பறவைகள் என்றாலே அழகுதான். அவற்றில் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும் பறவைகள் இன்னும் அழகாக இருக்கும். அவ்வாறு உலகில் இருக்கின்ற வண்ணமயமான 10 பறவைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கிரேட்டர் பாரடைஸ் பறவை (Greater Bird-of-Paradise)
இதன் நிறம் தனித்துவமானதாக இருக்கும். இதில், ஆண் பறவையின் உடல் மெரூன் நிறமாகவும், பச்சை நிற முகமும், இளம் மஞ்சள் நிறத்தில் தலையின் மேற்பகுதியும் இருக்கும். அவற்றின் நீண்ட வால் இறகில் மஞ்சள் நிறமாகவும், நுனியில் வெள்ளை மற்றும் மெரூன் கோடுடனும் காணப்படுகிறது.
பெண் பறவையின், கண்கள் மஞ்சள் நிறத்திலும், அலகு பகுதி நீல நிறத்திலும் இருக்கும். ஆண் பறவை 17 அங்குலம் நீளம் வரை வளரும். இந்த பறவை பப்புவா நியு கினியா, இந்தோனேசியா மற்றும் அரு தீவுகளின் தாழ்நிலம் மற்றும் மலை காடுகளில் வாழ்கிறது.

வில்சன் பாரடைஸ் பறவை (Wilson’s bird- of-Paradise)
வில்சன் பாரடைஸ் பறவை 8.3 அங்குலம் வரை வளரும். இதில், ஆண் பறவை வண்ணமயமானதாகும். அதன் உடல் கருஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். அதன் தலை பகுதியில் நீல நிறத்திலும், கழுத்தின் பின் பகுதியில் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். அதன் வால் பகுதியை பார்த்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். காரணம், அதன் வால்பகுதி கம்பியை உருக்கி வளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
இந்த பறவை இனம் இந்தோனேசியாவில் அதிகம் காணப்படுகிறது. அத்துடன் மலை மழைக்காடுகளிலும் இந்த பறவை இனத்தை நீங்கள் பார்க்க முடியும். மேலும், வில்சன் பாரடைஸ் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அற்புதமான தேவதை ரென் (Splendid Fairy Wren)
தேவதை ரென் 5.5 அங்குலம் வரை வளரும். அதன் நெஞ்சு பகுதி மற்றும் கண் பகுதியில் கருப்பு நிற கோடு போன்று காணப்படுகிறது. இனப்பெருக்கம் செய்யாத போது ஆண் பறவைகளுக்கு நீல நிற இறக்கை மற்றும் பழுப்பு நிறத்தாலான வால் பகுதியும் இருக்கும்.இனச்சேர்க்கையில் ஈடுபடாத ஆண் பறவை பெண் பறவையை போன்றுதான் இருக்கும்.
இந்த பறவை இனங்கள் பெரும்பாலும் வறண்ட வானிலை கொண்ட பகுதியிலேயே வாழ்கின்றன. எனவே ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதிகளில் இந்த பறவைகளை நீங்கள் பார்க்கலாம்.

இந்திய மயில் (Indian Peafowl)
இது தென்ஆசிய நாடுகளில் காணப்படுகிறது. இந்த பறவையினம் ஈரமான மற்றும் வறண்ட இலையுதிர் வன வாழ்விடங்களை விரும்புகிறன. இது ஒப்பீட்டளவில் பெரிய பறவை. சுமார் 39 முதல் 45 அங்குலம் வரை உடல் அளவு இருக்கும். வாலுடன் சேர்த்து 77 முதல் 89 அங்குலம் வரை வளரக்கூடியது.
பின்புற இறகை மயில்கள் விசிறி போன்று விரிக்கையில், பச்சை, மஞ்சள் மற்றும் நீலநிறத்தில் காணப்படும். இதன் கழுத்துப்பகுதி பச்சை கலந்த நீல நிறத்திலும், தலையில் பூ போன்ற கொண்டையும் காணப்படும். ஆனால் பெண் பறவைகளுக்கு இந்த அளவு பெரிய தோகை இருப்பதில்லை.

இளஞ்சிவப்பு மார்பக ரோலர் (Lilac-Breasted Roller)
இந்த பறவை சஹாரா-ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மார்பக பகுதி இளம் சிவப்பாகவும், முதுகில் வெளீர் நீல நிறமும், இறக்கையின் அடிப்பகுதியில் அடர் நீல நிறத்திலும், இறக்கையின் நுனியில் கருப்பு நிறத்திலும் இருக்கும். இந்த பறவையில் ஆண், பெண் இருபாலினமும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

தேனீக்களை உண்ணும் சிவப்பு தாடி பறவை (Red- bearded Bee Eater)
தென்கிழக்கு ஆசியாவின் இந்தோ மலையன் பகுதியில் சிவப்பு தாடி பறவைகள் வாழ்கின்றன. இதில் ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒத்துக் காணப்படும். பிரகாசமான பச்சை நிற உடல், சிவப்பு தொண்டை பகுதி, ஊதா நிறத்தில் நெற்றி, கண் பகுதியில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தால் ஆனது. இதன் உணவில் முக்கியமாக தேனீக்கள் மற்றும் குளவிகள் உள்ளன.

லேடி கோல்டியன் பிஞ்ச் (Lady Gouldian Finch)
லேடி கோல்டியன் பிஞ்ச் ஒரு சிறிய, பல வண்ண பறவை. இரு பாலினமும் பச்சை, மஞ்சள், நீலம், ஊதா, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் காணப்படும். இவை, ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. அத்துடன் வெப்பமண்டல பகுதியிலேயே வாழ்கின்றன. 1992 ஆம் ஆண்டில் இது அழிந்து வரும் பறவை இனப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

டூக்கன் (Toucan)
டூக்கன் பறவைக்கு நீண்ட அலகு இருக்கும். அத்துடன் இது மிகவும் வண்ணமயமானதாகவும் இருக்கும். இந்த பறவை 29 அங்குலம் வரை வளருகிறது. இதன் உடலில் பொதுவாக, கழுத்துப்பகுதியில் வெள்ளையாகவும் மார்பு பகுதி கருப்பு நிறத்திலும் காணப்படும். கண்களைச் சுற்றி ஆரஞ்சு அல்லது பச்சை நிறத்தில் இருப்பதை காணலாம். மத்திய மற்றும் தென்கிழக்கு அமெரிக்கா முழுவதும் டூக்கன் காணப்படும்.

மாண்டரின் வாத்து (Mandarin Duck)
மாண்டரின் வாத்து கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது பொதுவாக காட்டுப் பகுதியிலேயே அதிகம் காணப்படும். ஆண் பறவையை விட பெண் பறவையின் நிறம் குறைவாக இருக்கும். கண்களுக்கு மேல் பெரிய வெள்ளை வளைவு, மற்றும் சிவப்பு-பழுப்பு நிற முகம் உள்ளது. இதன் மார்பகம் ஊதா, நிறத்திலும் காணப்படும்.

ஸ்கார்லெட் மக்கா (Scarlet Macaw)
ஸ்கார்லெட் மக்கா ஒரு பெரிய கிளி இனம். இது 32 அங்குலம் வரை வளருகிறது. முக்கியமாக இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் மேல் இறக்கையில் மஞ்சள் நிற பட்டையுடனும், நீல இறக்கைகளுடனும் காணப்படுகிறது. ஸ்கார்லெட் மக்கா அமேசான் பேசின் தென்அமெரிக்காவை சேர்ந்தது. ஆனால், மத்திய அமெரிக்கா முழுவதும் இதை காணலாம். இவை வெப்பமண்டல மழைக் காடுகளையே விரும்புகின்றன.

இவை அனைத்தும், உலகில் தற்போது உள்ள வண்ணமயமான பறவைகள். இவற்றை தவிர பல பறவை இனங்கள் இவ்வுலகில் பல காரணங்களால் அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.