வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா ஹேரியர் SUV கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டொயோடா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காருடன் போட்டிபோடும் விதத்தில் இந்தக் கார் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காரின் பிளாட்பார்ம் லேண்ட் ரோவர் காரினைப் போன்றே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டாடா நிறுவனம் எதிர்காலத்தில் உருவாக்கும் SUV கார்கள் அனைத்தும் இதே பிளாட்பார்மில் தான் வெளிவர இருக்கின்றன.

ஃபார்ச்சூனருக்கு போட்டியா?
இந்தக் காரில் 140 BHP பவரைத் தரக்கூடிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபியட் நிறுவனத்தின் இந்த எஞ்சின் 320 NM டார்க் திறனை வெளிப்படுத்த வல்லது. இதற்கான பிரத்யேக மேனுவல் கியர்பாக்ஸ் ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்ச்சூனரை விடக் குறைந்த விலை என்பது கூடுதல் சிறப்பு. எனவே ஃபார்ச்சூனருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கைகள் ஆகிய சிறப்பம்சங்கள் வாடிக்கையாளரிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.
எப்போது விற்பனை ?
5 பேர் இருக்கைகளைக் கொண்ட எடிஷன் தாம் முதலில் விற்பனைக்கு வருகிறது. பின்னர் அதே வசதிகளுடன் 7 பேர் அமரக்கூடிய கார் வேறு பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. டாடா – வின் இப்புதிய ஹேரியார் சந்தையில் ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ஹூண்டாயின் கிரீட்டோ ஆகிய கார்களுடன் போட்டி போடும். அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு இக்கார் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பலதரப்பட்ட சாலைகளிலும் டாடா ஹேரியர் கார் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
