தனி ஒருவருக்காக வாடகைக் கார் எடுத்துப் போவதெல்லாம் மாதக் கடைசியில் மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கப்படுகிறது இன்று. காரணம், குறைந்த தொலைவிற்குச் சென்றாலும் கூட நிர்ணயிக்கப்பட்டக் கட்டணத்தை கொடுத்தாக வேண்டும். இதில் வாகன நெரிசல் தரும் தலைவலி வேறு. இப்படிப் பல சங்கடங்களை மனதில் கொண்டே, வாடகை பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது உபெர் (UBER) நிறுவனம். வாடகைக் கார்களை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இது தற்போது வாடகை பைக்கையும் நிர்வகிக்கத் துவங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டுத் துயரம்
சென்ற ஆண்டு சுமார் 4.5 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்தது உபெர். இதை ஈடுகட்டும் விதமாகப் பல புதிய, வருமானத்தை அதிகரிக்கக்கூடிய தொழில் யுக்திகளை பரிசீலித்து வந்த அந்நிறுவனம் வாடகை பைக் திட்டத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட தொலைவிற்கு காரில் செல்லும் பணத்தை விட பாதிப் பணத்தில் சென்று விடலாம். அதோடு நேரமும் மிச்சமாகும். இதற்காக மின்னாற்றலினால் இயங்கக்கூடிய பைக்குகளை வாங்க அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

இந்தியாவிற்கு எப்போது?
முதன்முறையாக அமெரிக்காவில் தான் இம்முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்தியாவில் ஏற்கனவே சண்டிகார், ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தட்டிருக்கிறது. விரைவில் இந்தியா முழுவதும் வாடகை பைக் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்நிறுவனத்தின் பொருளாதாரக் குளறுபடிகளைச் சரிசெய்த பின்னரே இத்திட்டத்திற்கான விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

கோவையில் தனியார் நிறுவனமொன்று ஏற்கனவே வாடகை பைக் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிலோமீட்டருக்கு 3 ருபாய் என அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் அம்மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், உபெர் போன்ற பெரிய நிறுவனம் இன்னும் விரைவாக தமிழகம் முழுவதும் கிளை தொடங்கவும் சாத்தியமுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள உபெர், இப்புதிய சேவையின் மூலம் நிறைய வாடிக்கையாளரிடம் சென்று சேரும் என எதிர்பார்க்கலாம். லிஃப்ட் கேட்டே பயணிக்கும் நம் மக்களிடம் உபெரின் வாடகை பைக் சாதிக்குமா? சறுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.