வாடகைக் கார்களின் ஒருங்கிணைப்பு நிறுவனமான உபெர் (Uber) உலகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி வருகிறது. மேலும், அந்நிறுவனம் கடந்த சில வருடங்களில் தனித்து இயங்கும் உந்துகளைத்(Autonomous Vehicle) தயாரிக்க இருக்கிறது. உபெரின் இப்புதிய ஆராய்ச்சியில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக டொயோடா(Toyota) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டொயோடா – வின் சார்பில் தனித்து இயங்கும் உந்துகளை உபெர் தயாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்து இயங்கும் உந்துகள்
ஓட்டுனரோ, உதவியாளரோ இல்லாமல் தானாகவே இயங்கும் வாகனங்களுக்குத் தனித்து இயங்கும் உந்துகள் என்று பெயர். கணினி மூலம் தனக்குத் தரப்பட்ட தரவுகளின் படி இவை இயங்கும். மனிதத் தவறுகளால் நடக்கும் சாலை விபத்துகளைக் குறைக்க இந்தப் புதிய முயற்சி மிகப்பெரிய திறவுகோலாக இருக்கும் என்று உபேரின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரிசோனா(Arizona) மாநிலத்தில் இந்தத் திட்டத்திற்காகவே பிரத்யேக ஆய்வகம் ஒன்றை நடத்தி வந்தது உபெர். கடந்த மே மாதம் உபெர் நிறுவனத்தின் தனித்து இயங்கும் உந்துகளுக்கான சோதனையின் போது துரதிர்ஷ்ட வசமாக ஒருவர் இறந்து போனார். காரின் பாதுகாப்பு வசதிகள் சரிவர இயங்காததே இவ்விபத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அரிசோனா மாநிலத்திலிருந்து வெளியேறிய உபெர் பென்சில்வேனியாவிற்கு(Pennsylvania) இடம் பெயர்ந்துள்ளது.

500 மில்லியன் டாலர்கள்!!
ஜப்பானைச் சேர்ந்த பிரபல வாகன உற்பத்தியாளரான டொயோடா நிறுவனம் 500 மில்லியன் டாலரை உபெரின் இப்புதிய முயற்சியில் முதலீடு செய்துள்ளது. தற்போது விற்பனையிலிருக்கும் சியன்னா (Sienna) காரினைத் தனித்து இயங்கும் தொழில்நுட்பத்துடன் களமிறக்கவே இந்த முதலீடு. 2021-ல் தனித்து இயங்கும் சியன்னாவை உபெரின் உதவியோடு விற்பனைக்கு டொயோடா அறிமுகப்படுத்தும்.
இந்தக் காரினை பென்சில்வேனியா மாகாணத்தில் தயாரிக்க இருப்பதாக உபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு பில்லியன் செலவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகத்தை 2015-ஆம் ஆண்டு திறந்தது டொயோடா நிறுவனம். இதுகுறித்து அந்தப் பிரிவின் தலைவர் கில் பிராட் (Gill Pratt) கூறுகையில்,” டொயோடா – உபெர் இடையேயான இப்புதிய ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானாக இயங்கும் வாகனங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்” என்றார்.
எதிர்காலம் எப்படி?

தனித்து இயங்கும் உந்துகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதவை. உலகில் ஆண்டுதோறும் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். வாகனங்களை இயக்கும் போது ஏற்படும் மனிதத் தவறுகளே இதற்கு மிக முக்கிய காரணம். செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கார்களுக்கு எதிர்காலத்தில் தேவை அதிகம் இருக்கும் என இத்துறை வல்லுநர்கள் கணிக்கிறார்கள். எனவே, பல முன்னணி கார் நிறுவனங்களும் தானாக இயங்கும் கார்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
பெரிய நிறுவனங்கள் கூட வாடகைக் கார்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையைப் பார்த்து பிரம்மிக்கின்றன. வளர்ந்த நாடுகளிலும் வாடகைக் கார்கள் மிகப் பிரபலம். மொத்த வாடகையையும் தாமே கொடுக்க வேண்டிய தேவையும் இருக்காது. பகிர்ந்து கொள்ளலாம். இதன் அடிப்படையைப் புரிந்து தான் பல கார் நிறுவனங்கள் வாடகைக் கார் நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கின்றன.
உபெர் வாடகை பைக்கையும் சந்தையில் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்படத்தக்கது. வெய்மோ(Waymo) நிறுவனம் லேண்ட் ரோவர்(Land Rover) மற்றும் ஜாகுவார்(Jaguar) கம்பெனிக் கார்களை வாங்கியது இதன் காரணமாகத்தான். எது எப்படியோ எதிர்காலத்தில் பயணச் செலவுகள் குறையும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அத்தோடு சாலை விபத்துகளில் இருந்து மக்களைக் காக்கவும் இம்மாதிரியான அறிவியல் திட்டங்களின் தேவை அவசியமாகிறது.