கம்
ஒரு நாவலின் முதல் பக்கம் மிக முக்கியமானது. அதுவே அப்புத்தகம் படித்து முடிக்கப்படும் வேகத்தை தீர்மானிக்கிறது. ஜோர்டான் எல்லையில் துவங்குகிறது இந்நூல். சிரியாவை விட்டு தப்பிச் செல்லும் அகதிகளின் ஒரு குடும்பமாக மகன் வஹாபும், தந்தையுமாக வரும் நஜீமும் மட்டுமே நமக்குத் தெரிந்த முகங்கள். அவர்களே நமது உறவினர்கள். இணையத்தில் பார்த்து மனதில் உலவும் சிரியாவின் பெரும்போரில் அடிபட்ட, ஊனமுற்ற, உயிரிழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளின் முகங்களுக்கு உயிரூட்டி மனதில் எடையேற்றிவிட்டு போகிறான் வஹாப். அல்லது போகிறார் ஆசிரியர்.
சிரியாவின் தந்தை ஹபீஸ் அல் ஆசாத் தின் சர்வாதிகாரத்தையும் அதனால் வெறுப்படைந்த மக்களையும் கண்டு தேவபுத்திரனாக வரும் பஷார் அல் ஆசாத் ஒரு நம்பிக்கை நாயகனாக நமக்குப் பட்டாலும், மக்கள் எதிர்ப்பின் ஒரு துரும்பைக் கண்டு அதுவரை அவர் ஜீனில் உறைந்திருந்த ஹபீஸ் அல் அசாத் வெளிப்படுவது முதல் சூடுபிடிக்கிறது நமது ஆர்வம்.
ஒவ்வொரு சரித்திரத்திலும் இயல்பாக வருகிற கதாநாயகனை தவிர, இங்கே எதிரி(கள்), துரோகிகள் என பல்வேறு கதாப்பாத்திரங்கள் பல்வேறு இயக்கங்களாக வருகின்றன. குறிப்பிடத்தக்க துரோகிகளை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன். எல்லா கெட்ட தலைப்புக்குள்ளும் அடங்கும் அமெரிக்கா, கல்யாண வீட்டில் மொய் நோட்டுபோல இறந்தோர்களின் எண்ணிக்கையை மட்டுமே எண்ணும் கணக்குக் தெரியாத ஐ.நா சபை, அரபு வசந்தத்தில் துவங்கிய தீவிரவாதம், அசாத்தின் பிடிவாதத்தில் வளர்ந்த தீவிரவாதம், பல்வேறு சிற்றினவாதமாக சிதைந்து, அதன் ஒரு பெரும்பகுதியில் ஒன்று ஒருவரி வரலாறாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுதான் ஐஸ்ஐஸ்.
வல்லரசுகள்
சிரியப் போரை எந்த ஒரு கோணத்தைப் பாரத்தாலும் அதில் அமெரிக்கச் சகுனிகளின் ரத்தம் படிந்த பல்லை சிரித்தவாறு காணமுடியும். சிரியப் போர் ஒரு ஆட்சிக்காக நடக்கும் போரல்ல. அது பல அதிகாரப்பூர்வமற்ற தீவிரவாதிகளின் ஆணவத்தின் போர். இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுவே ஆசிரியரின் உழைப்பும் கூட.
எப்பெரிய மரத்தின் விதையும் கையளவு தான். இப்பெரிய யுத்தத்தின் விதையும் ஒரு ஏழையின் மரணம்தான். அவ்விதையே சிரியாவில் விண்கல்லாக விழுந்து அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. படிக்கும்போது சில இடங்களில் கைகளில் எடைகூடியது போல அடுத்த பக்கத்தை திருப்புவதற்க்குள் ஆகும் காலதாமதமே இப்போரை மனதளவில் புரிந்துகொள்வதற்கு ஆதாரம். முழுப் புத்தகத்தையும் படிப்பதற்க்குள் நமக்கு அஷ்டரசமும் மாறி மாறி வந்துவிடும் அளவிற்கு குழப்பமில்லாமல் பதிவு செய்துள்ளமைக்கு ஆசிரியரைப் பாரட்டலாம். ஆங்காங்கே வெளிப்படும் சில நகைச்சுவையால் (ஒன்பதாவது ரசம்) இக்கடினமான நிகழ்கால வரலாற்றை எளிமையாக நம்மால் புரட்ட முடிகிறது.
பலநூறு பக்க ரத்த சரித்திரித்தை சில பத்து பக்க சுருக்கமான “ பாரா” வாக கொண்டுவந்திருந்த காரணத்தால் ஏற்படும் சில சந்தேக குழப்பங்களை தவிர்க்க முடியவில்லை. அதற்கான விடையும் வாசகர் சிந்தித்துக் கொண்டு படித்தாலே கிடைத்துவிடும். எனினும் ஆரம்பநிலை வாசகர்களிடம் கேள்வியைத்தூண்டி பின்னால் அதற்கு ஆசிரியரே விடையும் தருகிறார். சிரியாவின் போர் பற்றி தமிழில் வந்துள்ள முதல் புத்தகம் இதுதான்.
கிண்டில் மின்னூலாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்.