உள்நாட்டு உற்பத்தியில் தன்னிறைவைப் பெறுவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மாபெரும் திட்டம் மேக் இன் இந்தியா ஆகும். இதன்மூலம் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் விரிவாகத்திற்கான உதவிகள் அரசின் சார்பில் எடுக்கப்பட்டன. இதன் பலனாக டார்க் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் உற்பத்தித்துறையில் கால் பதித்தது. தற்போது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட T6X என்னும் பைக்கினை விற்பனைக்கு களமிறக்குகிறது அந்த நிறுவனம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டபோதே ஏராளமானோரின் வரவேற்பைப் பெற்றது. மேலும் அப்போதே புக்கிங் துவங்கிவிட்டது. இதனால் இந்திய வாகனத்துறையில் கடும்போட்டி ஏற்படும் என நம்பப்படுகிறது. ஆரம்ப விலை 1.6 லட்சம் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் பைக் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்
- முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
- முன் வீலில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்னால் மோனோ ஷாக் அப்சார்பரும் இருக்கிறது.
- பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ள மெயின் பிரேம் மற்றும் சப் பிரேம் அமைப்பு பார்வைக்கும், பாதுகாப்பிற்கும் சிறந்ததாக இருக்கிறது.
- ஸ்விங் ஆர்ம்களிற்கு இடையில் மோட்டாரானது வைக்கப்பட்டிருக்கிறது.
- 6 BHP அல்லது 8BHP திறனுள்ள மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.
- இதன்மூலம் 27 Nm அளவிற்கு டார்க் உற்பத்தி செய்யமுடியும்.
- பெல்ட் டிரைவ் மூலமாக இந்த மோட்டார் வீல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
- ஒரு மணிநேரத்தில் 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.
- TIROS (Tork Intuitive Response Operating System) என்னும் அமைப்பு இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓட்டுனர் தங்களுக்குத் தேவையான மோட்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

விற்பனை
இந்த எலெக்ட்ரிக் பைக் முதலில் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டும்போது 1.25 லட்சம் என விலை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய அம்சங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியதால் விலையேற்றம் தவிர்க்கமுடியாததாகிறது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் சந்தைக்கு வர இருக்கும் இந்த பைக்கிற்கு தற்போதே நூறு சார்ஜிங் நிலையங்கள் புனேவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மூன்று மாநிலங்களில் பைக் விற்பனையை நேரிடியாக டார்க் நிறுவனமே மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. மக்களின் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டினால் வெப்பமயமாதல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் வேளையில் முழுவதும் இந்தியாவிலேயே தயரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் பைக் எந்த அளவிற்கு விற்பனையில் சாதனை படைக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.