ஒரு கொட்டும் மழை நாளில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்ததைக் கண்ட போது தான் அவருக்கு அந்த யோசனை உதித்ததாம்.
2011ம் வருடம் ஒரு நேர்காணலில் அவர் அதை நினைவு கூர்கிறார், ” மழை காலங்களில் இந்தியர்கள் வழுக்கும் சாலைகளில், நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர். அதிலும் குழந்தைகள் பெற்றோருக்கு நடுவில் அமர்ந்து நசுங்கிக்கொண்டே செல்கின்றனர். இவர்களின் இந்த பாதுகாப்பற்ற பயணத்தைத் தான் நான் மாற்ற விரும்பினேன்.” என்கிறார்.
உங்களால் யூகிக்க முடிகிறதல்லவா? உலகின் மலிவான காரை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா தான் நானோ கார் (Nano Car) உருவாகிய விதத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நானோ கார்கள் தற்போது இறுதி காலத்தை நெருங்கி விட்டன. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார். மொத்தமாக முடியவில்லையெனில் மாதம் 10000 என பத்து மாதங்கள் தவணையில் கட்டிக் கொள்ளலாம். இப்படியான திட்டங்களுடன் அறிமுகமான நானோ கார் நடுத்தர வர்க்க மக்களின் வரப்பிரசாதமாக மாறியது.
2003ம் ஆண்டு, ரத்தன் டாடா தங்கள் நிறுவனம் மலிவு விலை கார்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். 2006ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம், பாட்னாவில் இருந்து 50 கிமீ தொலைவில் சுமார் 2000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறுஞ்செய்தி மூலமாகவே நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கினார்.
பின் தொழிற்சாலைகளை எப்போதும் வரவேற்கும் மாநிலமான குஜராத், 2008ல் டாடா தொழிற்சாலைக்கு அனுமதி அளித்தது. அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறுஞ்செய்தி மூலமாகவே நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கினார்.

இறுதியாக 2009ல், டாடா-வின் உலகின் முதல் மலிவு விலை கார் விற்பனைக்கு வந்தது. அடிப்படை வசதிகளோடு 1,12,735 ரூபாயாகவும், மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு 1,70,335 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
2010ல், நாடு முழுவதும் 9000 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அதற்கடுத்து வந்த வருடங்களில் நானோ கார்களின் விற்பனை சரியத் தொடங்கியது. காரணம் நானோ கார்கள் மலிவு விலை கார்கள் என்றே விளம்பரப்படுத்தப் பட்டன. நடுத்தர மக்களை மட்டுமே குறி வைத்து சந்தைப்படுத்தியதால் , மற்ற தரப்பு மக்களுக்கு அது சென்றடையாமல் போனது.
அது மட்டுமன்றி, நானோ கார்கள் பாதுகாப்பற்றவையாக கருதப்பட்டன. 2010ம் வருடமே மும்பை நகரில் புத்தம் புதிய நானோ கார் தீப்பற்றி எரிந்தது. நாட்டின் மற்றும் சில பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன.
இந்த வருடம் நாடு முழுவதும் மொத்தம் 3 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருக்கின்றன.

மலிவாகக் கிடைக்கும் பொருட்கள் தரம் மிக்கதாக இருப்பதில்லை என்ற கூற்றை நிரூபிப்பதாக அமைந்த இந்த சம்பவங்களுக்கு, ரத்தன் டாடா தனது நிறுவனத்தின் சார்பாக பகிரங்க வருத்தம் தெரிவித்தார்.
பின் 2011ல் 500 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. இது படிப்படியாகக் குறைந்து, இந்த வருடம் நாடு முழுவதும் மொத்தம் 3 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருக்கின்றன. குஜராத் தொழிற்சாலையில் ஒரே ஒரு கார் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாடா நிறுவனம், நானோ கார்கள் தயாரிப்பை நிறுத்துவதாகவும், தேவையைப் பொறுத்து உற்பத்தி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஒரு மழை நாளில் தொடங்கிய நானோ-வின் பயணம், இந்த மழை காலத்தில் முடிவுக்கு வந்துள்ளது.