புக்காட்டி நிறுவனம் விலை உயர்ந்த காரைத் தயாரிக்கிறது என்பது ஒன்றும் அத்தனை பெரிய செய்தி இல்லை. அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து கார்களுமே அப்படித்தான். தற்போது விஷயம் அதுவல்ல. அந்த நிறுவனம் லா வோய்ச்சர் நோய்ரே (La Voiture Noire) என்னும் மாடல் காரைத் தயாரிக்க இருக்கிறது. அதுவும் ஒரே ஒரு கார். அதை வாங்கும் நபரின் பெயர்களை நாங்கள் வெளியிடமாட்டோம் என அறிக்கைவேறு அந்நிறுவனத்தின் சார்பில் விடப்பட்டிருக்கிறது.

“லா வோய்ச்சர் நோய்ரே” என்றால் கருப்பு கார் என்று அர்த்தமாம்.
லா வோய்ச்சர் நோய்ரே
1930 களில் புக்காட்டி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டது தான் 57 SC Atlantic கார். மொத்தமே நான்கு கார்கள் தான் இந்த மாடலில் வெளிவந்தன. இன்று உலகின் மிக மதிப்பு வாய்ந்த கார்களில் இந்த 57 SC Atlantic ம் ஒன்று. இன்றைய மதிப்பில் இக்கார்களின் விலை 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் சொன்னால் 352 கோடி!! எதற்காக இவ்வளவு விலை என்றால்? அது புக்காட்டி என்பதைத் தவிர வேறு பதிலில்லை. சரி விஷயத்திற்கு வருவோம். இந்த 57 SC Atlantic மொத்தமே நான்கு தான் தயாரிக்கப்பட்டது என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒன்று பிரான்சின் மீதான ஜெர்மனி படையெடுப்பின்போது அழிந்துவிட்டது.

தற்போது மூன்று கார்கள் மட்டுமே இந்த உலகில் மிச்சம் இருக்கின்றன. இதில் ஒன்றன் பெயர்தான் “லா வோய்ச்சர் நோய்ரே”. அப்படியென்றால் கருப்பு கார் என்று அர்த்தமாம். அதனைக் கருப்பு கார் என்றே சொல்லலாம் என்றால் அதற்கும் பதில் அது புக்காட்டியினுடைய கார் என்பது மட்டுமே.
தயாரிப்பு
புக்காட்டி நிறுவனரான இட்டோர் புக்காட்டியினுடைய (Ettore Bugatti) மகன் ஜீன் புக்காட்டி (Jean Bugatti) தான் இந்த 57 SC Atlantic காரை வடிவமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட அதே மாடலைக் கொண்டு உருவாகும் இந்தப் புதிய லா வோய்ச்சர் நோய்ரேவில் 1,500 குதிரைத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 16 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

உலகளவில் கார் பிரியர்களின் கவனம் முழுவதும் தற்போது இந்தக்காரை எப்போது புக்காட்டி நிறுவனம் வெளியிடும் என்பதே.