சாலை விதிகளை மதிக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் இருப்பதில்லை. சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவே இம்மாதிரியான விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஐந்து நிமிடத் தாமதத்திற்குப் பயந்து விதிகளை மீறும் பலர் விபத்துகளில் சிக்குவதை நாம் பார்த்திருக்கிறோம்.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சாலை விதிகளை மதித்தல் நேரவிரயம் என்னும் தவறான மனநிலை பலரிடத்தில் உள்ளது. சிறிய சிறிய விதிமீறல்கள் கூட வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்தக்கூடும். இதைத் தடுக்கவே போக்குவரத்துத் துறையால் கொண்டுவரப்பட இருக்கிறது ஸ்மார்ட் லைசன்ஸ்(Smart License) திட்டம்.

ஸ்மார்ட் லைசன்ஸ்
இனி ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஸ்மார்ட் லைசன்ஸ் அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிப் (Chip) போன்ற ஸ்மார்ட் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் ஓட்டுனரின் தகவல்கள் போன்றவை அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட் கார்டு போக்குவரத்துத்துக் காவல்துறையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

குற்றப் பத்திரிக்கை
இனிவரும் காலங்களில் இந்த ஸ்மார்ட் லைசன்ஸ் மூலம் சாலை விதிமீறல்களைக் குறைக்க முடியும் என்கின்றனர் காவலர்கள். சாலை விதிகளை மீறும் ஒருவரின் லைசன்ஸ் காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் ஓட்டுநர் புரியும் விதிமீறல் குறித்த விவரங்களைக் கணினி மூலமாக ஸ்மார்ட் கார்டுக்கு அனுப்புவார்கள். அதன் பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

குறையுமா குற்றங்கள்?
யாரும் கவனிக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் தான் பலரை விதிமீறல்களைச் செய்ய வைக்கிறது. மேலும், சிறு குற்றங்கள் தானே என்ற அலட்சியமும் இதில் ஈடுபடவைக்கிறது. இம்மாதிரியான திட்டங்கள் ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வை அளிக்கும். மேலும், தவறுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால் லஞ்சம் தவிர்க்கப்படும். வாகன ஓட்டிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் ஓட்டுனர்களின் தவறுகள் குறையும் என்கிறார்கள் போக்குவரத்துத் துறை ஆய்வாளர்கள். சாலை விதிகள் நமது நல்வாழ்விற்கானவை என்கிற புரிதலே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.