Home வாகனங்கள் விற்பனைக்கு வந்த யமஹா ஆர் 15 வி 3.0 பைக்கின் மோட்டோ ஜீபி எடிஷன்!!! 

விற்பனைக்கு வந்த யமஹா ஆர் 15 வி 3.0 பைக்கின் மோட்டோ ஜீபி எடிஷன்!!! 

யமஹா இந்தியா நிறுவனம் (Yamaha India,) தனது யமஹா ஆர் 15 வி 3.0 என்ற புதிய ரக ஈருருளியை சந்தைப்படுத்தியிருக்கிறது. மோட்டர் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டிருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையே உற்பத்தி செய்யப்பட்ட இந்த வண்டிகளை யமஹாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வாங்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது.

Credit: Vyavashith

அதிவேக பைக்

யமஹா நிறுவனம் ஆண்டு தோறும் நடைபெறும் மோட்டோ ஜீபி (Grand Prix motorcycle racing) பந்தயத்தில் தவறாமல் கலந்து கொள்ளும். பந்தயத்தில் யமஹாவின் சார்பில் களமிறங்கும் எம்1(M1), இளைஞர்களின் கனவுலக பைக்குகளில் ஒன்று. இதனை அறிந்தே யமஹா நிறுவனம் தனது ஆர் 15 வி 3.0 மோட்டோ ஜீபி யை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் கனவு நிஜமாகியுள்ளது என்றே சொல்லலாம்.

Credit: Bike India

தோற்றத்தைப் பொறுத்தவரையில், எம்1-ல் இருப்பது போன்றே ஓட்டுப்படம்(Sticker) கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பக்கவாட்டுப் பேனல்களில் கொடுக்கப்பட்டிருக்கும் யமலூப்(Yamalube) எண்ணெய் நிறுவனத்தின் இலச்சினை வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. மோவிஸ்டாரின்(Movistar) சின்னம் பைக்கின் முன்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பார்த்தவுடன் எம்1 ன் பிம்பத்தை கண் முன்னே கச்சிதமாக கொண்டுவந்து நிறுத்துகிறது.

Credit: Rush Lane

வேறு என்னென்ன மாறுதல்கள்?

மொத்தம் மூன்று வண்ணங்களில் களமிறக்கப்பட்டிருக்கிறது இந்த பைக். ரேஸிங் ஃ ப்ளூ (Racing blue), நீலம்-கருப்பு மற்றும் சிவப்பு-சாம்பல் நிறக்கலவையுடன் கிடைக்கிறது. 155 CC எஞ்சின். 19.3 பி.எஸ் (PS) பவரையும், 15 என்எம் டார்க்கையும் (15 NM Torque) தரவல்லது. வண்டியின் நிலைத்தன்மைக்காக டெல்டா பாக்ஸ் ஃபிரேம்(Deltabox frame) பொருத்தப்பட்டுள்ளது. வேக இயக்கத்தின் போது இவை சிறப்பான கட்டுப்பாட்டை ஓட்டுனருக்குத் தரும். ஆனால், இது ஆர் 15 வண்டியிலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  மற்றபடி,  6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ட்ரான்சிஸ்டார் கண்ட்ரோல்ட் இக்னிஷன்(Transistor controlled ignition), போர்(Bore) மற்றும் ஸ்ட்ரோக் (Stroke) அளவுகள் என எல்லாமே ஆர் 15 போன்றே உள்ளது. மொத்தத்தில் ஸ்டிக்கரையும், வண்ணத்தையும் தவிர பெரிய அளவிலான மாறுபாடுகள் இல்லை என்பதே உண்மை.

முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன விலை?

யமஹா ஆர் 15 வி 3.0  வண்டிக்கான விலை 1.30 லட்சம் என அறிவித்திருக்கிறது யமஹா நிறுவனம். இது முந்தைய மாடலைவிட 3000 அதிகம். மேலும், இப்பைக்கை யமஹாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்(www.yamaha-motor-india.com) மட்டுமே வாங்க முடியும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கை மட்டுமே உற்பத்தி செய்யவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில் எவ்வளவு நாள் இவ்விற்பனை இருக்கும் என்பதை யமஹா இன்னும் அறிவிக்கவில்லை.

- Advertisment -

Must Read

- Advertisment -