சுவீடனைச் சேர்ந்த பிரபல சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ(Volvo), ஈச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) உடன் இணைந்து மலிவு விலைப் பேருந்துகளைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கும் இப்பேருந்துகள் சொகுசானதாகவும், குளிரூட்டப்பட்டதாகவும் இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விஇ கமர்ஷியல் வாகனங்கள் (VE Commercial Vehicles) என்ற நிறுவனத்தின் மூலம் பேருந்துத் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

மின்னியக்கப் பேருந்து
மின்னாற்றலின் மூலம் (Electric Powered Bus) இயங்கக் கூடிய இப்பேருந்துகளின் பாகங்கள் நைஜீரியா மற்றும் கென்யா நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அசெம்பிளிங் (Assembling) வங்கதேசத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுவதும் மின்னாற்றலினால் இயங்குவதால் மற்ற கார்களைப் போல் புகை வெளியேற்றம் இருக்காது. இம்மாதிரியான பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

பொதுப் போக்குவரத்திற்காக?!!
பொதுப் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆக இருக்கும் இப்பேருந்துகளில் எல்லா சொகுசு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மித மற்றும் கனரகப் பேருந்துகளை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது விஇ கமர்ஷியல் நிறுவனம். இப்புதிய ரக வாகனங்களுக்கான தயாரிப்பிற்காக, 500 கோடி ஒதுக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பசுமைப் பேருந்து
சுற்றுச்சூழல் மாசுபாடுகளைக் குறைக்கும் விதத்தில் இப்பேருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சித்தார்த்தா லால் கூறியிருக்கிறார். இயற்கையைப் பாதிக்காத வகையில் சொகுசான மற்றும் மலிவான கட்டணத்தில் பயணிப்பதற்கு ஏதுவாக இப்பேருந்து திகழும். மேலும், அந்நிறுவனம் தற்போது கட்டுமானம், சுரங்கம் அமைத்தல் போன்ற துறைகளுக்குத் தேவையான வாகனங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் இந்த துறைகள் வளர்ச்சி பெறும் பட்சத்தில், இந்த ரக வாகனங்களின் விற்பனையும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.