புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவதற்கு ஒரு அரிய வாய்ப்பினை தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் இந்தவருடம் பெற்றிருக்கிறார்கள். பாரதி புத்தகாலயத்தின் கடும் முயற்சியினால் இந்த இமாலய இலக்கானது எட்டிப்பிடிக்கப்பட்டிருகிறது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பதிப்பகங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். டிச-31, ஜனவரி 1, 2019 இந்த நிகழ்வானது நடைபெற இருக்கிறது. இன்று இரவு முழுவதும் ஏராளமான பதிப்பகங்கள் தங்களது விற்பனையைத் தொடர இருக்கிறார்கள்.

புத்தாண்டு என்றாலே கேளிக்கைகள் என மாறிப்போன இந்தக் காலகட்டத்தில் மக்களை புத்தகங்களை நோக்கி ஈர்க்கும் இந்த முயற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். மொபைல் போன், வீடியோ கேம்ஸ் என மதிமயங்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த மிகச்சிறந்த வாய்ப்பு இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளாக இம்முறை புத்தகங்களை வழங்கி ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வித்திடுங்கள்.
10% – 50% வரை கழிவு
‘புத்தகங்களோடு புத்தாண்டு!’ இயக்கத்தை 2005 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து பாரதி புத்தகாலயம் சார்பில் நடத்தி வருகிறது. டிச.31, ஜன. 1 ஆகிய இரு நாட்களும் 10% – 50%தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும். இன்று இரவு புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு இலக்கிய, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிகள்
- 7 மணிக்கு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த குழந்தைகள் நூல்களை குழந்தைகளே அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.
- 8 மணிக்கு உலகிலேயே முதல்முறையாக 2102 தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட ஒரிசா மாநில முன்னாள் தலைமைச்செயளலாளரும் தமிழ் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்விற்கு தஞ்சை தமிழ்பல்கலைக் கழகத்தின் மேநாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் தலைமை தாங்குகிறார்.
- இந்நிகழ்வில் தமிழ் இணைய கல்விக் கழகம், தமிழ் வளர்சித்துறை உயரலுவலர்களும் தமிழ் அறிஞர்களும், பதிப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
- தொடர்ந்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் தலைமையில், கவிஞர் இரா.தெ.முத்து ஒருங்கிணைப்பில் தமிழகத்தின் முன்ணணி கவிஞர்களின் கவியரங்கமும், பேராசிரியர் காளீஸ்வரனின் மாற்று ஊடக மையத்தின் சார்பில் நவீன நாடகமும், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாட்ஸ்அப் வாசிப்பா? புத்தக வாசிப்பா? என்ற தலைப்பில் விவாத மன்றமும், பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்வும், தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் பறையிசை நிகழ்வும் நடைபெற உள்ளது.