Home பறவைகள் சிட்டுக்குருவி பற்றி உங்களுக்கு தெரியாத 9 உண்மைகள்!

சிட்டுக்குருவி பற்றி உங்களுக்கு தெரியாத 9 உண்மைகள்!

இனச்சேர்க்கைக்கு பெண் சிட்டுக் குருவியை கவர்வது, ஆண் சிட்டுக் குருவியின் பொறுப்பு. அதே போல் முட்டையிடுவற்கு ஆண் சிட்டுக் குருவிகளே கூடுகட்டி கொடுக்க வேண்டும்!

Image credit: pixabay/suju

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே… என்ற பாடல் வரிகளை நீங்கள் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ஆனால், சிட்டுக்குருவியை நீங்கள் பார்த்தது உண்டா? நீங்கள் நகரத்தில் வாழ்பவரானால் சிட்டுக்குருவியை பார்த்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவே… கிராமங்களில் இருந்தால் சிலரது வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். ஏனெனில், சிட்டுக்குருவி இயல்பாக மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.

முந்தைய காலத்தில் ஒவ்வொருவரும் காலையில் விழிக்க சேவலுக்கு அடுத்து சிட்டுக் குருவிகளே அலாரமாக உதவி வந்தன. கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் நாள் பொழுது துவங்குகிறது. சுறுசுறுப்புக்கும் பெயர் போன சிட்டுக்குருவி பற்றிய உங்களுக்கு தெரியாத 9 தகவல்கள் இங்கே…

சிட்டுக்குருவிகளின் உருவம்

சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியதாகவே இருக்கும். அவை 4 முதல் 8 அங்குலம் நீளம் வரை மட்டுமே வளர்கின்றன. அதன் எடை 27 லிருந்து 39 கிராம் அளவு இருக்கும்.

சிட்டுக் குருவிகளின் நிறம் பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் பறவை நிறத்தில் வேறுபட்டு காணப்படுகிறது.

சிட்டுக்குருவி பற்றிய 9 உண்மைகள்

சிட்டுக்குருவிகள் வசிப்பிடம்

சிட்டுக் குருவிகள் நம் மனித சமூகத்துடன் ஒட்டி வாழும் பறவையாகும். மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி ஆகியவற்றில் வசிக்கின்றன. தற்போதைய சூழலில், கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் அதன் வாழிடம் குறைந்துவிட்டது.

தவிட்டுக்குருவி என அழைக்கப்படும் ஒரு வகை மனிதர்களோடு சேர்ந்து வாழும் இயல்பு கொண்டவை. தற்போது குடியிருப்புகள் அதிகமாகி விட்டதால் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய இட வசதிகளும் குறைந்து விட்டது. சென்னை போன்ற பெருநகரங்கள் சிட்டுக்குருவிகள் வாழ முடியாத பகுதியாக உள்ளன. இருப்பினும் நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிலரது வீடுகளில் கூடு கட்டி வாழ்கின்றன.

Did you know?
இடங்கள் பெரும்பாலும் நகரமயமாக மாற்றப்படுவதால், புதர்கள் குறைவதே சிட்டுக் குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணம்!!

Also Read: பறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை!

சிட்டுக்குருவி உணவுகள்

சிட்டுக் குருவிகள் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற சிறு தானியங்களை அதிகம் உண்ணுகின்றன. தற்போதைய சூழலில், இதுபோன்ற உணவு வகைகள் சிட்டுக் குருவிகளுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை தவிர புழு, பூச்சிகள், வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சியினங்களையும் சாப்பிடுகின்றன. ஆனால், வயல்வெளிகளில் பூச்சி மருந்து தெளிப்பதால், சிட்டுக் குருவிகளுக்கு சிறு பூச்சிகளும் தற்போது கிடைப்பதில்லை. எனவே தான் சிட்டுக் குருவிகள் தொடர்ந்து அழிவை சந்தித்து வருகின்றன.

உலகெங்கிலும் திடீரென கடந்த 15 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்தது கூட வெட்டுக்கிளிகள் அதிகரிக்க காரணமாக இருக்கக்கூடும். இருப்பினும் இது பற்றி சமீபத்தில் ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை. 1950-களில் சீனாவில் சிட்டுக்குருவிகளை தேடித்தேடி சுட்டுக்கொன்றனர் சீனர்கள். பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் பயிர்களில் மிகவும் அதிகமாக பூச்சி தாக்குதல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் என விவசாயம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த உணவுப்பஞ்சத்தால் 1.5 கோடி மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sparrow facts 2

சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கம்

இனச்சேர்க்கைக்கு பெண் சிட்டுக் குருவியை கவர்வது, ஆண் சிட்டுக் குருவியின் பொறுப்பு. அதே போல் முட்டையிடுவற்கு ஆண் சிட்டுக் குருவிகளே கூடுகட்டி கொடுக்க வேண்டும்.

சிட்டுக்குருவிகள் எத்தனை முட்டையிடும் தெரியுமா? இனச்சேர்க்கைக்கு பின், பெண் சிட்டுக்குருவிகள் 3 லிருந்து 5 முட்டைகள் வரை இடும். அதை பெண் குருவி 12 முதல் 15 நாள் வரை அடைகாக்கும். குஞ்சு பொரித்த பின் 15 நாட்கள் கழித்து குஞ்சுகள் கூட்டை விட்டு பறக்கின்றன.

ஒரே ஆண்டில் பல முறை சிட்டுக் குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. சிட்டு குருவிகளில் பெற்றோரின் மரபணுவை (DNA) குறைந்த அளவிலேயே கொண்டிருக்கும்.

Did you know?
சிட்டுக் குருவியின் அழிவிற்கு செல்போன் டவர்கள் கதிர்வீச்சு தான் காரணம் என்று எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை!!

Also Read: அழிவின் விளிம்பில் இந்திய பறவைகள்! 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்!

சிட்டு – பறத்தல் மற்றும் நீந்துதல்

சிட்டுக் குருவிகள் ஒரு மணி நேரத்தில் சுமார் 38 கி.மீ (24 மைல்) வேகத்தில் பறக்கின்றன. தேவையிருப்பின் அவசர காலத்தில் 50 கி.மீ (31 மைல்) வேகத்தில்பார்க்கக்கூடிய திறனுடையவை.

சிட்டுக் குருவிகளை நீந்தும் பறவையாக கருதுவதில்லை. ஆனால், அவை ஆபத்திலிருந்து தங்களை தானே தற்காத்துக் கொள்ள வேகமாக நீந்துகின்றன.

சிட்டுக்குருவி சத்தம்

சிட்டுக் குருவியின் குரல் இடைவிடாது பாடும் அமைப்பு கொண்டுள்ளது. இது ஆண் சிட்டுக் குருவிகள் கூடுகட்டிய பின், தங்கள் கூட்டின் உரிமையை பறைசாற்ற பாடுகின்றன. பெண் சிட்டுக் குருவியை இனச்சேர்க்கைக்கு தூண்டவும் ஆண் சிட்டுக் குருவிகள் குரலை பயன்படுத்துகின்றன. சிட்டுக்குருவிகளின் சத்தம் காதுக்கு இதமானது. கிராமங்களின் பின்னணி இசையே சிட்டுக்குருவிகளின் சத்தம் தான். சிட்டுக்குருவிகளின் ஓசையை இங்கே கேட்டு மகிழுங்கள்.

https://www.youtube.com/watch?v=Y0lM4sTsao8

Also Read: வேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்!

சிட்டுக்குருவிகளின் வேறு பெயர்கள்

சிட்டுக் குருவிக்கு பல பெயர்கள் உள்ளது. அடைக்கலாங் குருவி, ஊர்க் குருவி, வீட்டுக் குருவி என்று குறிப்பிடுவர். சங்க கால இலக்கியத்தில் சிட்டுக்குருவிகள் மனையுறைக் குருவி, உள்ளுறைக் குருவி, உள்ளூர் குருவி என்று குறிப்பிடப்படுகின்றது.

சிட்டுக்குருவிகள் தினம்

சிட்டுக் குருவிகள் அழிந்து வருவதால் 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக் குருவி தினமாக (உலகச் சிட்டுக்குருவிகள் நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் டெல்லி அரசு 2012 ஆம் ஆண்டிலிருந்து சிட்டுக் குருவியை தங்கள் மாநில பறவையாக அறிவித்தது. ஜப்பானில் சிட்டுக் குருவிகள் மக்களுடன் இணக்கமாக இருப்பதால், நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

சிட்டுக்குருவி ஆங்கில பெயர் | சிட்டுக்குருவி in English Word
How to say சிட்டுக்குருவி in English? சிட்டுக்குருவிக்கு ஆங்கிலத்தில் Sparrow, House Sparrow என அழைக்கப்படுகிறது.

சிட்டுக்குருவிகள் அழிவுக்கு காரணம் என்ன?

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல கண்டங்களில் சிட்டுக் குருவிகள் உள்ளன. சிட்டுக்குருவிகளின் ஆயுட்காலம் 13 ஆண்டுகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய சூழலால் 4 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே சிட்டுக் குருவிகள் உயிர் வாழ்கின்றன.

சிட்டுக் குருவிகள் வெகுவாக குறைந்து வருகின்றது. பலரும் சிட்டுக் குருவிகளின் அழிவிற்கு, செல்போன் டவர்களே காரணம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், ஆராச்சியாளர்கள் தரப்பில், தொழிற்சாலைகள் மற்றும் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுதல், வயல்களில் பூச்சி மருந்து அடித்தல் போன்ற காரணங்களாலேயே சிட்டுக் குருவிகள் அழிவை சந்திப்பதாக குறிப்பிடுகின்றனர்.

சிட்டுக் குருவிகள் நம்முடன் வாழும் ஒரு அற்புத படைப்பு. அவற்றை பெருக்க இயற்கை முறையில் விவசாயம் செய்வது சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பறவையியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய சூழலை உருவாக்குவது நம் கடமையே…

NO COMMENTS

error: Content is DMCA copyright protected!